நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!

எவர்கிரீன் தொழில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எவர்கிரீன் தொழில்கள்

முதலீடு ரூ.50,000 - ரூ.4 லட்சம் மாத வருமானம் ரூ.20,000 - ரூ.1 லட்சம்

COVER STORY

கொரோனா ஏற்படுத்திய நேர்மறைத் தாக்கங்களில் ஒன்று, பலரையும் சுயதொழில் தொடங் குவது பற்றி சிந்திக்க வைத்தது. அப்படிச் சிந்தித்தவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஆறு முக்கியமான தொழில்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான கிருஷ்ணா ராதாகிருஷ்ணன்.

கிருஷ்ணா ராதாகிருஷ்ணன்.
கிருஷ்ணா ராதாகிருஷ்ணன்.

100% ஆர்வமும் சிந்தனையும் வேண்டும்...

‘‘நாம் புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்றால், அதற்கான ஆர்வமும் சிந்தனையும் நம் மனதில் 100% இருக்க வேண்டும். நீங்கள் செய்யவிருக்கிற தொழிலைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். பிறகு, அதுதொடர்பான பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால், நீங்கள் தொடங்கவிருக்கிற தொழிலை ஏற்கெனவே செய்துகொண்டிருப் பவர்களிடம் சில மாதங்கள் வேலை பார்க்கவும் செய்யலாம். அப்போது தான் சம்பந்தப்பட்ட தொழிலின் நெளிவுசுளிவுகள் உங்களுக்குத் தெரியும்.

தொழில் தொடங்க அனுமதிகள்...

இது முதல் என்றால், இரண்டாம் படியில், நீங்கள் தொடங்கவிருக்கும் தொழில், நிறுவனத்தின் பெயர், அதற்கான இடம் ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், உங்கள் நிறுவனத்துக்கான திட்ட அறிக்கை (அரசாங்கத்தில் திட்ட அறிக்கைக்கான ஃபார்ம் இணையத்தில் இருக்கிறது. அதை நிரப்பினாலே போதும்.

கடன் தருகிற வங்கிகள் இந்த ஃபார்மையே ஏற்றுக்கொள்கின்றன), நிதி ஆதாரம், அரசு மானியம் பெறுவது (TIIC - தமிழ்நாட்டுத் தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் வாங்கினீர்கள் எனில், அவர்களே மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்களை உங்களுக்கு வாங்கிக் கொடுத்து விடுவார்கள்), நிறுவனத்தைப் பதிவு செய்தல் (இணையத்தில் உதயம் ரெஜிஸ்ட் ரேஷனில் நீங்களே பதிவு செய்ய முடியும்), தொழிலுக்கான இயந்திரங் களை வாங்குதல் (தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னால் நீங்கள் பயிற்சி எடுக்கும்போதே உங்கள் தொழிலுக்காக மூலப்பொருள்களை எங்கு வாங்கலாம் என்பது தெரிந்து விடும். கூடுதல் தகவல்களுக்கு இணையத்திலும் தேடலாம்) ஆகியவற்றைத் தெளிவாகத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

தொழில் திட்டமிடல் அவசியம்...

மூன்றாம்படியாக, நீங்கள் தொடங்கவிருக்கிற தொழில் சிறியதோ பெரியதோ, ‘இரண்டு வருடங்களில் இந்தளவுக்கு என் தொழிலை நிலைநிறுத்தியிருக்க வேண்டும்.

ஐந்து வருடங்களில் இவ்வளவு லாபம் சம்பாதித்திருக்க வேண்டும். ஏழு வருடங்களில் இப்படித் தொழிலை விஸ்தரித்து இருக்க வேண்டும்’ என்பன போன்ற குறிக்கோள்களைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்த விதமான திட்டமிடல் இருந்தால் மட்டுமே நீங்கள் அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற முடியும்.

பல வகையான தொழில்கள்...

தொழில்களை உற்பத்தி, சேவை, வர்த்தகம் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். எல்லாக் காலகட்டங் களிலும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்களாகத் திகழும் தயாரிப்பு சார்ந்த தொழில்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

பழச்சாறு கடை
பழச்சாறு கடை

தேநீர்க்கடை அல்லது பழச்சாறு கடை...

