Published:Updated:

தொழில் நிறுவனங்களை சமூக அக்கறையுடன் செயல்பட வைக்கும் இ.எஸ்.ஜி..!

இ.எஸ்.ஜி
பிரீமியம் ஸ்டோரி
இ.எஸ்.ஜி

சுற்றுப்புறச் சூழல்

தொழில் நிறுவனங்களை சமூக அக்கறையுடன் செயல்பட வைக்கும் இ.எஸ்.ஜி..!

சுற்றுப்புறச் சூழல்

Published:Updated:
இ.எஸ்.ஜி
பிரீமியம் ஸ்டோரி
இ.எஸ்.ஜி

பருவநிலை மாற்றம் குறித்து உலக அளவில் பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களும் சுற்றுப் புறச்சூழலுக்கு இணக்கமாகத் தங்களது தொழில் நடவடிக்கைகளை வடிவமைத்துக் கொள்ள ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க முன்னெடுப்பாகும்.

சுற்றுப்புறச்சூழலுக்கும் சமூகத்துக்கும் இணக்கமாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகப் பல தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றன. 2010-ம் ஆண்டில் தேசிய பசுமை வாரியம் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், அது வரையறுத்த பல விதிகளைப் பின்பற்ற பல தொழில் குழுமங்கள் அக்கறை காட்ட வில்லை. ஆனால், இன்றைக்கு நிலைமை கொஞ்சம் மாற ஆரம்பித்திருக்கிறது.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

கவனத்துக்கு உள்ளாகும் இ.எஸ்.ஜி...

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு (Environment sustainability) முன்னுரிமை கொடுக்கும் பட்சத்திலும், தொழில் குழுமங்கள் லாபம் ஈட்டமுடியும் என்பதற்கு உதாரணமாகப் பல நிறுவனங்கள் இருந்து வருகின்றன. இப்போது இ.எஸ்.ஜி (Environmental, Social and Governance) என்பது தொழில்துறை மட்டுமல்லாமல் முதலீட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், அரசாங்கங்கள் என அனைத்துத் தரப்பினரின் தாரக மந்திரமாக இருந்துவருகிறது. இன்றைக்கு இந்தியாவில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இ.எஸ்.ஜி மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன.

இ.எஸ்.ஜி-யின் 3 முக்கியமான விஷயங்கள்...

இ.எஸ்.ஜியைப் பொறுத்தவரை மூன்று முக்கியமான விஷயங்கள் கருத்தில் கொள்ளப் படுகின்றன. ஒன்று, தொழில் நிறுவனம் பொருள் உற்பத்திக்கென நுகரும் இயற்கை வளங்கள், உற்பத்தி செயல்பாட்டின்போது எவ்வளவு கழிவை வெளிவிடுகின்றன, அதனால் ஏற்படும் மாசு, அது உபயோகிக்கும் எரிசக்தி, உற்பத்தியின்போது அதன் மூலம் வெளியேறும் கார்பனின் அளவு, பருவநிலை மாற்றத்துக்கு அதன் பங்களிப்பு, நிறுவனத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் ஆகிய பல காரணிகளின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக நிறுவனம் இருக்கிறதா, இல்லையா என அளவிடப்படுகிறது.

இரண்டாவதாக, சமூகத்துக்கு நிறுவனம் எந்த அளவு நன்மை அளிக்கிறது, தொழிற் சாலையில் வேலை நிலைமை எப்படியிருக்கிறது, சப்ளையர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இணக்கமாக இருக்கிறதா எனப் பல காரணிகளை இது உள்ளடக்கியிருக்கிறது.

மூன்றாவதாக, ஆளுகை. அதாவது, ஒரு தொழில் நிறுவனத்தின் அமைப்பு முறைகள் (சிஸ்டம்ஸ்), செயல்பாடுகள், தணிக்கைக் கட்டுப்பாடுகள், மூத்த அதிகாரிகளுக்கான சம்பளம் குறித்த அணுகுமுறை, இயக்குநர்களின் செயல்பாடு சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறதா போன்றவை இதில் அடங்கும்.

தொழில் நிறுவனங்களை சமூக அக்கறையுடன் செயல்பட வைக்கும் இ.எஸ்.ஜி..!

அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் முன்மாதிரி நடவடிக்கை...

ஒரு தொழில் நிறுவனமானது இ.எஸ்.ஜி சார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளைப் பெறுவதுடன், முதலீட்டாளர்களும் இந்த மாதிரியான நிறுவனங்களில் முதலீடு செய்ய முன்வரு கிறார்கள். அத்துடன், வாடிக்கையாளர்களும் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் அல்லது வழங்கும் சேவைகளை விருப்பத்துடன் வாங்குகிறார்கள்.

குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனால் நிராகரிக்கப்பட்ட கனிமக் கழிவை அதற்கு அருகில் இயங்கிவரும் அம்புஜா சிமென்ட் அதனுடைய தொழிற் சாலையில் செயல்பட்டுவரும் சூளைகளின் உருகும் வெப்பநிலை அளவைக் குறைக்கப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் அதனுடைய எரிசக்தி நுகர்வு 3% குறைந்ததுடன், அந்தத் தொழிற்சாலையின் ஒரு யூனிட்டில் மட்டும் இதனால் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சேமிக்கப்படுகிறது. உற்பத்தி அதிகரித்தால், இந்தச் சேமிப்பும் அதிகமாகும் என அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

அது போல, சிமென்ட் தொழிற்சாலை இயங்கும் இடத்தைச் சுற்றி தூசியும், காற்று மாசும் ஒரு பிரச்னையாக இருப்பதுடன் தொழிற்சாலை இயந்திரங்களும் அடிக்கடி கெட்டுப் போவதுண்டு. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அம்புஜா சிமென்ட் அதிக மூதலீட்டில் தூசிக் கட்டுப்பாடு உபகரணம் ஒன்றை நிறுவியது அதன்பின் இயந்திரங்கள் கெட்டுப்போவது குறைய ஆரம்பித்ததுடன், சுற்றுப்புறமும் தூய்மையானது.

தண்ணீர் இன்றி பாட்டில்களைக் கழுவும் தொழில்நுட்பம்...

பெப்சிகோவின் மேனாள் தலைவர் இந்திரா நூயியின் சுயசரிதை நூல் `மை லைஃப் இன் ஃபுல் (My Life in Full)’. சில மாதங்களுக்கு முன்பு வெளியானபோது இ.எஸ்.ஜி என்கிற விஷயம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் புத்தகத்தில் அவர், பெப்சிகோ தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் பைங்குடில் வாயுவை (Greenhouse gas) குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தண்ணீர் உதவியின்றி பாட்டில்களை கழுவக்கூடிய தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டது, சோடா பாட்டில்களுக்கு மறுசுழற்சியாக பிளாஸ்டிக்கை உபயோகிக்க ஆரம்பித்தது ஆகியவை பற்றி குறிப்பிட்டிருப்பதுடன், நாம் வாழும் கிரகத்தின் `ஆரோக் கியத்தை’ மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்ததாக இந்திரா நூயி சொல்லியிருந்தார்.

புதுமைகளைச் செய்த மாரிகோ...

இந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று மாரிகோ (Marico) ஆகும். இந்த நிறுவனம் 2019-20-ம் ஆண்டில் இதன் வருமானம் சுமார் ரூ.7,315 கோடி. இதனுடைய கூட்டு வருடாந்தர வளர்ச்சி விகிதம் 26%. ‘‘இந்த நிறுவனத்தின் வெற்றியானது அதனுடைய கூட்டாளிகளான நுகர்வோர்கள், பங்குதாரர்கள், சப்ளையர்கள், விநியோகஸ்தர்கள், ஒட்டுமொத்த சமூகம் எனப் பலரின் வாழ்விலும் `மாற்றத்தை ஏற்படுத்துவது’ என்கிற பண்புகளையும் கடமை யையும் அடிப்படையாகக் கொண்டது’’ என அதன் நிறுவனர் மாரிவாலா கூறுகிறார்.

பிஎஸ்இ-100 பட்டியலில் இருக்கும் நிறுவனங்களில் 2019-ம் ஆண்டு சிறந்த ஆளுகைக்கான (Best Governance) முதல் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக மாரிகோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அது போல, `தி க்ரேட் ப்ளேஸ் டூ ஒர்க் இன்ஸ்டிடியூட்’ ஆண்டு தோறும் நடத்தும் ஆய்வு அறிக்கையிலும் இந்த நிறுவனம் இடம்பெற்றது. இது போல, நிலைத்தன்மை, தரம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பல விருதுகளைத் தொடர்ந்து பெற்று வருகிறது.

இந்த நிறுவனம் அதற்குத் தேவையான வேளாண் பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்குவதுடன், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் அது சம்பந்தமான பயிற்சி களையும் தொடர்ந்து அளித்துவந்து அவர்களை அதிகாரமுள்ளவர்களாக ஆக்குகிறது.

அது போல, தேங்காய் விளைவிக்கும் விவசாயி களுக்கும் அறிவியல் முறையிலான வேளாண் நடைமுறைகளை நிறைவேற்ற உதவி வருகிறது. சூரிய காந்தி விளைச்சல் செய்பவர்களுக்குத் தேவையான விதை அபிவிருத்தி, பரிசோதனை, விளைச்சலை எப்படி அதிகரிப்பது, ஒப்பந்த அடிப்படையின் மூலம் விலையை உறுதி செய்வது போன்ற காரியங்களையும் தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிலைத்தன்மை நடைமுறைகளை அது தன்னுடைய பிசினஸ் உத்தியோடு ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.

தொழிற்சாலையில் சூப்பர்வைசர் நிலையில் வேலை பார்ப்பவர்கள் வரை அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி இந்த இ.எஸ்.ஜி சம்பந்தமான காரணிகளுடன் இணைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், அனைவருக்கும் தானாகவே சமூகத்தின் மீதும் சிறந்த ஆளுகையின் மீதும் அக்கறை உண்டாகி விடும் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாகம் நம்புகிறது. இந்தக் குழுமத்தைப் பொறுத்தவரை, இ.எஸ்.ஜி என்கிற கருத்தியல் நிறுவன மயமாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அது மிகையில்லை.

விவசாயப் பயனாளர்களின் எண்ணிக்கையை ஒவ்வோர் ஆண்டும் 5% அதிகரிப்பது, 2012-13 ஆண்டில் இருந்ததைவிட எரிசக்தி உபயோகிப்பை 50% வரை குறைப்பது, பைங்குடில் வாயுவின் வெளியேற்றத்தை அடிப்படை ஆண்டான 2012-13-ல் இருந்ததைவிட 75% வரை குறைப்பது என்பவை 2022-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் சில குறிக்கோள்களாக வைத்துள்ளன.

தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்...

மூன்றாவது உலகப் போர் என ஒன்று ஏற்பட்டால் அது தண்ணீர் பிரச்னையால்தான் ஏற்படும் எனப் பல உலக அமைப்புகள் தொடர்ந்து கூறிவருகின்றன. இது குறித்து மதுரையில் உள்ள சுந்தரம் டெக்ஸ் டைல்ஸின் செயல் இயக்குநர் மிருதுளா ரமேஷ், ‘‘தொழில் நிறுவனங்கள் அதனுடைய தொழில் உத்தியில் தண்ணீர் சம்பந்தமான பிரச்னையையும் நிலைத்தன்மை மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பைக் கூடுதலாகச் சேர்த்துக்கொண்டு, நீர் சார்ந்து இருக்கும் செயல்பாடுகளைக் குறைத்து அதற்கான மாற்று ஏற்பாடுகளின் மீது முதலீடு செய்ய வேண்டும்’ எனச் சொல்லி இருப்பதைத் தொழில் நிறுவனம் அவசியம் கவனித்தாக வேண்டும்.

எனவே, இனிவரும் நாள்களில் தொழில் சார்ந்த முடிவுகள் எடுக்கும் போது சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை சார்ந்த விஷயங்களின் மீது அக்கறை செலுத்தி அதற்கு இணக்கமாகச் செயல் பட்டால் காலப்போக்கில் அது நிறுவனங்களுக்கு நன்மதிப்பையும், முதலீட்டாளர்களின் கவனத்தையும், லாபத்தையும் ஈட்டிக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism