Published:Updated:

`மாநிலங்களுக்குக் கூடுதல் கடன்;ரிவர்ஸ் ரெப்போ வட்டி 0.25% குறைப்பு!’- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரிசர்வ் வங்கி ஆளுநர்

நெருக்கடியான கொரோனா காலத்தில் மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கூடுதலாக 60% கடன் பெற்றுக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் இது சமூகப் பரவலாக மாறியிருப்பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் பலியும் பல மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது வரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,83,692 - ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,870 - ஆகவும் உள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முதல் நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 20-ம் தேதி முதல் சிறு, குறு நிறுவனங்கள் செயல்படலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகந்த தாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “ கொடிய கொரோனா வைரஸ் உலகத்தை இறுக்கிப் பிடித்துள்ளதால் இன்று மனிதக்குலம் கடுமையான சோதனையை எதிர்கொண்டுள்ளது. இந்தக் கடினமான சூழ்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வேகமாகச் செயல்பட்டு நாட்டின் நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது உலகளாவிய வளர்ச்சிக் கணிப்புகளை வெளியிட்டது. அதில் 2020-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் மிகவும் மோசமான மந்த நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

மார்ச் 27-ம் தேதி முதல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிபரப்பு போன்றவை சில பகுதிகளில் மோசமடைந்துள்ளன. ஆனால், மேலும் சில இடங்களில் ஒளி இன்னும் தைரியமாக பிரகாசிக்கிறது. 2020-21-ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 7.4% - ஆக இருக்கும் எனச் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மேலும் அதே ஆண்டில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த இழப்பு 9 ட்ரில்லியன் டாலராக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் மொத்தப் பொருளாதாரத்தை விட அதிகம்.

பணப்புழக்கத்தை அதிகரிக்க, அரசாங்கப் பத்திரங்களை வாங்க முடிவு! - ரிசர்வ் வங்கி அதிரடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது நடக்கும் ஊரடங்குக்கு ‘தி கிரேட் லாக் டௌவுன்’ என்று பெயரிட்டுள்ளார் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார ஆலோசகர். இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் இணையதளப் பயன்பாடு மற்றும் இணையப் பணப் பரிமாற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில் துறையினருக்குக் கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரிசர்வ் வங்கி ஆளுநர்

மாநில அரசுகள் கூடுதல் நிதி பெரும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25% -ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவசரத் தேவைக்கு மாநில அரசுகள் 60% கூடுதலாகக் கடன் பெறலாம். துறைசார்ந்த கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சிறு தொழில்கள் மேம்பாட்டு மற்றும் தேசிய வீட்டுவசதி ஆகியவற்றுக்கு ரூ .50,000 கோடிக்கு சிறப்பு நிதி வசதிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கால் ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு வைரஸ் பரவலைத் தடுப்பதே ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கம். கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர்.

அடுத்த கட்டுரைக்கு