Published:Updated:

`எலான் மஸ்க்கும் $700 மில்லியனும்..!' - ஊரடங்கிலும் உயரும் டெஸ்லா பங்குகள்

டெஸ்லா
டெஸ்லா

மின்சாரம் மூலம் இயங்கும் கார்களைத் தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனமானது ஆரம்பம் முதலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

உலகப் பொருளாதாரம் சில மாதங்களுக்கு முன் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பின்னர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரங்கள் அனைத்தும் அதல பாதாளத்திற்கே சென்றுவிட்டன. இந்நிலையில் எலான் மஸ்க் பங்குகளின் மூலம் தனது முதல் இழப்பீடு (compensation package )தொகுப்பைப் பெற்றுள்ளார். இதன் மொத்த மதிப்பு $55 பில்லியன் ஆகும். இதற்கு முன்னதாக கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் அனைத்துப் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியையே சந்தித்தன. அப்போது டெஸ்லாவின் பங்குகளும் வீழ்ச்சியை அடைந்தன. ஆனால், தற்போது வீழ்ச்சியடைந்ததை விட இரண்டு மடங்கு கூடுதல் விலையை டெஸ்லா பங்குகள் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லா பங்குகளின் விலையானது வர்த்தகத்தின் முடிவில் $768.21 ஆக அதிகரித்தது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இதன் மூலம் ஆறு மாதம் மற்றும் 30 நாள்களின் முடிவில் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மூலதனமானது (market capitalization) சராசரியாக $100 பில்லியன்களைத் தொட்டுள்ளது என எஸ் &பி க்ளோபல் (S & P global) தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில்தான் டெஸ்லாவின் முதல் காலாண்டு வருவாயானது அதிகரித்தது. இதைத் தொடர்ந்து அதன் பங்குகள் வல்லுநர்களின் கணிப்புகளையும் மீறி ஏற்றத்தைச் சந்தித்தன. இத்தனைக்கும் வெள்ளிக்கிழமை அன்றுதான் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ``பங்குகளின் விலை மிக அதிகமாகவுள்ளது" என வேடிக்கையாக ட்வீட் செய்தார். அந்த ஒரு ட்வீட்டுக்குப் பிறகு மட்டுமே டெஸ்லாவின் பங்குகள் 10.3 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்தன. ஆனால், இது எதுவுமே டெஸ்லா பங்குகளின் விலையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

டெஸ்லா கார் சார்ஜிங்
டெஸ்லா கார் சார்ஜிங்
Image by Blomst from Pixabay

மின்சாரம் மூலம் இயங்கும் கார்களைத் தயாரித்து வரும் டெஸ்லா நிறுவனமானது ஆரம்பம் முதலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அதன் பங்குகளும் உயர்ந்தே காணப்பட்டன. ஏற்கெனவே எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் (Revenue ) மற்றும் சரிசெய்யப்பட்ட லாபத்தின் ( Adjusted Profit) இலக்கை எட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நிறுவனத்தின் குழுவிலிருந்து 1.69 மில்லியன் அளவிலான பங்குகள் எலான் மஸ்கிற்குக் கிடைக்கும். இதில் ஒரு பங்கின் விலையானது $350.02 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வரிக்கு முன்னதான பங்குகளின் மதிப்பானது இன்றைய டெஸ்லா பங்குகளின் விலைப்படி $706 மில்லியனாக இருக்கும். தற்போது வரை எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பானது $39 பில்லியன் என ஃபோர்பஸ் நிறுவனம் தனது மதிப்பீட்டின் படி கூறியுள்ளது.

கடந்த மாதம் டெஸ்லா நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ப்ரீமாண்ட், கலிஃபோர்னியா ஆகிய தொழிற்சாலைகளிலிருந்து நீக்கியது. தற்போது ஏப்ரல் 13 வரை துணைத் தலைவர்கள் மற்றும் அதற்கும் உயர்பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து 30 சதவிகிதம் வரை டெஸ்லா நிறுவனம் குறைத்துள்ளது. அதோடு இயக்குநர்கள் மற்றும் அதற்கு உயர் பொறுப்பில் உள்ளவர்களின் சம்பளம் 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கத் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதம் குறைக்கப்பட்டது. இந்த ஊதியக் குறைப்பானது அடுத்த காலாண்டு முடிவு வரை செல்லக்கூடும் என டெஸ்லா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையிழப்பு நடவடிக்கையானது இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்கக் கூடும் என சிஎன்பிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ஊரடங்கிற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் எலான் மஸ்க். இவர் இந்த ஊரடங்கை சர்வாதிகாரத் தனம் என்றே சாடி வருகிறார். ஆனால், இந்த ஊரடங்கு காலத்திலும் டெஸ்லாவின் பங்குகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்ந்து வருவதால், நிறுவன விதிமுறைப்படி எலான் மஸ்க், $700 மில்லியன் ஊக்கத் தொகை பெறத் தகுதி பெற்றிருக்கிறார். இதனால், வேலைக் குறைப்பும் ஊதியக் குறைப்பும் எந்தவிதமான பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்பதே துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு