Published:Updated:

`உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடு இந்தியா!' - நம்பிக்கை தரும் 'திங்க் டேங்க்' ஆய்வறிக்கை

Representational Image
Representational Image

பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது இந்தியா.

அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனமான 'திங்க் டேங்க்' நிறுவனம், '2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம்... மீட்புப் பாதையில் செல்கிறதா..?

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகப் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தி குறைவு ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தச் சரிவு 7.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

அண்மையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ``இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும், 2020-2021-ம் நிதி ஆண்டுக்காக பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" என்றும் கூறினார். இந்நிலையில் 'திங்க் டேக்' நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அந்த ஆய்வறிக்கையில், 2019-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி 2.94 டிரில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்து இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மக்களின் வாங்கும் சக்தியை ஆய்வு செய்ததில் ஜப்பான், ஜெர்மனி நாடுகளை விட இந்திய மக்கள் அதிகம் வாங்கும் சக்தியுடன் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியின் மூலம் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார சுதந்திரம், தனியார் மயமாக்கல், அந்நிய முதலீடு ஆகியவையே இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது என்றும் அந்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சேவைத் துறைகளின் பங்களிப்பு பிரமிக்கத்தக்க வகையில் அதிகரித்து இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு