ஃபேஸ்புக் முதல் அமேசான் வரை... தமிழ்மொழி சார்ந்து வளரும் பொருளாதாரம்... நாம் செய்ய வேண்டியது என்ன?

பொருளாதார முன்னேற்றம் என்பது அதைச் சுற்றியுள்ள மொழியின் வளர்ச்சியையோ, வீழ்ச்சியையோ தீர்மானிக்கும் வல்லமை படைத்தது. அதுபோல மொழி, பொருளாதாரத்தை முன்னேற்றவோ, முடக்கவோ செய்யும் ஆற்றல் படைத்தது.
மொழி சார்ந்த பொருளாதாரம் என்பது குறைவாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு துறை. அதிலும் தமிழ்மொழி சார்ந்த பொருளாதாரம் குறித்த ஆய்வுகளோ, விவாதங்களோ மிக அரிதென்றே குறிப்பிடலாம். மொழியும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைந்து பயணிக்கவல்லவை.
பொருளாதார முன்னேற்றம் என்பது அதைச் சுற்றியுள்ள மொழியின் வளர்ச்சியையோ, வீழ்ச்சியையோ தீர்மானிக்கும் வல்லமை படைத்தது. அதுபோல மொழி, பொருளாதாரத்தை முன்னேற்றவோ, முடக்கவோ செய்யும் ஆற்றல் படைத்தது. செம்மொழியான நம் தமிழ்மொழியைச் சார்ந்து ஒரு பொருளாதார கட்டமைப்பை உருவகம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

தமிழ் பேசும் கார்ப்பரேட் நிறுவனங்கள்
ஆங்கிலமே வணிகம் செய்ய சிறந்த மொழியாகக் கருதப்பட்டாலும், தேர்ந்த வியாபாரிக்குத் தெரியும், நுகர்வோர் மொழியே வணிகத்தின் சிறந்த மொழி என்று. 2020-ம் ஆண்டில் மார்வெல் ஸ்டூடியோஸ் (Marvel India) நிறுவனம் ஹல்க் (Hulk) உட்பட தனது சூப்பர் ஹீரோக்களை வைத்து பொங்கல் வாழ்த்துகளைத் தமிழில் ட்வீட் செய்திருந்தது.
டைட்டன் கைக்கடிகார நிறுவனம் முதல்முறையாகத் தமிழ்ச் சொற்கள், தமிழ் பாரம்பர்யக் கருப்பொருள் (theme) ஆகியவற்றைக் கொண்டு `நம்ம தமிழ்நாடு’ என்று கடிகார வரிசை அறிமுகம் செய்திருக்கிறது. அதன் காரணம், அந்த நிறுவனத்தின் 12% விற்பனை தமிழ்நாட்டில்.
ஸ்டார் தொலைக்காட்சிக் குழுமம் (Star Sports) ஆங்கிலம், இந்தியைத் தொடர்ந்து தமிழில் தனிப்பட்ட விளையாட்டுச் சேனல் தொடங்கி வெற்றி கண்டுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பில் 90% தமிழக மக்கள் ஆங்கிலத்தைவிட தமிழ் ஒளிபரப்பை விரும்பினர் என்றும் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்ததாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் வளரும் தமிழ்
இசை ஒலிபரப்புத்தளங்களான கானா (gaana), ஸ்பாட்டிஃபை (spotify) ஆகியவை இந்தியைத் தாண்டி, பஞ்சாபி (15%), தமிழ் (5%) முதலிய மொழிகளின் பயனர்களை நாடுவது, டிஸ்கவரி கிட்ஸ் சேனல் தமிழ் பதிப்பு, நெட்ஃப்ளிக்ஸ், ஜீ (zee5) போன்ற ஓடிடி (OTT) தளங்கள் தமிழ்ப் பயனர்களுக்கென தனித் திரைத்தொடர்கள் உருவாக்குவது என அடுக்கிக்கொண்டே போகலாம்.
அமேசான் (Amazon India) பெரு நிறுவனம் தன்னுடைய மின்னூல் விற்பனையை அதிகரிக்க கிண்டில் (Kindle pen-to-publish) என்ற சிறந்த மின்னூல்களுக்கான 5 லட்ச ரூபாய் பரிசுப்பொருள் போட்டியை ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தி வருகிறது.
இவை தவிர, விக்கிப்பீடியாவில் (Wikipedia) கட்டுரைகள் பங்களிப்பில் இந்திய மொழிகளில் இந்திக்கு (உலகளவில் 54வது இடம்) அடுத்த இடத்தில் தமிழ் (58th) உள்ளது. பெங்காலி, தெலுங்கு, மராத்திய மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் பங்களிப்பு குறைவே.

