தேசிய பங்குச் சந்தையில் நடந்த பல்வேறு முறைகேடுகளுக்கு முக்கியமான காரணமாக இருந்த ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.ஐ சென்னையில் கைது செய்துள்ளது. என்.எஸ்.இ-யில் நடந்த முறைகேடுகள் பற்றி ஆனந்த் சுப்பிரமணியனிடம் கடந்த சில நாள்களாகவே சி.பி.ஐ விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையில் சில முக்கியமான தகவல்கள் கிடைத்ததன் விளைவாக ஆனந்த் கைது செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

என்.எஸ்.இ-யின் நிர்வாக இயக்குநராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மூலம் 2013-ம் ஆண்டு தேசிய பங்குச்சந்தையின் ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தில் வழக்கமாகப் பின்பற்றப்படும் எந்த வித நடைமுறையும் பின்பற்றப்படாமல் விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு ஆனந்த் சுப்பிரமணியன் நிர்வாக இயக்குநர் சித்ராவுக்கும் ஆலோசகராக நியமிக்கப்பட்டதோடு 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி உயர்த்தப்பட்டார். சம்பளமும் மற்றவர்களைவிட அதிகமாக ஆனந்துக்கு வழங்கப்பட்டது. எந்த வித முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் அப்பதவியில் நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதோடு சித்ரா ராமகிருஷ்ணா எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அது குறித்து ஆனந்திடம் கேட்டுவிட்டுத்தான் முடிவு செய்வார் என்று செபி நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. மேலும், சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் தேசிய பங்குச் சந்தை தொடர்பான முக்கிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டது செபி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்துள்ளனர். ஆனந்த் சுப்பிரமணியன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆனந்த் சுப்பிரமணியனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ரா ராமகிருஷ்ணா, சாமியார் ஒருவரிடம் தேசிய பங்குச் சந்தை தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் ஆனந்த் சுப்பிரமணியனா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் மர்ம சாமியார் யார் என்ற உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த டார்கெட் சித்ரா?
என்.எஸ்.இ முறைகேட்டில் ஆனந்த் சுப்பிரமணியனைவிட அதிக முக்கியத்துவம் உடையவர் சி.இ.ஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த இருவரும் திட்டமிட்டு செயல்பட்டதாக செபி அறிக்கை சொல்கிறது.
ஆனந்த் சுப்பிரமணியன்தான் இமயமலை சாமியார் வேடமிட்டு சித்ராவை ஏமாற்றியதாகச் சொல்லப்பட்டாலும், என்.எஸ்.இ தொடர்பான பல முடிவுகளை எடுத்தவர். எனவே, சித்ராவையும் சி.பி.ஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. அநேகமாக அடுத்த சில நாள்களில் அவர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் புலனாய்வுத்துறை சார்ந்தவர்கள்.