சுவை, சுகாதாரம், மக்களைக் கவர்ந்திழுக்கும்படி கொஞ்சம் வித்தியாசமான பெயருடன் ஆரம்பித்தால், இந்தத் தொழிலில் நிச்சயம் உங்களால் காலூன்ற முடியும். கூடவே மக்கள் புழங்குகிற இடம் அல்லது தேநீர்க்கடைகள் அருகருகே இல்லாத இடமாகப் பார்த்து உங்கள் கடையைத் தொடங்குவது புத்திசாலித்தனம். தேவையான மூலப்பொருள்களை மொத்த விற்பனைக் கடைகளில் வாங்கினால் கணிசமாகப் பணம் மிச்சமாகும்.

ஸ்டீல் மேஜை, கேஸ் ஸ்டவ், மிக்ஸி, பால், டீதூள், காப்பித்தூள், பழங்கள், சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டி ஆகியவை அவசியமான பொருள்கள். கொரோனாவுக்குப் பிறகு, எல்லாருக்குமே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டதால், சர்க்கரை சேர்க்காத ஃப்ரெஷ் ஜூஸ், கருப்பட்டி காபி, நன்னாரி ஜூஸ் எனப் பெயர்ப்பலகை வைத்து விற்பனை செய்வது வெற்றிக்கான யுக்தி. இந்தக் குளிர்பானங்களை எல்லாம் உங்களுக்குச் செய்ய தெரியும் என்றால், பில் போடுகிற இடத்தில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவரையோ, உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரையோ வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அல்லது தேநீர் மற்றும் பழச்சாறுகள் போடத் தெரிந்த மாஸ்டர் ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டால், கல்லாவில் நீங்கள் நின்றுவிடலாம். எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, தேநீர் மற்றும் பழச்சாறுக் கடைகளில் குறைந்தது ஒரு மாதம் நேரடிப் பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.

இந்தத் தொழிலை நீங்கள் சொந்தமாக ஆரம்பிக்க அதிகபட்ச மாக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டி வரும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊரைப் பொறுத்தும் பகுதியைப் பொறுத்தும் முதலீடு வேறுபடலாம்.

உங்கள் கடை அமைந்திருக்கிற இடம், செலவுகள் எல்லாம் போக உங்களுக்கான வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை கிடைக்க வாய்ப்புண்டு!

எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!

டிபன் சென்டர்...

சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைக்கத் தெரிந்தவர்களுக்கான பிசினஸ் இது. கொரோனா உச்சத்தில் இருந்த சென்ற வருடத்தில், ‘இனி வீட்டுச் சமையல் தான்’ என்று முடிவெடுத்த வர்கள்கூட, ஊரடங்கு தளர ஆரம்பித்ததும் உணவுகளை ஆர்டர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அந்தளவுக்கு எப்பேர்ப்பட்ட சூழ்நிலை யிலும் தேவையிருக்கிற தொழில் இது.

உங்களால் முடிந்தால் ஓர் இடத்தை வாடகைக்குப் பிடித்து, சமையல் பாத்திரங்கள், மாஸ்டர், பில்லிங் மெஷின், பேக்கிங் பொருள் கள் என்று கடையை ஆரம்பிக்கலாம்.

இதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். கடை சரியான இடத்தில் அமைந்திருந் தால், செலவுகளெல்லாம் போக குறைந்தபட்சம் ரூ.25,000 வருமானம் வரும். வழக்கமான இட்லி, தோசை, சட்னி, சாம்பார் என்பதுடன் நின்றுவிடாமல், இட்லியுடன் மீன் குழம்பு, ஆப்பத்துடன் ஆட்டுக்கால் பாயா, சப்பாத்தியுடன் வெஜிடேபிள் குருமா, சிறுதானிய அடை என்று உங்கள் கடையின் அடையாளமாகச் சில உணவுகளைத் தீர்மானி யுங்கள். அதற்கான உணவுப் பிரியர்கள் வட்டமே உங்கள் கடைக்கு வாய் வழி விளம்பரம் செய்து தந்துவிடுவார்கள்.

இந்தத் தொழிலைச் செய்ய விரும்புபவர்கள் தயாரிப்பு, விற்பனை என இரு வேலைகளையும் செய்ய முடியாது என்று நினைத்தால், வீட்டிலேயே உதவிக்கு ஆள் வைத்து சமைத்து, ஆன்லைன் சப்ளை மூலமாக வாடிக்கையாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இட்லி
இட்லி

மாவு மில்...

வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துவிட்டதால், மாவு சீக்கிரம் புளிக்காமல் இருப்பதற்கான கெமிக்கல் சேர்க்காத, வீட்டுப் பக்குவத்தில் அரைத்த இட்லி, தோசை மாவைப் பலரும் விரும்பி வாங்கு கிறார்கள்.

சிறிய கடை, நான்கு கிரைண்டர், பாத்திரங்கள், எடை மெஷின், பேக்கிங் செய்வதற்கான உபகரணங்கள்தான் இந்தத் தொழிலுக்காக மூலப்பொருள்கள். தொழில் சீக்கிரம் முன்னேற வேண்டுமென்று நினைப்பவர்கள், சிறுதானிய மாவுகள், அடை மாவு, ஆப்ப மாவு போன்றவற்றையும் அரைத்து வியாபாரம் செய்யலாம்.

தனியாகக் கடை ஆரம்பித்து, வாடகைக் கொடுத்து தொழில் செய்வது சிரமம் என்று நினைப் பவர்கள் வீட்டிலேயே இந்தத் தொழிலைச் செய்யலாம்.

இந்தத் தொழிலை கொஞ்சம் பெரிதாக செய்ய நினைப்பவர்கள், அருகிலுள்ள உணவு விடுதிகள், திருமண கேட்டரிங் ஆர்டர் பிடிப்பவர்கள், ஹாஸ்டல்கள் போன்றவற்றில் ஆர்டர் கேட்டு தொடர்ந்து சப்ளை செய்யலாம்.

இந்தத் தொழிலுக்கு முதலீடாக ரூ.2 லட்சம் தேவைப்படும். நிறைய ஆர்டர்கள் பிடித்தீர்கள் எனில், மாதம் ரூ.50,000 வரை தாராளமாகச் சம்பாதிக்கலாம்.

நீங்கள் தயாரித்தும் விற்கும் மாவை ஏதாவது ஒரு பெயரில் பிராண்டாக மாற்றி விற்பதன்மூலம் தொழிலை நன்கு வளர்க்க முடியும்.

ஆடை வடிவமைப்பு
ஆடை வடிவமைப்பு

ஆடை வடிவமைப்பும் அலங்கார ஜாக்கெட்டுகளும்...

உங்களுக்குத் தையல் தெரியும், குறிப்பாக, ஜாக்கெட் தைக்கத் தெரியும் என்றால், இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். இதுவும் சமையல் போலவே, எப்போதும் தேவை இருக்கிற தொழில்தான். அதனால், நிச்சயம் வெற்றி பெறும்.

அலங்கார ஜாக்கெட்டுகள் தைப்பது தொடர்பான ஒரு கோர்ஸ் முடித்துவிட்டு, இந்தத் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். ரூ.1 லட்சம் - ரூ.2 லட்சம் வரை இந்தத் தொழிலைத் தொடங்க முதலீடு தேவைப்படும். மக்கள் அதிகம்பேர் கூடுகிற இடத்தில் கடையை ஆரம்பிக்க வேண்டும். ஆடை தைப்பதற்கு ஒரு நபரை வேலைக்கு வைத்துவிட்டு, அதை வித்தியாசமாகத் தைப்பதற்கான ஐடியாவை நீங்கள் கொடுங்கள். அப்போதுதான் உங்களிடம் வேலைபார்ப்பவரை நீங்கள் சாராமல் இருக்க முடியும்.

லைனிங் கிளாத், பட்டன், லேஸ், நூல்கண்டுகள், ஊசிகள், ஜாக்கெட்டுகளில் வைத்து தைக்கிற அலங்கார ஆபரணங்கள், மணிகள், கண்ணாடிகள் போன்றவற்றையும் மொத்தமாக வாங்கி உங்கள் கடையில் விற்பனை செய்யலாம். உங்கள் ஏரியாவில் இருக்கிற அழகு நிலையங் களுடன் தொடர்பில் இருந்தீர்கள் எனில், அதிகமான வாடிக்கையாளர் களைக் கவர நிறைய வாய்ப்புண்டு. இந்தத் தொழிலைப் பொறுத்தவரை, குறித்த நேரத்தில் டெலிவரி கொடுக்கும் கடைகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. நிறைய கல்யாண ஆர்டர்களை எடுக்க ஆரம்பித்தீர்கள் எனில், ஒரு மாதத்துக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

ஆயில்
ஆயில்

ஆர்கானிக் சோப் & ஆயில்...