தமிழுக்கு வர வேண்டிய சேவைகள்
கலிபோர்னியாவில் வசிக்கும் நண்பர் ஒருவர், தன் குழந்தைக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கக் கற்றல் தளங்களைத் தேடியபோது தமிழ் இணையத்தில் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, அதுவே ரஷ்ய மொழி இணையம் எவ்வாறு மேலோங்கியுள்ளது எனவும் வருத்தம் தெரிவித்தார். நானே எல்ப் (Yelp) போன்ற மதிப்புரை வலைதளம் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே எனப் பலமுறை நினைத்திருக்கிறேன்.
இவை மட்டுமல்லாமல் வாட்ஸ்அப், ஷேர்சாட், ஃபேஸ்புக், கோரா, டிக்டாக் போன்ற முன்னணி பிராண்டுகள் தமிழ்மொழியில் தங்கள் சேவையைக் கொண்டுவந்தது போல விரைவில் ஊபர், ஏர் பி&பி, அமேசான் போன்ற நிறுவனங்களும் தமிழுக்கும் தகவமைப்பு செய்யும் தேவை உருவாகலாம்.
கூகுளுக்குப் பதில் Baidu-வையும், Youtube, Netflix போன்றவற்றுக்கு மாற்றாக Youkyu, Iqiyi போன்ற சீனமொழி சார் நிறுவனங்களை உருவாக்கி, அந்த நிறுவனங்களின் பெரும் லாபங்களையும், கட்டுப்பாட்டையும் தன்னகத்தே வைத்து புதுமை (innovation) சார்ந்த தொழில் சூழலைப் பெருக்கியது என்பதை ஆய்வு செய்வதும் தமிழ் சார்ந்த பொருளாதாரத்தை முன்னெடுக்க உதவும்.
வாடிக்கையாளர்களைச் சென்று சேர மொழிக்கூட்டணி
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தேடப்படும் சொற்களை நிகழ்நேர மொழிபெயர்ப்பு செய்து தமிழில் தேடவும் பேசவும், வரைபடத்தில் வழிதேடவும் இணையத்தில் வழிமுறை செய்யப்பட்டிருக்கிறது, இந்த சேவைகளை மைக்ரோசாப்ட், கூகுள் (Google’s Cloud Speech API) ஆகிய நிறுவனங்கள் 2017-ம் ஆண்டிலிருந்து வழங்குகின்றன.
வெறுமனே மொழிபெயர்ப்பை மட்டுமே வைத்து வாடிக்கையாளர்களை இழுத்துவிட இயலாது. ஆங்கிலம் & தமிழ் மொழி ஜோடிகளை (language-pair) வைத்து கோடிக்கணக்கான வாக்கியங்கள் அமைத்து, அதைத் தானியங்கி முறையில் இயங்க வைப்பதும் பெரும் சவால். தமிழ் நிலப்பரப்பையும், தமிழர் வாழ்வியலையும் புரிந்து தமிழ் மொழி சார் வேலைவாய்ப்பை அதிகரித்தால்தான் பெருவெற்றி சாத்தியம்.

