Published:Updated:

ரியல் எஸ்டேட் துறையில் மாத்தி யோசித்த சென்னை ஸ்டார்ட்அப்!

சென்னை ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

ரியல் எஸ்டேட் துறையில் மாத்தி யோசித்த சென்னை ஸ்டார்ட்அப்!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
சென்னை ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று ஜெயிக்க முக்கியமான காரணமாக அமைவது, அந்த நிறுவனம் எந்தத் துறையில் தொழில்நுட்ப சேவை அளிக்கிறது என்பதைப் பொறுத்தது தான். சென்னையில் உருவாகிய ஃபெசிலியோ (facilio) நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் செயல்படுவதன்மூலம் இன்று இந்தியாவைத் தாண்டி, உலகின் பல்வேறு நாடுகளில் தனது பிசினஸை விரிவுபடுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் பிரபு ராமசந்திரன், ரியல் எஸ்டேட் துறையில் ஒரு சாஸ் (SaaS) நிறுவனத்தை உருவாக்கிய விதம் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘சொந்த ஊர் சென்னை என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சிறுசேரிதான். சிறுசேரி தற்போது சென்னையுடன் இணைந்து விட்டது. என்றாலும் நான் வளரும் காலத்தில் சென்னைக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம்.

இன்ஜினீயரிங் படித்தேன். படித்து முடித்தவுடன் அட்வென்ட் நெட் நிறுவனத்தில் (ஜோஹோ நிறுவனத்தின் பழைய பெயர்) சேர்ந்தேன். அங்கு 17 ஆண்டுகள் வேலை செய்தேன். அங்கு திறமைக் கேற்ப அடுத்தகட்டத்துக்கு பதவி உயர்வுகளும் பொறுப்புகளும் உயர்ந்துகொண்டே இருந்தன. 2016-ல் சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் உருவானது. ஜோஹோவில் `வெப்என்.எம்.எஸ்’ (webNMS) என்னும் பிரிவுக்கு இயக்குநராக இருந்தேன். அப்போது ஒரு ஐடியா வந்தது. அந்த ஐடியாவை ஓர் உதாரணம் மூலம் உங்களுக்கு புரிய வைக்கிறேன்.

ரியல் எஸ்டேட் துறையில் மாத்தி யோசித்த சென்னை ஸ்டார்ட்அப்!

டெலிகாம் நிறுவனங்களின் டவர் பல இடங்களில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கம்ப்யூட்டர்கள் மூலம் இந்த டவர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அங்கு ஆள்களை அனுப்பி சரிசெய்ய முடியும். இதனால் பெரிய அளவில் மனித நேரத்தைப் பாதுக்காக்க முடியும். இதுதான் எங்கள் ஸ்டார்ட் அப்-க்கான அடிப்படை ஐடியா.

ஒவ்வொரு துறையிலும் ஏதாவது புதிய குறுக்கீடுகள் (disruption) நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ரியல் எஸ்டேட் துறையில் பெரிய அளவில் குறுக்கீடுகள் நடக்கவில்லை என்பதை நாங்கள் கவனித்தோம்.

தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய 90% நேரம் ரியல் எஸ்டேட் சார்ந்தே இருக்கிறது. வீடு, அலுவலகம், மால், வர்த்தகக் கூடங்கள், மருத்துவமனை, தொழிற்சாலைகள் என ஏதாவது ஒரு கூரையின்கீழ் இருக்கிறோம். ஆச்சர்யம் என்னவெனில், அதில் யாரும் கவனம் செலுத்தவில்லை.

ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, மூன்று நிலைகள் உள்ளன. கட்டுமானம், விற்பனை, பராமரிப்பு சார்ந்த செயல்கள். கட்டுமானம் மற்றும் விற்பனையில் பெரியளவுக்கு டெக்னாலஜி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதற்குப் பிந்தைய நிலையில் இன்னும் மாற்றத்துக்கான வாய்ப்பு இருக்கிறது.

வாகனத்துறையில் ஊபர் கொண்டுவந்த மாற்றத்தைப் போல ரியல் எஸ்டேட் துறையில் மாற்றத்தைக் கொண்டு வர நினைத்தோம். ஊபர் சொந்தமாக எந்த காரையும் வைத்திருக்க வில்லை; டிரைவரையும் வைத்திருப்பதில்லை; வாடிக்கை யாளர்களையும் வைத்திருக்கவில்லை. ஆனால், தொழில்நுட்பத் தின் மூலம் இந்த மூன்று தரப்பினரையும் ஒருங்கிணைத்ததன் மூலம் புதிய பிசினஸுக்கு வழிவகுத்தது. இதேதான் நாங்களும் செய்கிறோம். எங்களிடம் கட்டடம் எதுவும் இல்லை; பராமரிப்பு ஆட்களை நிர்வகிப்பதில்லை, மின்சாரம் உள்ளிட்ட எதையும் நாங்கள் கையாளவில்லை. நாங்கள் செய்வது டெக்னாலஜி மூலம் இவற்றை சீர்செய்வது மட்டும்தான்.

பிரபு ராமசந்திரன்
பிரபு ராமசந்திரன்

ரியல் எஸ்டேட் துறையில் மால் ஒன்றை எடுத்துக் கொள்வோம். மால்களில் விடுமுறை நாள்களில் அதிக நபர்கள் வருவார்கள். அதனால் அதிக அளவுக்கு ஏசியும் விளக்கு வெளிச்சமும் தேவைப்படும். ஆனால், விடுமுறை நாள்களில் மழை பெய்தால், பலரும் மாலுக்கு வர மாட்டார்கள். அப்போது அதிகமான ஏசியோ, விளக்கு வெளிச்சமோ இருந் தால், அது வீண்தான். அதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு நபர்கள் இருக்கிறார்கள், எங்கு குளிர்சாதன வசதி தேவை, எங்கு விளக்கு வெளிச்சம் தேவை இல்லை என ரியல் டைம் டேட்டா வழங்க முடியும். இதனால் மனிதவளம் மட்டும் இல்லாமலும் மின்சாரமும் மீதமாகும்.

ஒரு நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் மால் இருக்கிறது எனில், அவற்றை ஒரே இடத்தில் வைத்து கண்காணிக்க முடியும். இதுதான் எங்களுடைய சாஃப்ட்வேர்.

நாங்கள் நான்கு பேர் இணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கினோம். நாங்கள் நால்வருமே ஜோஹோவில் இருந்து தான் வந்தோம். பொருளாதார ரீதியில் பெரிய சிக்கல் இல்லை. அதைவிட முக்கியம்; நாங்கள் ஐடியாவை வைத்தே நிதி திரட்டினோம். நிறுவனம் தொடங்கும் முதல் நாளே எங்களிடம் நிதி இருந்தது. எங்கள் ஐடியாவை ஆக்செல் பார்ட்னர் நிறுவனத்திடம் கூறினோம். ஒரு மில்லியன் டாலர் முதலீட்டுடன்தான் ஆரம்பித்தோம். அதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு டைகர் குளோபல் 6.5 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. சில மாதங்களுக்கு முன்பு 38 மில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டி னோம். அதனால் எங்களுக்கு நிதிச் சிக்கல் இல்லை.

தற்போது சர்வதேச அளவில் எங்களது எல்லையை விரி வாக்கி இருக்கிறோம். எங்களுக்கு துபாய் முக்கியமான சந்தை. அங்கு ரியல் எஸ்டேட் தான் எல்லாமே. அதைத் தொடர்ந்து நியூயார்க். மேலும், பல சர்வதேச நகரங்களில் விரிவாக்கம் செய்யும் பணி களில் இருக்கிறோம்.

‘‘கோவிட் தொற்று நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டது ரியல் எஸ்டேட் துறைதான். கோவிட் சமயத்தில் எங்களுக் குக் கஷ்டம்தான். 2020-ம் ஆண்டு முழுக்க எங்கள் சேவை தேவையில்லை என்கிற நிலை. ஆனால், நாங்கள் தொடர்ந்து எங்களது புராடக்ட்டுகளில் கவனம் செலுத்தினோம். எப்படியும் சந்தை மீண்டுவரும் என்கிற நம்பிக்கை இருந்தது.

மனிதத் தலையீடே இல்லா மல் ரியல் எஸ்டேட்டை நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் 2020-ம் ஆண்டு எங்கள் தேவை பெரி தாகத் தேவைப்படவில்லை. அதன்பிறகு எங்களுக்கான தேவை வேகமாக உயர்ந்தது. தற்போது சர்வதேச அளவில் 12 நாடுகளில் உள்ள பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் எங்களின் வாடிக்கையாளர்கள். எங்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உலக அளவில் இனி அதிகரிக்கவே செய் வார்கள்’’ என உற்சாகமாகப் பேசி முடித்தார் பிரபு.

மாத்தி யோசித்தால், வெற்றி நிச்சயம் என்பதற்கு ஃபெசிலியோ மிகச் சிறந்த உதாரணம்!