Published:Updated:

ஈஸி பிசினஸ்.. எக்ஸ்ட்ரா வருமானம்!

இந்து
பிரீமியம் ஸ்டோரி
இந்து

பிசினஸ்

ஈஸி பிசினஸ்.. எக்ஸ்ட்ரா வருமானம்!

பிசினஸ்

Published:Updated:
இந்து
பிரீமியம் ஸ்டோரி
இந்து

குடும்பத்தில் சில காரணங்களால் வருமானக் குறைவால் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறபோது நிறைய பேர் செய்வது கடன் வாங்குவதுதான். ஆனால், ஒருசிலர்தான் கூடுதல் வருமானத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த இந்து.

இந்து
இந்து

புடவை டிசைனிங், அழகுக் கலை, ஜுவல் மேக்கிங், மிதியடி (மேட்) தயாரிப்பு, செட்டிநாடு உணவு, சமையல் மசாலா தயாரிப்பு எனச் சுற்றிச் சுழல்கிறார் இந்து. குடும்ப வருமானத்தை உயர்த்த தான் எடுத்துக்கொண்ட முயற்சி, அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

ரியல் எஸ்டேட்டில் முடங்கிய பணம்...

“ஊரில் நாங்கள் பெரிய குடும்பம். வசதி வாய்ப்புகளோடு இருந்தோம். என் கணவர் காசிலிங்கம் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். தொழில் ஓரளவு நன்றாகப் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார் என் கணவர். பிரமாண்ட நகர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் லே அவுட் ஒன்றைப் போட்டு விற்பனைக்கான முயற்சி எடுத்தார். அந்தப் பெரிய முயற்சியில் ரூ.60 லட்சம் வரை முடங்கிப்போனது. குடும்பத்தில் பெரிய அளவில் பணச் சிக்கல் உருவான காலகட்டம் அது. அதன் பிறகு, பல சிக்கல்களால் தொழில் டல்லடிக்க ஆரம்பித்தது.

என் மகன் பிறந்திருந்த நேரம் அது. மருத்துவச் செலவுகளுக்கே சிரமப்பட்டோம். எனக்கு சிசேரியன் செய்திருந்த நிலையில் ஓய்வெடுக்க வேண்டிய தருணம். ஆனால், குடும்ப வருமானத்தை உயர்த்த ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் எனக்குள் இருக்கும் தொழில் திறன் அனைத்தையும் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஜுவல் மேக்கிங், புடவை டிசைனிங் என இரவு பகலாக வேலை செய்ய ஆரம்பித்தேன்.

ஒருமுறை பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றபோது விதவிதமான டிசைன்களில் மிதியடிகளைப் பார்த்தேன். சற்று நேரம் மிதியடி வாங்க வந்தவர்களைக் கவனித்தேன். அவர்களில் நிறைய பேர் விலையைப் பார்த்துவிட்டு வாங்காமல் சென்றார்கள். ‘கால் துடைப்பதற்கு சிம்பிளா இருந்தா போதுமே’ எனத் தன் மகளிடம் ஒரு அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். குறைந்த விலையில் கிடைக்கும் சாதாரண மிதியடிகளுக்கான தேவை அதிகம் இருப்பதை அப்போது உணர்ந்தேன்.

13 மெஷின்களுடன் மிதியடி தயாரிப்பு...

கையில் இருந்த பணத்துடன், பற்றாக்குறைக்கு கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி 13 மெஷின்களுடன் மிதியடி தயாரிப்பு தொழிலில் 2014-ல் இறங்கினேன். மிதியடி தயாரிப்பு குறித்த பயிற்சியை எடுத்துக்கொண்டேன். மெஷின்கள் மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.1.5 லட்சம் செலவானது. அருகில் உள்ள பெண்களுக்கு நானே பயிற்சி தந்து வேலைக்கு அமர்த்தினேன்.

மிதியடி தயாரிப்புக்கான மூலப்பொருளை மதுரை, ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களிலிருந்து வாங்கினேன். மூலப்பொருளின் தரத்தைப் பொறுத்துதான் மிதியடி தயாரிப்பில் லாபம் பார்க்க முடியும். உபயோகமற்ற கழிவுகளைக் கலந்து சிலர் ஏமாற்றிவிடுவார்கள். ஆரம்பத்தில் எனக்கும் மூலப்பொருள் வாங்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. பிறகுதான் தரமான மூலப்பொருள்களை எங்கே எப்படி வாங்குவது என்கிற நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

மிதியடி தயாரித்து மார்க்கெட் செய்வதும் போகப்போக எனக்கு அத்துப்படியாகி விட்டது. அனைத்து வேலை களையும் ஒற்றை ஆளாகத்தான் செய்கிறேன். கூடுதல் வேலை இருக்கும்போது என் கணவர் அவ்வப்போது உதவுவார்.