இணையத்தில் அதிகரிக்கும் தமிழ் சமூகம்
கே.பி.எம்.ஜி நிறுவனமும் கூகுளும் இணைந்து நடத்திய 2017-ம் ஆண்டின் ஆய்வின்படி, 2021-ல் இணையம் 536 மில்லியன் இந்திய மொழிப் பயனாளர்களையும் (தமிழ் - மூன்றாமிடத்தில் 42 மில்லியன்), 199 மில்லியன் ஆங்கில மொழிப் பயனாளர்களையும் கொண்டிருக்கும். அதில், பத்தில் ஒன்பது பேர் தாய்மொழியைப் பயன்படுத்த விரும்புவர். குறிப்பாக, இந்தியர்களில், ஆங்கிலத்தில் இருந்து தாய்மொழி இணையத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையில் (propensity to internet adoption) தமிழர்களே முதலிடம் வகிக்கிறார்கள். 2016-ல் 42%, 2021-இல் 74% என்று ஊகிக்கப்படுகிறது. அதாவது, 97% தமிழர்கள், தமிழ் மொழி விளம்பரங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள்.
இந்தப் போக்கு எதைக் குறிக்கிறதென்றால், தமிழ் சார்ந்த நிறுவனங்களுக்கு வியாபாரத்தையும் வருமானத்தையும் தமிழர்கள் அளிக்க தயங்க மாட்டார்கள் என்பதைத்தான். இதன் ஆணிவேர் தாய்மொழிப் பற்று என்பதுடன், தாய்மொழி மூலம் எந்த விஷயத்தையும் எளிதில் புரிந்துகொள்ள முடிவது. 2016-ஐ ஒப்பிடுகையில், 2021-ல் இந்திய மொழிப் பயனாளர்கள் எண்ணிக்கை சமூக வலைதளங்கள் (301 மில்லியன்), பொழுதுபோக்கு தளங்களைத் (392 மில்லியன்) தாண்டி இணைய செய்தித்தளங்கள் (284 மில்லியன்), டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (175 மில்லியன்), இணைய வர்த்தகம் (165 மில்லியன்) என மும்மடங்கு அதிகரிக்கப்போகிறது.
இனி என்ன செய்ய வேண்டும்?
தமிழின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கும் இங்கு தமிழ்மொழி சார்ந்த பொருளாதாரத்தின் தேவையை முன்னெடுப்பது முக்கியம். இதற்கு தமிழ்மொழி சார்ந்த ஆண்ட்ராய்டு /ஆப்பிள் செயலிகள் (apps), கட்டணத்தளங்கள் (payment platforms) போன்ற முயற்சிகளுக்கான ஆதரவும் பங்களிப்பும் தேவை.
ஆரஞ்சுஸ்கேப் நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் வழியுறுத்துவதுபோல, தமிழ்நாடு டிரில்லியன் டாலர் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) அடைய வேண்டுமெனில், பெருந்திரள் தொழில்முனைவும் (mass enterprenuership), அது சார்ந்த மனநிலையையும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான தேவைகளை உருவாக்குவது அவசியம்.
குவி (GUVI - Grab Your Vernacular Imprint) போன்ற ஸ்டார்ட்-அப்கள், கணிப்பொறித் திறன்களைத் தமிழிலேயே கற்றுவித்து மாணவர்களின் தாய்மொழியில் சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குகின்றன. அதன் நிறுவனர்களில் ஒருவரான அருண் பிரகாஷ், தனது இந்த முயற்சிக்கு பொறியியல் கல்லூரி மாணவர்களைத் தாண்டி ஆசிரியர்களிடத்தும் இதற்கான வரவேற்பு அதிகமாக இருந்ததெனவும், இதுமாதிரி முயற்சிகள் நிரப்பும் வெற்றிடம் பற்றியும் புரிந்துகொள்ள முடிந்ததாகவும் சொன்னார்.

இதுபோன்று பல துறை சார்ந்து தமிழ் சார்ந்த சமூக வலைதளங்கள், விளையாட்டுச் செயலிகள் (gaming apps), சுற்றுலா/உணவு சார்ந்த மதிப்புரை (review) தளங்கள், தமிழில் பணப்பரிவர்த்தனை, கிராமச் சந்தைகளையும் நகர நுகர்வோர்களையும் நேரடியாய் இணைக்கும் தளங்கள், தமிழர்களின் கற்பனை வளங்களை வணிகப்படுத்தும் சந்தையின் மூலம் பொருளாதாரத் தன்னிறைவு என்று எல்லாருக்கும் குறைந்தபட்ச சம வாய்ப்பையும் உருவாக்குவதன் மூலம் மொழியை முன்னேற்றத்துக்கான தடைக்கல்லாய் பார்க்காமல், ஒரு கருவியாய் பயன்படுத்தலாம்.
நெல்சன் மண்டேலா கூறியது போல, ``ஒரு மனிதனிடம் அவனுக்குப் புரியும் மொழியில் பேசினால் அவன் தலைக்குப் போகும், அவன் சொந்த மொழியில் பேசினால், அவன் இதயத்துக்குப் போகும்!”
- அருண் ராஜேந்திரன்