Published:Updated:

ஏற்றுமதியில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்? - விரிவான ஆலோசனை

விரிவான ஆலோசனை
பிரீமியம் ஸ்டோரி
News
விரிவான ஆலோசனை

சர்வதேச வர்த்தகத்தின் மூலம் மட்டுமே தரமான உற்பத்திச் சந்தையை உருவாக்க முடியும்.

டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் சர்வதேசப் பொருளாதார நிபுணர்

ந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்துப் பலரும் பேசிவரும் நிலையில், `இந்தியச் சந்தை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?’ என்ற விவாதம் எழத் தொடங்கியுள்ளது. ஒருபக்கம், `சுயச்சார்பு சந்தை’ என்ற கருத்தாக்கம் நிலவுகிறது. இன்னொரு பக்கம், `பாதுகாப்புக் கருதி வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும்’ என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதேநேரம், `இந்தியா தொடர்ந்து திறந்த சந்தையாக விளங்க வேண்டும்’ என்றும் முன்வைக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக பார்க்கும்போது, இந்தியா திறந்த சந்தையாக இருக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘இந்தியா ஏன் திறந்த சந்தையாகத் தொடர வேண்டும்’ என்பது குறித்து மின்ட் செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் ஐந்து காரணங்களை முன்வைக்கின்றனர் அந்தக் கட்டுரையை எழுதிய ஆசிரியர்கள். ஒன்று, சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியா சிறிய நாடு. இரண்டு, இறக்குமதிக்கு அதிக வரி விதித்தால், ஏற்றுமதிக்கும் அதிக வரி விதிக்கப்படலாம். மூன்று, சர்வதேச வர்த்தகம் இப்போது குறைந்திருப்பதால் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியா திறந்த சந்தையாக இருந்தால், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். நான்கு, இந்தியாவின் மனிதவளம் உபரியாக இருக்கிறது. இதன் மூலம் மனிதவளத்தை மையமாகக்கொண்ட துறைகள் சீனாவிலிருந்து வெளியேறும்போது அவற்றை இந்தியாவால் ஈர்க்க முடியும்.

ஏற்றுமதியில் ஜெயிக்க என்ன
செய்ய வேண்டும்? - விரிவான ஆலோசனை

வளர்ந்த நாடுகள் தடையற்ற திறந்த வர்த்தகம் மூலம் வளர்ச்சியை எட்டவில்லை. மாறாக, அவை அதிக வரிகளை விதித்தன. மேலும், வரி சாராத தடைகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இத்தகைய பாதுகாப்பான வர்த்தகம் மூலம் வளர்ந்த நாடுகள் உள்நாட்டு வர்த்தகம் என்ற நிலையில் அவற்றின் உச்ச வரம்பை எட்டியதும், அந்த நடைமுறையை உதறித்தள்ளத் தொடங்கின. இதைத்தான் ‘ஏற்றிவிட்ட ஏணியை உதறித் தள்ளுவது’ என்று ஹாஜூன் சங் (Ha-Joon Chang) குறிப்பிட்டு எழுதினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வளர்ந்த நாடுகள் பிற நாடுகளைத் திறந்த சந்தையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தத் தொடங்கின. வளர்ந்த நாடுகள் உள்நாட்டு வர்த்தகம் என்ற வகையில் கட்டுப்பாடுகள் விதித்திருந்த அதே நேரம், சிறப்பான கல்வி, தேசியமயமாக்கப்பட்ட ஒற்றைச் சந்தை, நல்ல உள்கட்டமைப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தியுள்ளன. இவையெல்லாம் இணைந்துதான் அவற்றின் வளர்ச்சியைச் சாத்தியமாக்கின. ஆனால், கட்டுப்பாடுகளுள்ள பாதுகாப்பான வர்த்தகத்தை முன்வைப்பவர்கள் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

ஏற்றுமதியில் ஜெயிக்க என்ன
செய்ய வேண்டும்? - விரிவான ஆலோசனை

இதற்குச் சிறந்த உதாரணம் சீனா. இறக்குமதிகளுக்கு வரி மற்றும் வரி சாராத தடைகள் விதித்த சீனா, சர்வதேசத் தரத்திலான ஆரம்ப கல்விக்குப் பெருமளவில் முதலீட்டைக் கொட்டியது. உள்கட்டமைப்பில், அறிவியல் தொழில்நுட்பத்தில் என அனைத்திலும் சிறந்து விளங்கியது. இந்தியா இத்தகைய நிலையை அடைய இரண்டு தலைமுறைக் காலம் தேவைப்படும்.

கட்டுப்பாடுகளுள்ள வர்த்தகம் எனில், அதற்கு உள்நாட்டு செயல்திறனில் சிறந்த வரையறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே சிறப்பான உற்பத்திச் சந்தையை உருவாக்க முடியும். உள்நாட்டு உற்பத்தி என்பது செயல்திறனுடன் இல்லாதபோது, இறக்குமதிச் சந்தைக்கு மாற்று என்ற வாய்ப்பு உற்பத்தியைத் தரமற்றதாகவும், சோம்பல் நிறைந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உருவாக்கும். கிழக்காசிய நாடுகள் வரிகளைக் குறைத்தன. காரணம், அவை சிறிய மற்றும் திறந்த சந்தைகளாக இருந்தன. அவை ஜப்பானை உதாரணமாக எடுத்துக்கொண்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் உள்நாட்டுச் சந்தை அழிந்தது. வேறு வழியில்லாமல் ஏற்றுமதிச் சந்தையை நம்ப வேண்டிய நிலைக்கு ஆளானது. ஆனால், அதற்காக இறக்குமதிக்கு அதிக வரி விதிக்காமல் ஏற்றுமதியை அதிகரித்தது.

சர்வதேச வர்த்தகத்தின் மூலம் மட்டுமே தரமான உற்பத்திச் சந்தையை உருவாக்க முடியும். உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்க இறக்குமதிக்கு வரி விதிப்பது உட்பட இன்னபிற கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு முன்னர் உள்நாட்டு உற்பத்திச் சந்தை எப்படி இருக்கிறது... எவ்வளவு செயல்திறனும் தரமும் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் போட்டித்திறன் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் ரூபாயின் மதிப்பு வலுவிழப்பதோடு பணவீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை போன்றவையும் பெரிய பிரச்னையாக உள்ளன.

ஏற்றுமதியில் ஜெயிக்க என்ன
செய்ய வேண்டும்? - விரிவான ஆலோசனை

தற்போது கூறப்பட்டுவரும் `ஆத்மநிர்பார்’ திட்டம், உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதனுடன் ஊக்கப்படுத்துதல் மற்றும் செயலாக்கல் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். உள்நாட்டுச் சந்தையை ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், சர்வதேசத் தரத்திலான செயலாக்கத்துடன் சந்தை செயல்பட வேண்டும்.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை இந்தியா வாய்ப்பாக மாற்ற வேண்டுமென்றால், அதற்கு அரசு அதிகாரிகள் அதைச் சாத்தியப் படுத்துவதற்கான விதிகளைக் கொண்டுவர வேண்டும். தடையாக உள்ளவற்றை உடைக்க வேண்டும். மாறாக, விதிகளைக் காரணம் காட்டித் தடுக்கக் கூடாது.

இது சாத்தியமானால்தான் இந்தியா அந்நிய முதலீட்டுக்கான நாடாக மாறும் நிலை உருவாகும். அந்நிய முதலீட்டை எதிர்பார்க்கும் நாடாக இருக்கும் அதேநேரத்தில், வர்த்தகத்துக்கான நாடாகவும் இருக்க வேண்டும். திறந்த சந்தை என்பது முதலீட்டுக்காக மட்டுமே அல்லாமல், வர்த்தகத்திலும் திறந்த சந்தையாக இருக்க வேண்டும். அதற்கான தேவையும் சூழலும் இந்தியாவில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். திறந்த சந்தை என்பது கட்டாயமாகக் கூடாது.

இவையெல்லாம் முந்தைய வரலாறு என்றாலும் இதிலிருந்து கற்றுக்கொள்ளவும், அதை இப்போது செயல்படுத்திப் பார்க்கவும் வாய்ப்பு வந்துள்ளது. அதற்கேற்ற சூழல் இந்தியாவுக்கு உருவாகியுள்ளது. உதாரணமாக டைல்ஸ், டைம்பீஸ் ஆகியவற்றின் உற்பத்தி மையமாக இருக்கும் மோர்பி தற்போது மாட்டெல், லெகோ, ஹாம்லே போன்ற பொம்மைப் பொருள்கள் நிறுவனங்களின் உற்பத்தி இடமாக மாறத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் பொம்மை உற்பத்திச் சந்தையைப் பிடிக்க தீவிரமாக உள்ளது. இங்கு உற்பத்தியாளர்கள் செலவைப் பற்றி மட்டுமல்ல, தரம் குறித்தும் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். சர்வதேசச் சந்தைகளுக்கான தரத்தில் பொருள்களை உற்பத்தி செய்வது மிகவும் அவசியமானது. இதில் அரசின் ஆதரவும் முக்கியம். அரசு தரும் ஆதரவுடன், செயல்திறனுடன் உற்பத்தியாளர்கள் செயல்பட்டால் சர்வதேசச் சந்தையை இந்தியா கணிசமாகப் பெற முடியும்.

உலக வர்த்தகம் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேசச் சந்தையை நம்மால் கைப்பற்ற முடியும்.

வழக்கமான சூழலைவிட இப்போது இது சற்றுக் கடினம்தான். ஆனால், உற்பத்தித் துறையின் செயல்திறனில் பெரிய அளவில் கவனம் செலுத்தினால் நிச்சயம் நம்முடைய நோக்கத்தை அடைய முடியும்.

ஏற்றுமதியில் ஜெயிக்க என்ன
செய்ய வேண்டும்? - விரிவான ஆலோசனை

இந்திய தொழில்முனைவோர்களிடம் திறமை இல்லாமலில்லை. ஆனால், அவர்களுடைய லட்சியம் குறுகியதாக இருப்பதுதான் பிரச்னை. தற்போது இந்த கொரோனா நெருக்கடியில் செயலிகள் மீதான தடை, இதுவரை இல்லாத வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. பெரும்பாலும் அரசு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சொல்பவர்கள், தனியார் துறையின் பங்களிப்பு குறித்தும் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்காலம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பது அரசுக்கு மட்டுமே அமைந்த பொறுப்போ அல்லது கடமையோ அல்ல. தனியார்துறை அரசாங்கத்திடம் தங்கள் கோரிக்கைகளை மட்டுமே வைப்பதைத் தொடர்ந்து செய்யாமல், தங்கள் உற்பத்தியின் தரத்தை உயர்த்த இயன்றதைச் செய்கிறோமா என்று மெய்யாகச் சிந்திக்க வேண்டும்.

இந்தியா உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாப்பது குறித்து யோசிக்கும் அதே வேளையில் செயல்திறன், உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அது காலத்தின் தேவை!

தமிழில்: திவ்யா