ஈஸி பிசினஸ்.. எக்ஸ்ட்ரா வருமானம்!

மாதம் ரூ.20,000 வருமானம்...

என்னிடம் பணிபுரியும் 25 பேர் அவரவர் வீட்டிலிருந்தே மிதியடி தயாரிக்கிறார்கள். அவர்களின் வீட்டிலேயே மிதியடி தயாரிப்பு இயந்திரத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட எல்லா செலவுகளும் போக மிதியடி ஒன்றுக்கு ஆறு ரூபாய் லாபம் கிடைக்கும். மூலப் பொருளின் தரத்தைப் பொறுத்து இந்த லாபம் கூடுதலாகவும் கிடைக்கும். மாதத்துக்கு ரூ.20,000-க்கு மேல் குடும்பத்துக்கு கூடுதல் வருமானத்தை மிதியடி தயாரிப்பு மூலம் பெற முடிகிறது.

பல்வேறு தொழில்களுக்கான பயிற்சியாளராகவும் இருப்பதால் அவ்வப்போது இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆறு நாள் பயிற்சி அளிக்க 6,000 ரூபாய் என்ற அளவில் கிடைக்கும். இரண்டு, மூன்று மாத இடைவெளியில் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு அமையும்.

குழந்தைகள் படிப்புக்காக 2017-ல் மதுரைக்கு குடிபோனோம். ஆனாலும், அங்கே இருந்தபடியே தொழிலை சுணக்கம் இல்லாமல் நடத்திவருகிறேன். பொது வாகவே, தொழில் ஆரம்பிக்கும்போதுதான் சில சிரமங்கள் அதிகமாக இருக்கும். சரியான நெட்வொர்க்கை அமைத்துவிட்டால், நாம் எங்கே இருந்தாலும் ஒருங்கிணைத்து பிசினஸை சுலபமாகச் செய்ய முடியும் என்பது என் அனுபவம்.

என் மகள் ஷிவானியை சட்டம் படிக்க வைத்துள்ளேன். மகன் ப்ளஸ் டூ படிக்கிறான். மாவட்ட அளவிலான கிரிகெட் பிளேயராக அவனை உருவாக்கியுள்ளேன். கடன் வாங்காமல் குழந்தைகளை ஆளாக்கத் தேவையான செலவுகளை எல்லாம் என் வருமானத்தைக் கொண்டு செய்கிறேன்.  

கடந்த ஓராண்டுக் காலமாக சமையல் மசாலா பொடிகளை பாரம்பர்ய சுவையுடன் தயாரித்து எஸ்.எஸ்.எம் என்ற பிராண்டில் தென்மாவட்டங்களில் மார்க்கெட் செய்து வருகிறேன். இதில் பெரிய அளவில் வருமானத்தை எட்டும் சூழல் இன்னும் உருவாகவில்லை என்றாலும் வெற்றிக்கான வெளிச்சத்தை என்னால் உணர முடிகிறது.

சிறந்த தொழில்முனைவோருக்கான விருது, பாராட்டுகளை சில அமைப்புகள் எனக்கு வழங்கியுள்ளது. இதையெல்லாம் என் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். அழகுக் கலை என்றாலும் சரி... மசாலா தயாரிப்பு என்றாலும் சரி... எனக்குத் தெரிந்த வித்தைகள் அத்தனையையும் வருமானத்துக்கான வாய்ப்புகளாக மாற்றும் உத்திகளை நான் தெரிந்துகொண்டதால்தான் என்னால் ஈஸியா ஜெயிக்க முடிந்தது” என்றார் இந்து.

இன்னொரு வருமானத்துக்கான வாய்ப்புகள் நம் கண்முன்னேதான் நிறைந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து துணிச்சலாகக் களம் இறங்கினால் பணக் கஷ்டத்தைக் கடந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்!

குறிப்பு: இவரைப் போன்று நீங்களும் எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக பிசினஸ் அல்லது பகுதிநேர வேலையை வெற்றிகரமாகச் செய்துவருகிறீர்களா..? உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com மெயில் முகவரிக்கு எழுதுங்கள்.