ஆர்கானிக் பொருள்களின் மீதான மக்கள் விருப்பம் கொரோனாவுக்கு அதிகரித்துவிட்டதால், நிச்சயம் வெற்றி பெறுகிற தொழில்களில் இதுவும் ஒன்று. அரசு நடத்தும் பயிற்சி வகுப்பிலோ, தனியார் நிறுவனம் நடத்தும் வகுப்பிலோ கலந்துகொண்டு இதற்கான பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

சோப் அச்சுகள், பேக்கிங் ஐட்டம், சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், உபகரணங்கள், பாத்திரங்கள், மைக்ரோவேவ், மூலிகை எண்ணெய், நறுமணப் பொருள்கள் போன்றவற்றை வாங்க ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். இந்தத் தொழிலுக்கு எனத் தனியாக இடம் தேவையில்லை. வீட்டிலேயே ஓர் அறையை ஒதுக்கிக்கொண்டால்கூட போதும்.

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை, தரமான மூலப்பொருள்கள், கிராண்டான பேக்கிங் இரண்டும் வெற்றிக்கான சூத்திரம். கிராண்டான பேக்கிங் பற்றித் தெரிந்துகொள்வதற்கு பாரீஸ் கார்னர் போன்ற கடைத் தெருக்களில் இருக்கிற கடைகளுக்குச் சென்று பார்த்தால், புரியும்.

விலையைப் பொறுத்தவரை, சந்தை நிலவரத்தைப் பொறுத்து இல்லாமல், உங்கள் தயாரிப்புக்கு நீங்களே விலையை நிர்ணயிக்கலாம். உங்கள் தயாரிப்பை ஒருமுறை வாங்கி, பயன்படுத்தியவர்களை உங்கள் தயாரிப்பின் வாடிக்கையாளர் ஆக்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இது மிகவும் சிறிய தொழில் என்றாலும், மாதம் ரூ.20,000 வரை சம்பாதிக்க முடியும்.

பேக்கரி
பேக்கரி

பேக்கரி பொருள்கள்...

மைதா மாவில் தயாரிப்பது, சிறுதானிய மாவில் தயாரிப்பது என இரண்டையும், அரசாங்கம் நடத்துகிற பயிற்சி மையத்திலோ, தனியார் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி வகுப்பிலோ கலந்து, கற்றுக் கொண்டுதான் தொழிலில் இறங்க வேண்டும்.

மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் கடை, மைக்ரோவேவ் அவன், கூல் ஸ்டாண்ட், பேக்கிங் ஐட்டம், எடை மெஷின், பில்லிங் மெஷின், உதவியாளர் ஒருவரையும் வைத்து சிறிய அளவில் கடை தொடங்க முதலீடாக ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை தேவைப்படும்.

வாட்ஸ்அப் குழுக்களிலும் சமூக வலைதளங்களிலும் பிறந்த நாள் பார்ட்டி போல, சிறு சிறு விழாக் களுக்கு ஆர்டர் பிடிக்கலாம் ஆரோக்கியத்துக்கு சிறுதானிய பேக்கரி உணவுகள், விழாக்களுக்கு ஏற்றபடி வித்தியாசமான கற்பனைத் திறனுடன் கேக் தயாரிப்பது என உங்கள் முழு திறமையைக் காட்டி னால், பணம் சம்பாதிப்பதுடன், புகழும் கிடைக்கக்கூடிய தொழில் இது. இந்தத் தொழில் மூலம் மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம்.

அரசு வழங்கி வரும் சிறுதொழில் பயிற்சிகள் தொடர்பான விவரங்கள் பத்திரிகைகளில் அவ்வப்போது விளம்பரமாக வெளிவரும். அவற்றைக் கவனித்து பயிற்சி எடுத்துக்கொண்டு தொழில் தொடங்குவது சிறப்பாக இருக்கும்.

கொரோனாவுக்கு முந்தைய சூழ்நிலை படி, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி இளைஞர்கள் படித்து விட்டு வேலைக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களில் 10% மட்டுமே அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மற்றவர்கள் தொழில் செய்து தானும் முன்னேறி நமது நாட்டையும் முன்னேற்றலாமே.

பின்குறிப்பு: உணவு சார்ந்த தொழில் செய்யவிருக்கிறீர்கள் எனில், fssai தரச்சான்றிதழை கார்ப்பரேஷன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

டிரேடிங் வகையைச் சார்ந்த தொழில்கள்!

அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்களும் காய்கறிகளும் எங்கு விளைகிறதோ, அந்த இடங்களிலிருந்தும், தேன், நாட்டுக்கோழி முட்டை போன்றவை ஒரிஜினலாக எங்கு கிடைக்கிறதோ, அந்த இடங்களிலிருந்தும் வாங்கி விற்கலாம். கிராமங்களில் தயாரிக்கப்படும் பனைமரம், வாழைமரம் சார்ந்த பொருள் களையும் நார் கட்டில், கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கும் இடங்களிலிருந்து எடுத்து வந்து நகரங்களில் விற்கும்போது லாபத்துடன் சேர்த்து சமுதாய விழிப்புணர்வையும் உருவாக்கலாம்!

சேவை சார்ந்த தொழில்கள்..!

சேவை சார்ந்த தொழில்கள் அனைத்துமே நீங்கள் நன்கு கற்றுத்தெரிந்து இருந்தால் மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக, மொபைல் ரீசார்ஜ், டிக்கெட் புக்கிங் இணைய வழிச் சேவைகள், அரசு இ-சேவை மையத்தில் செய்ய வேண்டிய சேவைகள், கார் மற்றும் லாட்ஜ் புக்கிங் செய்துகொடுத்தல், ஆன்லைன் மின் கட்டணம் போன்ற சேவை சார்ந்த தொழில்களைச் செய்ய 100 சதுர அடி இடத்தில் ஒரு கம்ப்யூட்டர், ஒரு ஜெராக்ஸ் மெஷினை வைத்துக்கொண்டே செய்துகொடுத்துவிடலாம். இவை தவிர, ஹவுஸ் கீப்பிங், பெஸ்டிசைஸ் சார்ந்த தொழில்கள் செய்யத் தெரிந்தால், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பென்டர், பெயின்ட்டர், கொத்தனார் என ஆட்களை வேலைக்குப் போட்டு வருமானம் ஈட்டலாம். அடுத்தவர்களுடைய வீட்டுக்குள் நுழைகிற வேலை என்பதால், உங்களிடம் வேலை பார்ப்பவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருப்பது அவசியம்.

கொரோனாவுக்குப் பிறகு ‘என் மகனுக்கு ஆன்லைனில் மேத்ஸ் டியூஷன் எடுக்க முடியுமா’, ‘என் மகளுக்கு ஆன்லைனில் தமிழ் டியூஷன் எடுக்க முடியுமா’ என்று நிறைய பேர் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். உங்களுக்கு நீங்கள் படித்த பாடத்தில் நல்ல அனுபவம் இருக்குமென்றால், இந்தச் சேவை சார்ந்த தொழில் செய்யலாம். உங்கள் ஏரியா கேபிள் டிவி வழியாக விளம்பரம் கொடுத்தால், இந்தத் தொழில் வாய்ப்பு சுலபமாகக் கிடைக்கும். இன்றைக்கு நிறைய பேர் யூடியூப் சேனல் ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு வீடியோ எடுப்பது, எடிட்டிங் செய்துகொடுப்பது, மார்க்கெட்டிங் செய்துகொடுப்பது என்று வருமானம் ஈட்டலாம்.

பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்க பெற்றோர்கள் இந்தியாவில் தனித்துவிடப்படுகின்றனர். அவர்களோடு தினமும் இரண்டு மணி நேரம் செலவிடுவது, அவர்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்வதும் சேவை சார்ந்த தொழில்தான். வளர்ப்புப் பிராணிகளை வளர்த்து வருபவர்கள் வெளியூர் செல்லும்போதும் தாங்கள் வளர்க்கும் பிராணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்போதும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு உதவி செய்வதை ஒரு தொழிலாகச் செய்யலாம். மேலே சொன்ன சேவை சார்ந்த தொழில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. ஆனால், அதிகம் கவனிக்கப்படாத தொழில்களாகவும் இவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!