Published:Updated:

கருப்பட்டி கடலை மிட்டாய்... கலக்கும் இன்ஜினீயர்! - ஜெயிக்க வைத்த வித்தியாசம்!

கருப்பட்டி 
கடலை மிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டி கடலை மிட்டாய்

வருஷத்துக்கு ரூ.45 லட்சம் டேர்ன் ஓவர் பண்றேன். எல்லா ஊர்லயும் விற்பனைக்கு கொண்டுபோய் சேர்ப்பதே என் ஆசை!

கருப்பட்டி கடலை மிட்டாய்... கலக்கும் இன்ஜினீயர்! - ஜெயிக்க வைத்த வித்தியாசம்!

வருஷத்துக்கு ரூ.45 லட்சம் டேர்ன் ஓவர் பண்றேன். எல்லா ஊர்லயும் விற்பனைக்கு கொண்டுபோய் சேர்ப்பதே என் ஆசை!

Published:Updated:
கருப்பட்டி 
கடலை மிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டி கடலை மிட்டாய்
“பணம் சம்பாதிக்கிறது முக்கியம்தான். ஆனால், நமக்குப் பிடிச்ச வேலையைச் செஞ்சு பணம் சம்பாதிக்கிறது அதைவிட முக்கியம். ஏன்னா, நாம பணம் சம்பாதிக்கிறதே சந்தோஷமா இருக்கத்தானே...” தத்துவமாகப் பேசும் ஸ்டாலின், இன்ஜினீயரிங் வேலையை உதறிவிட்டு ‘கருப்பட்டி கடலைமிட்டாய்’ தயாரிப்பில் கலக்கிக்கொண்டிருக்கிறார். ஓர் அதிகாலையில் நாம் அவரைச் சந்தித்தோம்.

“எனக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி. அப்பா போஸ்டல் கிளர்க்கா இருந்தவர். மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கே உரிய ஆசைகள் எங்க ஃபேமிலிக்கும் இருந்ததால, என்னை இன்ஜினீயரிங் சேர்த்துவிட்டாங்க. ஆனா, எனக்கு அதுல பெருசா ஈடுபாடு இல்லை. ரூ.6 லட்சம் கட்டி படிக்க வைக்கிறாங்க என்ற ஒரே காரணத்துக்காகப் பல்லைக் கடிச்சுக்கிட்டு படிச்சு பாஸ் பண்ணிணேன்.

கருப்பட்டி கடலை மிட்டாய்... கலக்கும் இன்ஜினீயர்! - ஜெயிக்க வைத்த வித்தியாசம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிப்பு முடிஞ்சதும் கோயம்புத்தூர்ல உள்ள எலெக்ட்ரிக் பைக் கம்பெனியில ரிசர்ச் & டெவலப்மென்ட் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் வொர்க்கை என் கண்ணால பார்க்க ஆசைப்பட்டேன். ஆனா, அது நடக்கலை. அதனாலேயே கைநிறைய சம்பளம் கிடைச்சும் அந்த வேலை எனக்குப் பிடிக்கலை. ஒருவித வெறுமையோடையும் மன அழுத்தத்தோடையுமே இருந்தேன்.

இந்தச் சூழல்லதான் என் அண்ணன் மூலமா வாராவாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல கிருஷ்ணகிரி மாவட்டத்துல இருக்கிற குக்கூ காட்டுப்பள்ளிக்குப் போக ஆரம்பிச்சேன். அங்க குழந்தைங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைக் கத்துக்கிட்டேன். குழந்தைங்க, தங்களுக்கு எது பிடிக்குதோ, எது சந்தோஷம் தருதோ, அதை மட்டும்தான் பண்றாங்க. அதுதான் அவங்க மகிழ்ச்சிக்கான காரணம்னு புரிய ஆரம்பிச்சுது. அஞ்சு வருஷமா மன அழுத்தத்தோட பார்த்துக்கிட்டிருந்த வேலையை உடனே ரிசைன் பண்ணிட்டேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்து என்ன பண்றதுன்னு என்கிட்ட எந்த பிளானும் இல்லை. நேராக குக்கூ ஸ்கூல்ல போய் தங்கிட்டேன். ‘நீ ஊருக்கு வந்திரு... நாம இங்க ஏதாவது பிசினஸ் பண்ணலாம்’னு அப்பா, அம்மா கூப்பிட்டாங்க. ஆனா, நான் போகலை. காரணம், அவங்களுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னு தோணுச்சு.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இப்படியான சிந்தனையோட ஒருநாள் என் அண்ணன் பையனுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கலாம்னு போனேன். எதை வாங்குறதுன்னே தெரியலை. ஏன்னா கடைகள்ல இருக்கிற ஸ்நாக்ஸ்கள்ல அவனுக்கு இது நல்லதுன்னு சொல்லி என்னால தைரியமா எதையும் வாங்க முடியலை. அப்போதான் சில வருஷங்களுக்கு முன்ன குக்கூ நண்பர்களோட பெங்களூருல நடந்த ‘எக்கனாமி ஆஃப் ஹேப்பினஸ்’னு ஒரு கருத்தரங்குக்குப் போயிருந்ததும் அதுல குக்கூ சிவராஜ் அண்ணா பேசினதும் நினைவுக்கு வந்துச்சு. “இப்பல்லாம் யாரும் ஒரு பொருளை அதன் பெயரைச் சொல்லி கேட்கிறதில்லை. எல்லோருமே ஃபைவ் ஸ்டார் வேணும், கேட்பரி வேணும்னு தான் கேக்குறோம். இங்க பொருளுக்குன்னு ஒரு வேல்யூ இல்லாம போயிருச்சு. நம்ம தலைமுறையிலிருந்த ஒரு நல்ல திண்பண்டம்கூட இன்னைக்கு கிடையாது”ன்னு அவர் பேசினது மண்டையில அப்படியே தங்கியிருந்தது. அப்பப்போ அந்த வார்தைகள் மூளைக்குள்ள எதிரொலிக்கும்.

இந்த நிலையில ஒருநாள் அவர் திடீர்னு என்னைக் கூப்பிட்டு, ‘டேய், நீ ஒரு நல்ல கடலை மிட்டாய் பண்ணுடா’’ன்னு சொன்னார். ஆனா, நான் கடலைமிட்டாய் நல்லா சாப்பிடுவேனே தவிர, எனக்கு அதைச் செய்யத் தெரியாது. ஆனாலும், அவர் சொன்னது நல்ல ஐடியாவா இருந்துச்சு. ‘‘சரிண்ணா’’ன்னு சொல்லிட்டு ஊருக்குக் கிளம்பிட்டேன். தினமும் ஊரைச் சுத்தி இருக்கிற கடைத் தெருவுகளுக்குப் போய் பை நிறைய கடலை மிட்டாய்களை வாங்கிட்டு வந்து சாப்பிட ஆரம்பிச்சேன். நல்ல கடலை மிட்டாய் சாப்பிட்ட திருப்தி வரலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1960-களில் கருப்பட்டியிலதான் கடலை மிட்டாய் செஞ்சாங்கன்னு இன்டர்நெட்ல படிச்சு குக்கூ சிவராஜ் அண்ணாகிட்ட சொன்னேன். ‘‘அப்புறமென்ன, அதையே பண்ணிரு’’ன்னு சொன்னார். ஆனா, வெல்லம் கிலோ 42 ரூபா, கருப்பட்டி கிலோ 300 ரூபா. விலை அதிகங்கிறது ஒருபக்கம் இருந்தாலும், கருப்பட்டியில கடலை மிட்டாய் எப்படிச் செய்றதுன்னு தேடிப் பார்த்தேன். கடைசியில கழுகுமலை ஏரியாவுல கருப்பட்டியில ஸ்பெஷல் கடலை மிட்டாய் செஞ்சு வெளி நாட்டுக்கு அனுப்புவாங்கன்னு கேள்விப்பட்டு, அங்கே போய் தேடிப் பார்த்தேன். அங்கேயும் ஏமாற்றம். அந்த மாஸ்டர்களெல்லாம் இப்போ இல்லைன்னு சொல்லிட்டாங்க.

கருப்பட்டி 
கடலை மிட்டாய்
கருப்பட்டி கடலை மிட்டாய்

ஒருகட்டத்துல இது வொர்க்அவுட் ஆகாதுன்னு நெனைச்சு அதை மறக்கத் தயாராயிட்டேன். அப்போதான் பெங்களூர்ல நான் தங்கியிருந்து படிச்சப்போ என்கூட தங்கியிருந்த ஒருவர், ‘என் அப்பா தஞ்சாவூர்ல கடலை மிட்டாய் செய்யறார். ஆனா கருப்பட்டியில செய்யலை; வெல்லத்துலதான் செய்யுறாரு. வேணுமின்னா போய் பாரு’ன்னு அனுப்பினார்.

நான் உடனே தஞ்சாவூருக்கு பஸ் ஏறினேன். அவரு பேரு கூடலிங்கம். அவங்க கடலை மிட்டாய் பிராண்ட் பேரு ‘கூடலிங்கம் பிரதர்ஸ்.’ நான் அங்கே போய் அந்தக் கடலை மிட்டாயை வாங்கிச் சாப்பிட்டதும் எனக்கு ஒரே ஆச்சர்யம். சின்ன வயசுல நான் சாப்பிட்ட அதே டேஸ்ட். இதே பக்குவத்துல கருப்பட்டில செஞ்சா இன்னும் சுவையா இருக்கும்னு தோணுச்சு.

என் ஐடியாவை கூடலிங்கம் ஐயாகிட்ட சொன்னேன். ‘‘தம்பி, அதெல்லாம் வேலைக்கு ஆகாது’’ன்னுட்டார். ஆனா, நான் விடுறதா இல்லை. அடிக்கடி போயி அவரை நச்சரிச்சுக் கிட்டே இருந்தேன். கடைசியில வெறுத்துப் போய், எனக்காகக் கருப்பட்டில கடலை மிட்டாய் செஞ்சு பாக்க ஓகே சொல்லி செஞ்சார். ஆனா, அது ஒழுங்கா வரல. திரும்பவும் செஞ்சு பார்த்தார். இப்படி நாலஞ்சு முறை செஞ்சு பார்த்தப்ப ஒரு பதம் வந்துச்சு. ‘இந்தாப்பா, அவ்வளவுதான். இதை வச்சுக்கிட்டு நீ கடலை மிட்டாய் செஞ்சிக்கோ’ன்னு என்னை அனுப்பி வச்சுட்டார்.

குடும்ப உறுப்பினர்கள்தாம் அதிக வேலைகளைச் செய்றோம். நாமளே ஆத்மார்த்தமா பண்ணும்போதுதான் நம்ம குழந்தைகளுக்கு செய்யுறதைப்போல பக்குவமா செய்ய முடியும்!

அதை நண்பர்களுக்கு ஆளுக்கு ஒரு கிலோ அனுப்பி வெச்சேன். சாப்பிட்டுப் பார்த்துட்டு எல்லாரும் நால்லா இருக்குன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு, நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்களையெல்லாம் எங்க அம்மாகிட்ட சொல்லி செய்யச் சொன்னேன். அவங்க தொடர்ந்து முயற்சி பண்ணினாங்க. ஒவ்வொரு முறையும் தோல்விதான். ஆனா, விடாம முயற்சி செஞ்சோம். சில மாசத்துக்குப் பிறகு, அம்மாவின் கைமணத்துல கருப்பட்டி கடலை மிட்டாய் பக்காவா வந்திருச்சு. அப்போவே அதற்கு ‘மதர் வே’ன்னு பெயர் வச்சேன்.

அடுத்ததா அதை எப்படி மார்க்கெட் பண்றதுன்னு யோசிக்கும்போது குக்கூ பள்ளிக்கூடத்துல உள்ள ஒரு அண்ணா அழகான பேக்கிங்கை வடிவமைச்சுக் கொடுத்தார். என்னுடைய புராடக்ட் இந்தளவுக்கு ரீச் ஆனதுக்கு மிகப்பெரிய காரணம் பேக்கிங்தான்.

அதுக்குப் பிறகு மார்க்கெட்டிங். இதை எங்கே போய் விற்கணும்னு எனக்குத் தெரியலை. ஃபேஸ்புக்ல ஒரு பேஜ் ஆரம்பிச்சு என்னுடைய முயற்சிகளைப் பத்தி எழுதினேன். அதைப் படிச்சுட்டு நிறைய பேர் கேட்டாங்க. கூரியர்ல அனுப்பி வெச்சேன். அவங்களுக்கு இந்த டேஸ்ட் ரொம்ப பிடிச்சுப்போக, அவங்களுக்கு பக்கத்துல இயற்கை அங்காடி உரிமையாளர்களிடம் நான் தயாரிக்கிற கருப்பட்டி கடலைமிட்டாயை வாங்கி விற்பனை செய்யுங்கன்னு ரெஃபர் பண்ணாங்க. அதன் தொடர்ச்சியா கடைகளுக்கும் அனுப்ப ஆரம்பிச்சோம்.

அடுத்தகட்டமாக www.motherway.in என ஒரு வெப்சைட் ஓப்பன் பண்ணி இந்தியா முழுவதும் விற்பனையை ஆரம்பிச்சேன். இந்த லாக்டெளன் காலத்துல வெப்சைட் வழியா நிறைய ஆர்டர்கள் வந்துச்சு. மிகுந்த சிரமத்துக்கு இடையிலேயும் அவங்களுக்குப் பொருள்களை அனுப்பி வச்சோம். இப்போ பொரி உருண்டை, கறுப்பு எள்ளுருண்டை, வெள்ளை எள்ளுருண்டை, ஆளிவிதை உருண்டை ஆகிய திண்பண்டங்களையும் கருப்பட்டியில செய்ய ஆரம்பிச்சிருக்கோம்.

இன்னும் இதை மெஷின்ல பண்ணணும்னு நான் நினைக்கவே இல்லை. ஒரு பொருள்ல மனித உழைப்பு அதிகம் இருக்கணும்கிறதுதான் என் கொள்கை. அதேவேளையில வெளி ஆள்களை வெச்சு பண்றதிலயும் எனக்கு உடன்பாடு இல்லை. நான், என் மனைவி, அம்மா, அப்பான்னு எங்க குடும்ப உறுப்பினர்கள்தாம் அதிக வேலைகளைச் செய்றோம். நாமளே ஆத்மார்த்தமா பண்ணும் போதுதான் நம்ம குழந்தைகளுக்கு செய்யுறதைப் போல பக்குவமா செய்ய முடியும்.

இப்ப வருஷத்துக்கு 45 லட்சம் ரூபாய் டேர்ன் ஓவர் பண்றேன். இதை எல்லா ஊர்லயும் விக்கணும்கிறது என் ஆசை. கருப்பட்டி கடலை மிட்டாயை வீட்ல எப்படிச் செய்யணும்னு கேக்குறவங்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் சொல்றேன். காரணம், இது போன தலைமுறை எனக்குக் கொடுத்தது. அதை அடுத்த தலைமுறைக்கு நான் கொடுக்கணும்ல” என்று முடித்தார்.

அவர் கொடுத்த கடலை மிட்டாய் நாவில் நிலைத்திருக்க... அவர் சொன்ன வார்த்தைகள் நம் நெஞ்சுக்குள் குடிகொள்கிறது. கூடிய விரைவில் எல்லோரும் சாப்பிடும் ஒரு திண்பண்டமாகும் இந்தக் கருப்பட்டி கடலைமிட்டாய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism