Published:Updated:

விஜய் மல்லையா, நிரவ் மோடி விவகாரம்: வங்கிகளிடம் வந்துசேர்ந்த ₹9,371 கோடி; மீதியும் கிடைக்குமா?

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

அமலாக்கத்துறை இதுவரை இவர்களின் ரூ.18,170.02 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கைப்பற்றியிருக்கிறது. வங்கிகள் கொடுத்த கடனான ரூ.22,585.23 கோடியில் இது 80.45% ஆகும்.

இந்திய வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ 9,371 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அரசு வங்கிகளுக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் இவ்வங்கிகள் கொடுத்த கடனில் ஒரு பகுதி கிடைத்திருக்கிறது. இது மோசடியினால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீள்வதற்கு ஓரளவுக்கு உதவும்.

இம்மூவரின் மோசடி குறித்த கதையை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.

அமலாக்கத்துறை இதுவரை இவர்களின் ரூ.18,170.02 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கைப்பற்றியிருக்கிறது. வங்கிகள் கொடுத்த கடனான ரூ.22,585.23 கோடியில் இது 80.45% ஆகும்.

நிரவ் மோடி
நிரவ் மோடி

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன்கீழ் இதுவரை கைப்பற்றப்பட்ட ரூ.18,170.02 கோடியில், ₹9,371 கோடி மதிப்பிலான சொத்து (அதாவது, வங்கிக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் சுமார் 40%) பொதுத்துறை வங்கிகளுக்கே மீண்டும் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

இதுபற்றி ஒன்றிய அரசின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தப்பியோடியவர்களும், பொருளாதாரக் குற்றவாளிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்களுடைய சொத்துக்களும் முடக்கப்பட்டு நிலுவைத் தொகையும் மீட்கப்படும்'’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இம்மூவரும் பொதுத்துறை வங்கிகளை சுமார் ரூ 22,585.23 கோடி அளவிலான மோசடி செய்த வழக்கில் நாடு கடத்தப்படுவதற்கான விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

சி.பி.ஜ முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்த பின்னர், அமலாக்கத்துறை இவர்களுடைய உள்நாட்டு, வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளையும் கடன் வாங்கி மோசடி செய்த பணத்தின் உதவியால் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கியதையும் தனது விசாரணை மூலம் பொது வெளிக்கொண்டுவந்தது. பண மோசடி வழக்கு விசாரணையின் முடிவில் இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்கிற கோரிக்கை பிரிட்டன், ஆண்டிகுவா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், விஜய் மல்லையாவின் நாடு கடத்தலுக்கு வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. இதை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய மல்லையாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இவரை நாடு கடத்துவது என்பது உறுதியாகியிருக்கிறது.

மெஹுல் சோக்ஸி
மெஹுல் சோக்ஸி
`சட்டச் சிக்கல்; அரசியல் அடைக்கலம்!’ - நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்ப விஜய் மல்லையா தீவிர முயற்சி

இந்தியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க லண்டன் சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகளாக இருக்கு நிரவ் மோடியையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வழங்கியிருக்கிறது.

சமீபத்தில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட பிரத்யேக நீதிமன்ற உத்தரவுப்படி, கைப்பற்றப்பட்ட சுமார் ரூ 6,600 கோடி மதிப்புள்ள பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியிருக்கிறது. இந்தக் கூட்டமைப்பின் சார்பாக கடன் மீட்புத் தீர்ப்பாயம் அந்தப் பங்குகளை சுமார் ரூ 5,800 கோடிக்கு விற்றிருக்கிறது. கைப்பற்றப்பட்டு மாற்றப்பட்ட சொத்துக்களில் ஓடிப் போனவர்களின் ரியல் எஸ்டேட்களும், சில நகரும் சொத்துக்களும் அடங்கும்.

ஆக, தப்பியோடிய குற்றவாளிகள் அனைவரும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதற்கும், வங்கிகள் அவர்கள் ஏமாந்த தொகையை முழுவதுமாக பெறுவதற்குமான நாட்கள் அதிகமில்லை என்றே தோன்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு