நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கண்டம் கடந்து செல்லும் ராமநாதபுரம் கருவாடு..! ஆன்லைனில் அசத்தும் பட்டதாரிகள்!

கிருஷ்ணன், அனிதா, கலைக்கதிரவன்
பிரீமியம் ஸ்டோரி
News
கிருஷ்ணன், அனிதா, கலைக்கதிரவன்

பிசினஸ்

ராமநாதபுரத்தில் உருவாகும் பல வகை யான உணவுப் பொருள்களில் பலரும் தேடிவந்து வாங்குவது கருவாடுதான். முன்பு கடைகளில் மட்டும் விற்கப்பட்டு வந்த கருவாட்டை, இன்று ஆன்லைன் மூலம் உலக அளவில் விற்பனை செய்து அசத்திக் கொண்டிருக்கிறார் கலைக்கதிரவனும் அவருடைய நண்பர் கிருஷ்ணனும். அவர்களைச் சந்தித்தோம்.

பிசினஸ் குறித்துப் பேசத் தொடங்கினார் கலைக்கதிரவன். ‘‘எனக்கு சொந்த ஊரு ராம நாதபுரம் மாவட்டத்தில் தெற்குவாணிவீதி என்கிற கிராமம். முழுக்க விவசாயம் சார்ந்த ஊரு. நான் 2009-ல் பி.டெக் பயோடெக் னாலஜி படிச்சு முடிச்சேன். அதுக்கப்புறம் சில தனியார் நிறுவனங்கள்ல 12 வருஷம் வேலை பார்த்தேன். எனக்கு சொந்த ஊர்ல பிசினஸ் செய்யணும்னு ஆசை.

சரி, என்ன பண்ணலாம்னு நான் யோசிச்சப்ப, எங்க ஊர் கருவாடும், பனைப்பொருள்களும் சட்டுன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. அதை ஆன்லைன்ல விக்கிறதுக்கு முடிவு செஞ்சேன். 2019-ல் என் வெப்சைட்டோட பெயர ரெஜிஸ்டர் செஞ்சேன்.

கிருஷ்ணன், அனிதா, கலைக்கதிரவன்
கிருஷ்ணன், அனிதா, கலைக்கதிரவன்

பொதுவா, வாய்ப்பு கிடைக்கிறப்ப சென்னையில இருக்கிற பழைய நண்பர்களை நான் சந்திப்பேன். அப்படி ஒரு முறை என் பழைய ரூம்மேட் கிருஷ்ணாவை சந்திச்சு என்னோட பிசினஸ் பிளானைச் சொன்னேன். அவரு என்னோட சேர்ந்து பிசினஸ் செய்ய ஓகேன்னு சொல்லிட்டார். நாங்க பிசினஸ் தொடங்குறதுக்கு எங்க குடும்பத்துலயும் ஓகே சொல்லிட்டாங்க. 2019-ல் நாங்க வேலைய விட்டுட்டு, ஆரம்பிச்சுட்டோம்.

ஒரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடி ஒரு பெண் கண்டிப்பா இருப்பாங்க. அப்படித்தான் என்னோட வெற்றிக்குப் பின்னாடி என்னோட மனைவி அனிதா இருக்காங்க. அவுங்களும் பட்டதாரி தான்.

பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, கருவாடுதானே விக்கப் போறோம்னு நெனைச்சு உள்ளே இறங்கி பார்த்தா ஒண்ணும் புரியல. ஒரே கருவாடக் காட்டி, ஒவ்வொருத்தரும் ஒரு பேரு சொன்னாங்க. ஆரம்பத்துல நாங்க நிறைய ஏமாந்தோம். ஆரம்ப காலத்துல கிலோ கணக்குல கருவாட்டைக் கொட்டி புதைச்சு இருக்கோம். காரணம், சரியான முறையில பதப்படுத்தாம குடுத்து இருப்பாங்க. நல்ல கருவாட்டையும் பாதுகாக்கத் தவறியிருப்போம். கடைசியில ஒருவழியா இந்தக் கருவாடு இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுக்கவே கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு.

சுத்தமான கருவாட்டுக்கு வாசனை கிடையாது.கெட்டுப்போன கருவாடுதான் துற்நாற்றம் வீசும். எந்த மீன் கருவாட்டை எப்படிப் பக்குவப் படுத்தணும்னு அனுபவரீதியா நெறையா கத்துக்கிட்டோம்.

அடுத்ததா, கருவாடு விற்பனை செய்யத் தேவை யான ஆவணங்கள் தேடி அதை வாங்க ஆரம்பிச் சோம். எங்க நிறுவனத்துக்குத் தேவையான எஃப்.எஸ்.எஸ்.எ.ஐ லைசென்ஸ், ஜி.எஸ்.டி, ஐ.இ.சி (IEC) என எல்லாத்தையும் நாங்களே அப்ளை பண்ணி வாங்கினோம்.

இதுல ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, நாங்க கருவாட்டை விக்கத் தொடங்குறதுக்கு முன்னாடியே அமெரிக்காவுல இருக்கும் ஒரு நிறுவனம் ஒரு பெரிய ஆர்டர் கொடுத்தாங்க. அதுக்கு மிக முக்கியமான காரணம், எங்களோட இணையதள வடிவமைப்பு. பொருள் ரெடி பண்ணிட்டோம், எப்படி பேக் பண்றதுனு முடிவு பண்ணியாச்சு. ஆனா, எப்படி அனுப்பணும்னு தெரியல. கூகுள் உதவியோடு அதையும் செஞ்சு முடிச்சோம்.

சரி, நம்மளுக்கு முன்னாடியே நெறைய பேரு கருவாடு விக்கிறாங்க. இதுல நாம ஏதாவது புதுசா பண்ணணும்னு தோணுச்சு. ராமேஸ்வரம் கருவாடு அப்படிங்கிறது வணிகப் படுத்தக் கொஞ்சம் சுலபமா இருந்தது. அதைத் தாண்டி ஏதாவது பண்ணணும்னு நெனச்சோம். இருக்கிற எல்லா கருவாட்டுக்கும் தனித்தனியா எஃப்.எஸ்.எஸ்.எ.ஐ வழிகாட்டு தல்படி, டெஸ்ட் பண்ணினோம். இதுமாதிரி ஒவ்வொரு கருவாட்டுக்கும் தனித்தனியா யாரும் பண்ணல. விற்பனை தொடங்குறதுக்கு முன்னாடியே இந்த டெஸ்ட் பண்ணுறதுக்கு மட்டும் சுமார் 25,000 ரூபாய் கிட்ட செலவு செஞ்சோம்.

இது மட்டும் போதாது; இன்னும் என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, ஒரு தனித்துவமான ஒரு டிசைனை உருவாக்கினோம். கருவாடு வாங்கும்போது அது எந்த ஊர்ல வாங்குன கருவாடு, எவ்வளவு அளவு, அதுல என்னென்ன சேர்த்திருக்கு, இந்தக் கருவாட வறுக்கலாமா, தொக்கு மாதிரி வைக்கலாமா, இல்ல, குழம்பு வைக்கலாமா அப்படிங்கிற தகவல்கள், அந்த கருவாட்டோட முழு லேப் டெஸ்ட் ரிப்போர்ட் பார்க்க ஒரு க்யூஆர் கோட், அதோட செய் முறைகள் எல்லாம் யூடியூப்ல பார்க்க ஒரு க்யூஆர் கோட், அதே பொருளைத் திரும்ப வாங்கணும்னா அதுக்காக எங்க வெப்சைட் க்யூஆர் கோட், அமேசான்ல வாங்க ஒரு க்யூஆர் கோட், வாட்ஸ்அப்ல எங்களை நேரடியா தொடர்புகொள்ள ஒரு க்யூஆர் கோட்... இப்படி பார்த்துப் பார்த்து அந்த டிசைனை ரெடி பண்ணுனோம்.

கண்டம் கடந்து செல்லும் ராமநாதபுரம் கருவாடு..! ஆன்லைனில் அசத்தும் பட்டதாரிகள்!

