Published:Updated:

`அவர் சம்பளத்தை உயர்த்த வேண்டாம்!' - எய்ஷர் CEO-க்கு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு; ஏன்?

Siddhartha Lal
Siddhartha Lal ( Photo: Siddhartha Lal / Instagram )

சித்தார்த்தா 30 வயதுக்கு முன்பாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். தற்போது ராயல் என்ஃபீல்டு மட்டும் இல்லாமல் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தையும் பல படிகள் உயர்த்தியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எய்ஷர் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான சித்தார்த்தா லாலின் மறுநியமனமும், அவரின் சம்பள உயர்வும் முதலீட்டாளர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன காரணம்?

எய்ஷர் நிறுவனத்தின் 39-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 17-ம் தேதி நடந்தது. அப்போது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சித்தார்த்தா லாலின் சம்பளத்தை உயர்த்துவதற்கு சிறப்புத் தீர்மானத்தை நிறுவனம் வெளியிட்டிருந்தது. இது போன்ற சிறப்புத் தீர்மானத்துக்கு 75% முதலீட்டாளர்களின் ஒப்புதல் தேவை. ஆனால், 73% முதலீட்டாளர்கள் மட்டுமே ஒப்புதல் வழங்கினார்கள். அதனால் அவர் பதவி விலக வேண்டியிருந்தது.

சித்தார்த் லால்
சித்தார்த் லால்

``கோவிட் காலத்தில் நிறுவனத்தின் எய்ஷர் செயல்பாடு சரியாக இல்லை; தவிர, லாப வரம்பும் குறைந்திருக்கிறது; நிறுவனத்தின் சராசரி சம்பளமும் பெரியளவுக்கு உயரவில்லை. அதனால் சித்தார்த்தாவின் சம்பள உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது" என முதலீட்டாளர்கள் கருதினார்கள்.

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி அவரை மறுநியமனம் செய்து அந்நிறுவனம் உத்தரவிட்டது. கடந்த மே மாதம் 1-ம் தேதியில் இருந்து அவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், சம்பள விகிதத்தில் மாற்றம் செய்து மீண்டும் முதலீட்டாளர்களைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே நிர்வாக இயக்குநரின் சம்பளம் முடிவு செய்யப்படுகிறது. நிறுவனத்தின் நிகர லாபத்தில் 3% வரை சம்பளம் இருக்கலாம் என விதி இருக்கிறது. ஆனால், 1.04% என்னும் அளவில்தான் சித்தார்த்தாவின் சம்பளம் இருக்கிறது. தொகை அடிப்படையில் பார்ப்பதைவிட நிகர லாபத்துடன் ஒப்பிட வேண்டும். அந்த அடிப்படையில் முதலீட்டாளர்களின் கருத்துக்கேற்ப உச்சபட்ச சம்பளத்தை நிகர லாபத்தில் 1.5 சதவிகிதமாக மாற்றி அமைத்திருக்கிறோம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

இதற்கு எய்ஷர் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. `சம்பளம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே உயர்த்தப்பட்டது. சராசரி சம்பளம் என்பது பணியாளர்களின் வருகை மற்றும் வெளியேறுதலுக்கேற்ப மாறுபடும்’ என்றும் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

Eicher Motors
Eicher Motors

2010-ம் ஆண்டு இவரின் ஆண்டு சம்பளம் ரூ.1.06 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த நிதி ஆண்டில் ரூ.21.12 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. நிறுவனத்தை வடிவமைத்ததில் சித்தார்த்தாவின் பங்கு முக்கியமானது.

2000-ம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சித்தார்த்தா பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது அந்த நிறுவனம் நஷ்டமடைந்து மிகவும் சிக்கலான சூழலில் இருந்த நிலையில், அங்கிருந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்பியதில் மிகப் பெரிய பங்கு சித்தார்த்தாவுக்கு உள்ளது. தற்போது இந்தியாவின் முக்கிய பிராண்டாக ராயல் என்ஃபீல்டு உள்ளது.

2006-07-ம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 32,612 வாகனங்கள் மட்டுமே விற்பனையாயின. ஆனால், கடந்த நிதி ஆண்டில் 18 மடங்கு உயர்ந்து 6,09,403 வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. கோவிட்டுக்கு முன்பு அதிகபட்சமாக 8.22 லட்சம் வாகனங்கள் விற்பனையானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக வாகனப் பிரிவில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனமாகச் செயல்பட்டது. இதிலும் பெரிய வளர்ச்சி இருந்தது.

2009-ம் ஆண்டு எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருமானம் ரூ.375 கோடி. கடந்த நிதி ஆண்டு முடிவில் ரூ.8,720 கோடியாக இருக்கிறது. 2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.400 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது ரூ.70,753 கோடியாக இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் 17,500% அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது.

Eicher Trucks
Eicher Trucks
Photo: Eicher Trucks / Vikatan
வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? - 10

சித்தார்த்தா 30 வயதுக்கு முன்பாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். தற்போது ராயல் என்ஃபீல்டு மட்டும் இல்லாமல் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தையும் பல படிகள் உயர்த்தியிருக்கிறார். குறைந்த வயது மற்றும் நிறுவனத்தை மாற்றி வெற்றியடையச் செய்தது உள்ளிட்ட காரணங்களால் மறு நியமனத்தை முதலீட்டாளர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனம் எடுக்கும் முடிவுக்கு, முதலீட்டாளர்கள் மறுப்பே சொல்ல மாட்டார்கள். ஆனால், இப்போது அவர்களும் எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள். டாடா மோட்டார்ஸ் மற்றும் அப்போலோ டயர்ஸ் ஆகிய நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் எதிராக வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு