`அமைப்புசார் பணிகளில் பெண்களின் எண்ணிக்கை அதிரித்திருக்கிறது!' - பணியாளர் வருங்கால வைப்பு நிதி மையம்

புதிய அமைப்புசார் வேலைகளில் சேர்ந்திருக்கும் பெண்களின் சதவிகிதம் செப்டம்பர் மாதம் 26% ஆக உயர்ந்திருக்கிறது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (Employee Provident Fund) முன்பெல்லாம் 22 - 25 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சந்தாதாரர்களாக இருப்பார்கள். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக, அதாவது 38% புதிய பெண் சந்தாதாரர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளார்கள் என்றும், இவர்கள் அனைவருமே 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் பணியாளர் வருங்கால வைப்பு வாரியம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய அமைப்புசார் வேலைகளில் சேர்ந்திருக்கும் பெண்களின் சதவிகிதம் செப்டம்பர் மாதம் 26% ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முன்னர் 18%-22% என்கிற அளவிலேயே இந்த சதவிகிதம் இருந்தது என்கிற தகவலை பணியாளர் வருங்கால வைப்பு வாரியத்தின் சமீபத்திய ஊதியத் தரவு (payroll data) தெரிவிக்கிறது. இந்தத் தகவல் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிற, மற்றும் வேலைக்குச் செல்லும் எண்ணத்தில் இருக்கின்ற பெண்கள் மனதில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 10,47,167 புதிய சந்தாதாரர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர். அவற்றில் 7,74,751 பேர் ஆண்கள். 2,72,395 பேர் பெண்கள்.

இந்தக் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சுகாதாரம் மற்றும் பிறரை கவனித்துக்கொள்வது போன்ற பிரிவுகளில் பெண்களின் பங்கெடுப்பு அதிகரித்துள்ளதால் பேக்கேஜிங் (packaging) மற்றும் வசதிகள் மேலாண்மை சேவைப் பிரிவு (facility management service sector) போன்ற துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக இந்தியப் பணியாளர் கூட்டமைப்பின் இயக்குநர் சுசிதா தத்தா கூறுகிறார். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் பெருமளவில் தங்களது சொந்த கிராமத்திற்குத் திரும்பியதும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதற்கான ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
பேக்கேஜிங் மற்றும் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் சமீபகாலமாகப் பெண்களை அதிக அளவில் பணியமர்த்துகின்றன. மேற்சொன்ன இந்த இரண்டு பிரிவுகளிலும் முன்பெல்லாம் 5% - 6% வரை மட்டுமே இருந்த பெண் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்து ஏழு மாதங்களாக 11% - 12% ஆக அதிகரித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.