Published:Updated:

`அறநிலையத் துறைக்குத்தான் ஆசைப்பட்டேன்; ஆனால்..!' - பி.டி.ஆர் பகிர்ந்த சுவாரஸ்யம்

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

``தேர்தலில் வெற்றி பெற்றபிறகு எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்பட்சத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பதவியைப் பெறவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்." - பி.டி.ஆர்

தி.மு.க அமைச்சரவையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் நிதி அமைச்சராக இருக்கும் டாக்டர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரிவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் முன்னாள் மாணவர்கள் நடத்தும் அமைப்பின் (IIMBAA) உறுப்பினர்களுடன் ஜூம் மூலம் கலந்துரையாடினார். சென்னை டை (TiE) அமைப்புடன் இந்தக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதன் சுருக்கம் இனி...

அறநிலையத் துறைக்கு ஆசைப்பட்டேன்!

``தேர்தலில் வெற்றி பெற்றபிறகு எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்பட்சத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பதவியைப் பெறவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். காரணம், என் தந்தை தாத்தா பி.டி.ராஜன், என் தந்தை பழனிவேல் ராஜன் வகித்த பதவி அது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் நிதி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள என்று விரும்பினார். நிதி அமைச்சகத் துறையுடன் மனிதவள மேம்பாட்டுத் துறை என சேர்த்து பெயரையும் மாற்றிவிட்டார்.’’

PTR பழனிவேல் தியாகராஜன்
PTR பழனிவேல் தியாகராஜன்

முதல் பட்ஜெட் எப்படி இருக்கும்?

``என்னுடைய முதல் பட்ஜெட், முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டாக இருக்கும். திராவிட இயக்கத்தின் தத்துவங்களான சமூக நீதியையும், மக்கள் நலனையும் முன்நிறுத்துவதாக அது இருக்கும். பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்குள் இந்த நிதி ஆண்டு ஏறக்குறைய பாதி முடிந்திருக்கும் என்பதால், இடைக்கால பட்ஜெட்டில் சில பல விஷயங்களை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு நான் தாக்கல் செய்யும் பட்ஜெட் உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும். எனக்கு முன் இருந்த நிதி அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் எழுதித் தந்த பட்ஜெட் உரையைத்தான் சட்டமன்றத்தில் வாசித்தார்கள். ஆனால், எனது பட்ஜெட் உரையை நானேதான் எழுதி வாசிப்பேன். சமீபத்தில் ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது என் உரையை நானேதான் எழுதினேன். பட்ஜெட்டில் என் கவனம் அரசின் வருமானத்தை உயர்த்துவதாக மட்டும் இருக்காது. அரசின் சொத்துகளை நிர்வகிப்பதிலும் இருக்கும்.''

அரசின் வரி வருவாய் எவ்வளவு?

``தமிழக அரசின் வரி வருவாய் (SOTR) உள்ளபடி பார்த்தால் ரூ1.75 லட்சம் கோடியாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள நிலையில் ரூ.1.03 லட்சம் கோடியாக மட்டுமே இருக்க வாய்ப்புண்டு. வரி வருவாய் சில இடங்களில் சரியாக வராமல் இருக்கிறது. சில இடங்களில் வரி வசூல் முறையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மது விற்பனை (டாஸ்மாக்) மூலம் ரூ.50,000 - ரூ.55,000 கோடி அரசுக்கு வருமானம் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போது ரூ.30,000 - ரூ.35,000 கோடி மட்டுமே கிடைக்கிறது. அரசுக்குச் சேரவேண்டிய பணம் இதிலும் வராமல் இருக்கிறது.

மக்களுக்கு பலவற்றை இலவசமாகத் தரக்கூடாது என்கிறார்கள். மாநில அரசாங்கங்கள் மட்டுமே இப்படி செய்வதாகவும் சொல்கிறார்கள். இது தவறு. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் கொடுப்பது இலவசம் என்று சொல்ல முடியாது. அது மக்களுக்குத் தேவை. நாங்களும் மக்களுக்குத் தேவையான பொருள்களையும், சேவைகளையும்தான் தருகிறோம். மதிய உணவை மாணவர்களுக்கு வழங்குவது இலவசம் என்று சொல்ல முடியாது. கல்வி, மருத்துவம் என மாநில அரசாங்கள் மக்களுக்குத் தேவையானவற்றைத் தந்தால், அதை இலவசங்கள் என்று சொல்லி, அதை செய்யக்கூடாது என்று சொன்னால், நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.’’

Petrol
Petrol
Photo: Vikatan / K.Rajesekaran
`மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது தற்போது சாத்தியமில்லை’ - பி.டி.ஆர் சொன்னது சரியா?

அரசு வருமானத்தை உயர்த்தும் வழிகள்...

``அரசு வருவாயை உயர்த்தும் வழிமுறைகளை சரிசெய்யாவிட்டால், கடன் பத்திரங்களை வெளியிடுவது மற்றும் அரசு நிலங்களைத் தனியாருக்குத் தந்து, அரசின் வருவாயை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். நிலப் பத்திரங்களை டிஜிட்டல்மயமாக்கி, நில வங்கியை உருவாக்கி, அவற்றைத் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பந்த (lease) முறையில் தருவதன்மூலம் அரசுக்கு மிகப் பெரிய அளவில் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அரசு வருமானத்துக்காக நிலங்களை விற்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், அரசுக்கு அதிக வருமானம் வரும் வழிமுறைகளை சரிசெய்யாவிட்டால், அரசின் வருமானத்தை உயர்த்துவது கடினம் என்பது என் தீர்மானமான முடிவு.’'

பெட்ரோல் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படுமா?

``பெட்ரோலை, ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜி.எஸ்.டி முறை வந்தபின் மாநில அரசுகளின் அதிகாரம் பெருமளவு பறிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பேனாவுக்குக்கூட வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில அரசாங்கங்கள் இழந்திருக்கின்றன. பெட்ரோல், டீசலையும் ஜி.எஸ்.டி.க்குள் வர அனுமதிக்கும் தியாகத்தைச் செய்ய முடியாது!’’

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: "நாங்கள் எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசம்"

ரகுராம் ராஜனை ரகு என்றுதான் அழைப்பேன்!

``முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை அளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவானது, 10, 15 ஆண்டுகள் என நீண்ட காலத் திட்டங்களுக்கான கொள்கைகளை உருவாக்குவதற்கு ஆலோசனை அளிக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த நிபுணர்களுடன் நானும் முதல்வர் ஸ்டாலினும் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசிப்போம். ரகுராம் ராஜனுடன் எனக்கு எப்போதுமே நல்ல தொடர்பு உண்டு. நான் அவரை செல்லமாக ரகு என்றுதான் அழைப்பேன். ஜெயரஞ்சன் தலைமையிலான மாநில வளர்ச்சிக் குழுவானது முன்பு தமிழகத்தின் வளர்ச்சிக்கு திட்டக்குழு செயல்பட்டதுபோல அனைத்து வழக்கமான பணிகளையும் வழக்கம் போல செய்யும்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நிதி அமைச்சர் ஒளிவுமறைவு இல்லாமல் நேரடியாகவும், தெளிவாகவும் பதில் சொன்னது குறிப்பிடத்தக்கது!

அடுத்த கட்டுரைக்கு