Published:Updated:

வரலாறு முக்கியம் மக்களே..! பிரபல பிராண்டுகளின் ஃபிளாஷ்பேக்

பிராண்ட்
பிரீமியம் ஸ்டோரி
பிராண்ட்

பிராண்ட்

வரலாறு முக்கியம் மக்களே..! பிரபல பிராண்டுகளின் ஃபிளாஷ்பேக்

பிராண்ட்

Published:Updated:
பிராண்ட்
பிரீமியம் ஸ்டோரி
பிராண்ட்

வரலாறு என்பது மனித இனத்துக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் உண்டு; நிறுவனங்கள் உருவாக்கி, வெளியிட்ட பிராண்டுகளுக்கும் உண்டு என்பதை சுவாரஸ்ய மாக எடுத்துச் சொல்கிறார் ரம்யா ராமமூர்த்தி. இவர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட `பிராண்டட் இன் ஹிஸ்டரி’ எனும் புத்தகம் இன்றைக்கு பிசினஸ் ரீடர்களிடையே ‘ஹாட் கேக்.’ இந்தப் புத்தகத்திலிருந்து சில பிராண்டு களின் வரலாற்றைப் பார்ப்போம்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

அழகு நட்சத்திரங்களின் சோப்...

குளியல் சோப் என்பது ஏதோ நவீன கால கண்டுபிடிப்பு என நினைத்து விட வேண்டாம். 1850-க்கு முன்பே அது வியாபாரத்துக்கு வந்து விட்டது. இந்தியா, பிரிட்டிஷ்காரர்களின் அதிகாரத்துக்குக் கீழே வந்த பிறகு, லீவர் பிரதர்ஸால் சோப் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மிருகக் கொழுப்பு, கிளிசரின் போன்ற மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அத்துடன், விலையும் அதிகம் என்பதால், சாமான்யர்களால் பயன்படுத்தப்பட முடியவில்லை.

1885-ம் ஆண்டு மிருகக் கொழுப்புக்குப் பதிலாக, வெஜிடபிள் ஆயில் அல்லது பாமாயில் பயன்படுத்தி முதன்முதலாக இங்கிலாந்தில் சன்லைட் சோப் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டது. 1892-ம் ஆண்டு பி.சி.ரே-யால் ஆரம்பிக்கப்பட்ட பெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மாசூட்டிகல் நிறுவன மானது மிருகக் கொழுப்பு இல்லாத `கார்பாலிக்’ சோப் ஒன்றைத் தயாரிக்க ஆரம்பித்தது. அதன் பின், கோத்ரெஜ், டாடா நிறுவனங்களும் குளியல் சோப் தயாரிக்க ஆரம்பித்தன.

இயற்கைப் பொருள் எதுவும் கலக்காத கெமிக்கல்களைக் கொண்டு மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்தியத் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது சந்தைப் படுத்தலில் தலையாய பிரச்னையாக இருந்தது. ஆனால், குளியலுக்கு சோப் உபயோகப்படுத்த வேண்டுமென்பதும், சுதேசிப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டுமென்ற வேட்கையும் மக்களிடையே இருந்ததால் இந்தப் பிரச்னையை வெகுவாகக் குறைத்தது.

1918-ம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி டாடா கொச்சினை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ‘ஒகே கோகோனெட் ஆயில் மில்ஸ்’ என்கிற நிறுவனத்தை விலைக்கு வாங்கி, அதை டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி (TOMCO) எனப் பெயர் மாற்றி சோப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். அதன்பின், ஸ்வதிக் ஆயில் மில்ஸ், ஈஸ்ட் ஏசியாடிக், பாம்பே சோப் ஃபேக்டரி, குஸும் புராடக்ட்ஸ் ஆகியவை ஹமாம், குட்டிக்குரா, வின்ட்சர் போன்ற பிராண்டுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த ஆரம்பித்தன.

1941-ம் ஆண்டு யூனிலீவர் நிறுவனம் `அழகு நட்சத்திரங்களுக்கான சோப்’ என்கிற பெயரில் ‘லக்ஸ்’ சோப்பை விளம்பரம் செய்ய ஆரம்பித்தது. இதற்கு முதன்முதலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட மாடல், நடிகை லீலா சிட்னிஸ். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அதாவது, 1938-ம் ஆண்டு ‘லைஃபாய்’ சோப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வரலாறு முக்கியம் மக்களே..! பிரபல பிராண்டுகளின் ஃபிளாஷ்பேக்

கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் (Godrej and Boyce)