ஒரு வழியா அமேசான்ல எங்க விற்பனையைத் தொடங்கினோம். முதல் நாளே பெங்க ளூருல இருந்து ராஜேஷ்னு ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் பண்ணுனாரு. அவருக்கு கருவாட்டை அனுப்புறதுக் குள்ள கொரோனா லாக்டௌன் வந்துடுச்சு. ஆன்லைன்ல வந்த எந்த ஆர்டரையும் எங்களால சப்ளை செய்ய முடியல. ஆனா, கொரோனா கொஞ்சம் தணிஞ்சவுடனே எல்லாருக்கும் கருவாட்டை அனுப்புனோம். நாங்க எதிர்பார்த்த மாதிரி, ரொம்ப பாசிட்டிவ்வான ஃபீட்பேக் வந்தது. முதல் மாதம் அமேசான்ல ரூ.50,000-க்கு வர்த்தகம் நடந்தது. இப்ப மாசம் ரூ.3 லட்சத்துக்கு வியாபாரம் நடக்குது.

கண்டம் கடந்து செல்லும் ராமநாதபுரம் கருவாடு..! ஆன்லைனில் அசத்தும் பட்டதாரிகள்!

எங்க நிறுவனத்துக்கு ‘லுமிரியன் ஃபுட்ஸ்’னு பெயர் வச்சோம். இப்ப எங்களோட கருவாடு அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்கள் கடந்து விற்பனை ஆகுது.

எங்கள் பிசினஸை அடுத்து எப்படிக் கொண்டு போறதுன்னு யோசிக்கிட்டு இருந்தப்ப, ராம நாதபுரம் கே.வி.கே அலுவலகத் துல பேராசிரியரா இருக்கிற கலைச்செல்வனின் அறிமுகம் கிடைச்சது. அந்த அலுவலகத்துல வேலை பார்த்த பாலாஜி, பாலுனு ரெண்டு பேராசிரியர்கள் ஊக்கம் தந்தாங்க. பாலாஜி, மதுரைல இருக்கிற தமிழ்நாடு வேளாண் கல்லூரில பேரா சிரியரா இருக்கிற கண்ணனைப் போய் பார்க்கச் சொன்னாரு. அவரு, தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி வளாகத்தில் உள்ள நபார்ட் - மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் ஃபோரத் தோட (NABARD-Madurai Agri Business Incubation Forum சுருக்கமாக NABARD-MABIF) சி.இ.ஓ சிவகுமாரைச் சந்திச்சேன். அவருடன் அவங்க டீமும் ஆரம்ப காலத்துல நாங்க செய்யணும்னு நினைச்ச பல விஷயங்களைப் பண்றதுக்கு உதவியா இருந்தாங்க. விவசாயம், உணவு தொடர்பா எந்தப் பொருளை நீங்கள் உற்பத்தி செய்வதாக இருந்தாலும், அது தொடர்பாக நீங்கள் இந்த அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம். அவங்க எங்களுக்கு நிறைய தொழில் பயிற்சிகள் கொடுத்தாங்க. எங்களையும் பயிற்சி கொடுக்குற வங்களா மாத்தினாங்க. எங்க தொழிலை மேம்படுத்த ரூ.25 லட்சம் பங்கு முதலீடாகக் கொடுத்தாங்க. அதை வச்சு இன்னும் நிறைய புராஜெக்ட்ஸ் பிளான் பண்ணியிருக்கோம்.

சமீபத்துல இந்திய ரயில்வே மூலமா ஒரு நிலையம் - ஒரு பொருள் (One Station - One Product) என்னும் திட்டம் இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, ராமநாத புரம் ஸ்டேஷன்ல எங்களோட கருவாடு விற்பனைய செஞ்சுகிட்டு வர்றோம். அது வேற மாதிரியான அனுபவங் களைக் கொடுத்தது. ‘‘ஒரு காலத்துல பலரும் ஏளனமா பார்த்த தொழிலை நீங்க இன்னைக்கு கம்ப்யூட்டர் மூலமா செய்றதைப் பார்க்குறப்ப, பெருமையா இருக்கு’’ன்னு சொல்லிட்டுப் போவாங்க.

நாம என்ன பண்ணுனாலும் இந்த உலகம் ஒண்ணு கருத்து சொல்லும், இல்லைன்னா கேள்வி கேட்கும். இது ரெண்டையும் நம்ம காதுல வாங்காம நம்ம வேலை என்னவோ அதை செஞ்சுகிட்டே இருக்கணும். நம்ம வேலைய 100% அர்ப்பணிப்போட செய்றப்ப, கண்டிப்பா நாம் ஜெயிப்போம்’’ என்று நம்பிக்கையுடன் பேசி முடித்தார் கலைக்கதிரவன்.