கோத்ரெஜ் குடும்பத்தைச் சேர்ந்த அர்தேஷிர் கோத்ரெஜ் (Ardeshir Godrej) 1918-ம் ஆண்டு இளம் வக்கீலாக ஷான்ஷிபரிலிருந்து (Zanzibar) திரும்பியிருந்தார். அப்போது ஏதாவது தொழில் செய்யலாம் என்றெண்ணி பாம்பேயைச் சேர்ந்த வியாபாரியான மெர்வான்ஜி காமா என்பவரிடம் பணம் கடன் வாங்கினார். மெர்வான்ஜியின் சகோதரரின் மகன் பெயர் `பாய்ஸ் (Boyce)’. ‘இந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் கடனைத் திருப்பித் தர வேண்டாம்’ என்று சொல்ல, அர்தேஷிரும் `பெயரில் என்ன இருக்கிறது? தொழில் ஆரம்பிக்க, நிதி முக்கியம்’ என்று நினைத்து `கோத்ரெஜ்’ என்கிற பெயருடன் `பாய்ஸை’யும் இணைத்துக் கொள்ள, அதுவே அன்றிலிருந்து இன்றுவரை (பாய்ஸ் பிற்பாடு விலகிய பின்னரும்) `கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்’ என அறியப்பட்டு வருகிறது.

அந்த ஆண்டிலேயே (1918) `சாவி (Chavi)’ என்கிற பெயரில் கோத்ரெஜ் நிறுவனம் `பார் சோப்’ ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து கோத்ரெஜ் நம்பர் 1, 2, 3 பிராண்டுகளும் 1952-ம் அண்டு சுதந்திரத் தினத்தன்று `சிந்தால்’ பிராண்டும் சந்தைக்கு அறிமுகமானது. `சிந்தால்’ என்பது `Synthetic with Phenol’ என்பதன் சுருக்கம் ஆகும்.

மைசூர் மகாராஜாவும் மைசூர் சாண்டல் சோப்பும்

1792-ம் ஆண்டு சந்தன மரம் `ராயல் ட்ரீ’ என மைசூரில் பிரகடனப்படுத்தப்பட்டது. அதிலிருந்து சந்தன மரங்களின் மீதான உரிமை மைசூர் மகாராஜாவுக்கே உரித்தானதாக இருந்துவந்தது. இதைத் தொடர்ந்து, 1916-ம் ஆண்டு சந்தனக் கட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு சோப் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று பெங்களூரில் நிறுவப்பட்டது.

சந்தன எண்ணெயிலிருந்து சோப் தயாரிக்கும் முறையைக் கற்பதற்காக சோசலே சாஸ்திரி என்கிற இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அதன்பின் பாம்பேயைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகத்தின் ஆலோசனையுடன் பெங்களூரிலும் மைசூரிலும் இந்த சோப் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த சோப்பை விளம்பரப் படுத்தும் நோக்கத்தில் அப்போது இந்தியாவோடு இணைந்திருந்த கராச்சியில் ஒட்டகங்களின் அணிவகுப்பும் நடந்தது. சுதந்திரத்துக்குப் பின், விப்ரோ உட்பட பல நிறுவனங்கள் இந்தப் பொருளைத் தயாரிக்க ஆரம்பித்தன.

தீப்பெட்டி தயாரிப்பும் சிவகாசியும்...

இந்தியாவில் தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழில் 1895-ம் ஆண்டு ஆரம்பமானது. தீக்குச்சிகளும் முதல் உலகப் போருக்கு முன்பாகவே (1914-க்கு முன்பாக) இந்தியாவின் பல பாகங்களில் உற்பத்தி செய்யப் பட்டு வந்தன. 1894-ம் ஆண்டு இன்றைக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அம்ரித் மேட்ச் ஃபேக்டரி ஆரம்பிக்கப்பட்டது. 1895-ம் ஆண்டில் இஸ்லாம் மேட்ச் ஃபேக்டரி அகமதா பாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1906-ம் ஆண்டு பந்தே மேட்ச் ஃபேக்டரியும் ஓரியன்டல் மேட்ச் ஃபேக்டரியும் கொல்கத் தாவில் ஆரம்பிக்கப்பட்டன. 1929-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான விம்கோ இந்தியாவில் பல இடங்களில் தனது தொழிற்சாலையை நிறுவியது.

கொல்கத்தாவில் இயங்கி வந்த பந்தே மேட்ச் ஃபேக்டரியில் ஆறு மாதம் வேலை பார்த்து விட்டு, 1922-ம் ஆண்டு மிகப் பெரிய திட்டத்துடன் அய்யன் நாடார், ஏ.சண்முக நாடார் என்கிற இரண்டு இளைஞர்கள் சிவகாசி திரும்பினர். இறக்குமதி செய்யப்பட்ட தொழில் நுட்பமும் உள்ளீடுகளும் மட்டும் உற்பத்திக்கு உதவாது என்று நினைத்து, குறைந்த விலையில் உள்ளூரில் கிடைக்கும் மரங்களைக் கொண்டும், உள்ளூர் மக்களை பணிக்கு நியமித்தும் தீக்குச்சிகளைத் தயாரித்து `பெங்கால் லைட்ஸ்’ என்கிற பெயரில் சந்தைப்படுத்த ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் பலரும் தீக்குச்சி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தனர். அதன்பின், வடக்கன்சேரி, விருதுநகர், கருவன்னூர், சாத்தூர், புதுக்கோட்டை எனத் தமிழகமெங்கும் தீக்குச்சித் தயாரிப்பு `தீ’யாகப் பரவியது.

1933-ம் ஆண்டு ராஜாமணி நாடாரால் ஆரம்பிக்கப் பட்ட சாத்தூர் ஒரிஜினல் மேட்ச் கம்பெனி (SOMCO) அதனுடைய `சுப்பீரியர் லாம்ப்’ என்கிற டிரேட்மார்க்கை அதிகாரபூர்வமாக 1946-ம் ஆண்டு பதிவு செய்தார். மிகவும் பழைமையான டிரேட்மார்க்கு களில் இதுவும் ஒன்றாகும். அன்றைக்கே சுமார் 600 பேர் இந்தத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

அந்தக் காலத்தில் தீப்பெட்டிகளில் மற்ற நிறுவனங் களின் விளம்பரங்களும், ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களும் இடம் பெற்றதுடன், அந்த லேபிள்கள் ஒரு சேகரிப்புப் பொருளாகவும் இருந்து வந்தன.

தீப்பெட்டித் தொழிலை மிகப்பெரிய அளவில் செய்து வந்த விம்கோ நிறுவனத்தை 2011-ம் ஆண்டு ஐ.டி.சி வாங்கியது. ஆனால், அடுத்த நான்கு ஆண்டு களில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தமிழகத்தில் இருக்கும் சிறு தொழிற் சாலைகள் தயாரிக்கும் தீப்பெட்டிகளை வாங்கி விற்பனை செய்துவருகிறது.

`சாய் பிஸ்கூட்’ (chai biskoot)

இந்தியாவில் முதன்முதலாக பிஸ்கெட் விற்பனை செய்ய ஆரம்பித்தது, 1892-ம் ஆண்டு ரூ.295 முதலீட்டுடன் (இதன் இன்றைய மதிப்புக்கு ரூ.3 லட்சம்) ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டானியா நிறுவனம் தான். இந்தியாவில் அந்தக் காலகட்டத்தில் வசித்து வந்த ஆங்கிலேயே அதிகாரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் பிஸ்கெட் சப்ளை செய் வதற்காக பிரிட்டானியா நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டது. அந்த நேரத்தில் அனைத்து மத்திய தர குடும்பத்தினரின் வீட்டில் இறக்குமதி செய்யப்பட்ட `ராயல் டான்ஸ்க் குக்கீஸ்’ கட்டாயம் இருக்கும்.

1928-ம் ஆண்டு பாம்பேயில் 12 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட பார்லே நிறுவனம், ஆரம்பத்தில் மிட்டாய்களைத் தயாரித்து வந்தது. இன்றைக்குப் பிரப லமாக இருக்கும் பார்லே-ஜி என்னும் குளுக்கோஸ் பிஸ்கெட் 1939-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது பார்லே நிறுவனம்.

இதுபோல, மருந்துத் தயாரிப்பு, வங்கிகள், துணி உற்பத்தி, இரும்பு உருக்கு மற்றும் கனரகத் தொழில்கள், சிமென்ட் மற்றும் பெயின்ட், வாகனத் தயாரிப்பு மற்றும் சைக்கிள் தயாரிப்பு என பல துறைகள் சார்ந்த பிராண்டுகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டன, அவற்றைச் சந்தைப்படுத்துவதில் இருந்த சவால்கள் என அறியப்படாத பல செய்திகள் இந்தப் புத்தகத்தில் குவிந்து கிடக்கின்றன.

சோப் விளம்பரத்தில் காந்தியின் மகன்..!

மகாத்மா காந்தியின் மகன் ஹரிலால் காந்தி 1920 - 30-களில் இந்தியா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் கோத்ரெஜ் சோப்புக்கான விளம்பரப் பிரசாரத்தில் தானாகவே முன்வந்து பங்கெடுத்துக் கொண்டார். அது போல, அன்னி பெசன்ட், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரும் இறக்குமதி செய்யப்பட்டுவரும் சோப்புகளுக்கு எதிராக நம் நாட்டில் நம்மவர் களால் தயாரிக்கப்படும் கோத்ரெஜ் சோப்புகள் தரமானவை என்று விளம்பரம் செய்தனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism