Published:Updated:

Live Updates: தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: ``அதிரடி மாற்றங்களுக்கு தமிழக அரசு தயார்!" - பி.டி.ஆர்

Minister PTR Palanivel Thiagarajan
Live Update
Minister PTR Palanivel Thiagarajan ( Photo: Twitter / OfficeOfPTR )

ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், மக்கள் மற்றும் தொழில்துறையினரால் அதிகம் எதிர்பார்க்கப்படும் `வெள்ளை அறிக்கை'யை வெளியிட்டு, அதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கி வருகிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.

09 Aug 2021 1 PM

``வட்டி கட்டவே கடன் வாங்கியிருக்கிறார்கள்!"

``கடன் வாங்கிய தொகை ஒரு ரூபாயாக இருந்தால், அதற்கு இணையாக ஒரு ரூபாயை முதலீடு செய்ய வேண்டும் என்பது சட்டம். ஆனால், எடப்பாடி கடன் வாங்கிய ஒரு ரூபாயில், 50 பைசாவை மட்டுமே முதலீடு செய்திருப்பதாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படித்தான் கடன் வாங்கி கடன் வாங்கி, அந்த கடனுக்கான வட்டி கட்டுவதற்கு கடன் வாங்கி, அந்த வட்டிக்கு வட்டி கட்டுவதற்கு கடன் வாங்குகிற நிலையில் அ.தி.மு.க அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. இது நிச்சயம் அரசியல் மேலாண்மை தவறு.

பெரும்பாலான இடங்களில், பெரும்பாலான துறைகளில் அரசின் ஒத்துழைப்புடன் ஊழல் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை நிச்சயமாக சரி செய்தாக வேண்டும். விரைந்து செய்ய வேண்டியது எங்கள் கடமை."

09 Aug 2021 1 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அதிரடி மாற்றங்களுக்குத் தயார்!"

``தற்போதைய நிதி நெருக்கடியான சூழலில், பொருளாதாரத்தை சீர்படுத்துவதென்பது அதிரடியான மாற்றங்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அதனால், தமிழக அரசு அனைத்து விதமான அதிரடி மாற்றங்களுக்கும் தயாராக உள்ளது.

தமிழ்நாடு பணக்கார மாநிலம், ஆட்சியை ஒழுங்காக நடத்தினால் வருவாயைப் பெருக்க முடியும். உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் வருவாயைப் பெருக்க முடியும்." - பி.டி.ஆர்

09 Aug 2021 12 PM

முறைகேடு நடக்கிறது!

அரசின் மேலாண்மை தவறு காரணமாக, வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கிறது. இதனால் தற்போதைய தமிழக மக்கள் தொகையின் கணக்குபடி, ஒவ்வொரு குடும்பத்தின் தலைமீதும் ரூ.50,000 முறைகேடு தொகையாக போய் விழுகிறது.

தமிழக அரசுக்குச் சொந்தமான விவசாய நிலம் 29 லட்சம் ஹெக்டேர். இதில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தின் அளவு சுமார் 2.05 லட்சம் ஹெக்டேர்.

09 Aug 2021 12 PM

மின்சார மற்றும் போக்குவரத்துத் துறை

போக்குவரத்துத் துறை நிறுவனங்களின் மேலாண்மையும், மின்சாரத் துறைச் சார்ந்த நிறுவனங்களின் மேலாண்மையும் முறையாக இல்லை. இதன் காரணமாக, ஒரு அரசு பேருந்தானது ஒரு கி.மீ தூரம் பயணித்தால், ரூ.59.15 நஷ்டம் ஏற்படுகிறது. இதே போல, ஒரு யுனிட் மின்சார விநியோகத்திற்கும் குறிப்பிட்ட தொகை மின்சார துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதுவே இன்றைய நிலையாகும்.

முந்தைய தி.மு.க ஆட்சியின் போது, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.62%-ஆக இருந்த போது, தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 10.12%-ஆக இருந்தது. ஆனால் தற்போதைய தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் மிகவும் மோசமாக இருக்கிறது.

09 Aug 2021 12 PM

ஒரு நாளைக்கு ₹87.31 கோடி வட்டி

- பல ஆண்டுகளாக, சொத்து வரியை அதிகரிக்கவே இல்லை. இது மிகவும் தவறானது, பணக்காரர்களுக்கு சாதகமானது. அதிக அளவில் கட்டடம் கட்டியவர்களுக்கு, அதிக அளவில் சொத்து சேர்த்தவர்கள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

- தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களுக்கு, ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக கட்டி வருகிறது!

- மின்சாரம் மற்றும் போக்குவரத்துக் கழகம் மட்டுமே சேர்ந்து மொத்தம் ரூ.2 லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார்கள்.

09 Aug 2021 12 PM

மத்திய அரசு வரித்தத்துவத்தை மிகவும் தவறாகக் கையாண்டு வருகிறது. குறிப்பாக செஸ் வரியை அதிகரித்து விட்டார்கள் (மாநில அரசுகளுக்கு பகிர்ந்து கொடுக்கத் தேவையில்லாத வரி).

``ஜீரோ வரி என்பது அர்த்தமற்றது!"

``மக்கள் வாழ்வதற்குத் தகுதியான நாடுகளாக கருதப்படும் ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மாதிரியான நாடுகளில் போடப்படும் பட்ஜெட்டில் உற்பத்தி சதவிகிதம் 20%-30% வரை இருக்கும். சரியான வரி விதிப்பினாலேதான் இந்த நாடுகளுக்கு இது சாத்தியமாகிறது. ஆனால் தமிழகத்தில் வரி விதிப்பு சரியாக இல்லை. இதனால் வருவாய் குறைகிறது. அதே போல மத்திய அரசின் வரி விதிப்பும் முறையாக இல்லை. இதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசிடமிருந்து வந்துசேர வேண்டிய வரி வருமானம் குறைந்துள்ளது.

வரி செலுத்த வேண்டியவர்களிடம், சரியான விகிதத்தில் வரி விதிப்பு செய்து சரியான முறையில் வரியை வசூல் செய்ய வேண்டும். அதனால் சரியான நபர்களிடம், சரியான முறையில், சரியான விகிதத்தில் வரி வசூல் செய்ய வேண்டியது அரசின் திறமையை எடுத்துக் காட்டும். ஜீரோ வரி என்பது அர்த்தமற்ற நடைமுறை. வரி போடாமல் இருப்பது பணக்காரர்களுக்கும், கார்பரேட் நிறுவனங்களுக்கும்தான் சாதகமாகும்."

09 Aug 2021 12 PM

``தமிழகத்தில் வாகன வரி மிகவும் குறைவு!"

``தமிழகத்தின் வாகன வரி கடந்த 15 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் வாகன வரி மிகவும் குறைவாக இருக்கிறது. மின்சார வரியும் தமிழகத்தில் குறைவுதான்." - பி.டி.ஆர்

09 Aug 2021 12 PM

வரி வருவாய் சரிவு!

10 ஆண்டுகளுக்கு முன்பு வரி வருவாய் 11.44%-ஆக இருந்தது. தற்போது 4.4%-ஆகக் குறைந்துள்ளது.

09 Aug 2021 11 AM

- மின்துறை, போக்குவரத்துத் துறையின் கடன் சுமை மிகவும் எச்சரிக்கை அளிக்கக்கூடிய சூழலில் உள்ளது. அரசு உத்தரவாதம் வழங்கினால்தான், பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடன் கிடைக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வாங்க எத்தனித்த கடன்களுக்கு உத்தரவாதம் கொடுக்கவில்லை.

- தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது.

09 Aug 2021 11 AM

``ஒவ்வொரு குடும்பத்தின் தலையின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன்"

``2011-16-ல் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.17,000 கோடி

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை இருக்கிறது.

மாநிலத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால், வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை விட, தமிழகம் கடன் திருப்பிச் செலுத்துவதில் மிகவும் பின் தங்கியுள்ளது.

தற்போதைய நிலையில் தமிழக அரசின் கடன் ரூ.5.24 லட்சம் கோடி. கடந்த நிதி நிலை அறிக்கையின் படி இது நடப்பு நிதி ஆண்டின் முடிவில் ரூ.5.70 லட்சமாக இருக்கலாம்." - பி.டி.ஆர்

``வருவாய் பற்றாக்குறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி!"

``2016-2021-ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த 5 ஆண்டு காலத்தில் மட்டுமே ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கு கொரோனா காலத்தை காரணம் காட்ட முடியாது. கொரோனா தொற்றுக்கு முன்பாக தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ஆரம்பித்துவிட்டது. பஞ்சாப், ஆந்திரா மாதிரியான மாநிலங்களில் கூட இந்த அளவுக்கு வீழ்ச்சி இல்லை." - பி.டி.ஆர்

``தி.மு.க ஆட்சியில் உபரி பட்ஜெட்!"

``கடந்த கலைஞர் ஆட்சியின் போது சில ஆண்டுகள் உபரி நிதி இருந்தது, சில ஆண்டுகள் நிதிப் பற்றாக்குறை இருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளை மொத்தமாக கணக்கிடும் போது உபரி நிதி அளவு இருந்தது. ஆனால் தற்போதைய நிலையில், அதிக அளவு வருவாய் பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது." - பி.டி.ஆர்

09 Aug 2021 11 AM

நிதி நெருக்கடியில் தமிழகம்!

தமிழகத்தின் வருமானம் மிகவும் சரிந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. இதை ஆர்.பி.ஐ அறிக்கையும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கைகளும் தெரிவித்துள்ளன.

``வெள்ளை அறிக்கை வெளியிட நான்கு காரணங்கள்!" - பி.டி.ஆர்

- வெளிப்படைத் தன்மைக்காக,

- கடந்த கால அரசின் செயல்பாடுகளைத் தெரிவிப்பதற்காக,

- எங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அல்லது எதிர்கால நலத்திட்டங்களை நிறைவேற்ற கையிருப்பில் இருக்கும் நிதி விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக

வெள்ளை அறிக்கை வெளியிடும் பி.டி.ஆர்
வெள்ளை அறிக்கை வெளியிடும் பி.டி.ஆர்
படம்: வி.ஶ்ரீனிவாசுலு

- மற்றும் தமிழகத்தின் துறை சார்ந்த நிலவரங்கள் எப்படி இருக்கிறது என்பதை தெரிவிப்பதற்காகவும் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.

மேலும், தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை, தமிழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதையும் இந்த வெள்ளை அறிக்கை சொல்லும்.

09 Aug 2021 11 AM

``இதற்கு முந்தைய வெள்ளை அறிக்கையைவிட இது வித்தியாசமானது!"

``பஞ்சாப், ஆந்திரா என பல மாநிலங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை நாங்கள் ஆய்வு செய்தோம். அதே போல 2001-ல் தமிழகத்தில் அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும் நாங்கள் ஆய்வு செய்தோம். அதனடிப்படையில், அதைவிட தெளிவாக இந்த வெள்ளை அறிக்கையை நாங்கள் தயார் செய்திருக்கிறோம். முந்தைய வெள்ளை அறிக்கையை விட இது வித்தியாசமானது. பல பேர் இந்த ஆய்வறிக்கை தயார் செய்வதற்கு உதவியிருக்கிறார்கள். ஆனால், இந்த வெள்ளை அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால், அதற்கு முழு பொறுப்பும் என்னுடையது மட்டுமே." - பி.டி.ஆர்

09 Aug 2021 11 AM

வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் பி.டி.ஆர்.

தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை தற்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

09 Aug 2021 10 AM

தமிழகத்தின் தற்போதைய கடன்?!

2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி முடிவடையும்போது, கடன் அளவு ரூ.63,848 கோடியாக இருந்தது. 2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு ரூ.1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடன் அளவு கடன் அளவு 4.85 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்று இடைக்கால தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

09 Aug 2021 9 AM
ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், மக்கள் மற்றும் தொழில்துறையினரால் அதிகம் எதிர்பார்க்கப்படும் `வெள்ளை அறிக்கை' இன்று காலை 11:30 மணிக்கு தாக்கலாகிறது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இதை தாக்கல் செய்கிறார். மொத்தம், 120 பக்கங்கள் கொண்டதாக இந்த அறிக்கை தயாராகி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு 2001-ம் ஆண்டு வெள்ளை அறிக்கையானது, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று அது வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்பட இருக்கிறது.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு தயாராகும் நாமக்கல் கவிஞர் மாளிகை
பத்திரிகையாளர் சந்திப்புக்கு தயாராகும் நாமக்கல் கவிஞர் மாளிகை
படம்: வி.ஶ்ரீனிவாசுலு

இந்த வெள்ளை அறிக்கை என்றால் என்ன, இதன் முக்கியத்துவம் என்ன?

பலரும் நினைப்பது போல வெள்ளை நிறத்துக்கும் வெள்ளை அறிக்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை. கறுப்புப் பணம் எப்படி கறுப்பாக இருப்பதில்லையோ. அது போலத்தான். வெள்ளை அறிக்கை என்பது, ஒரு அரசாங்கமோ, ஒரு அமைப்போ, ஒரு நிறுவனமோ ஒரு பிரச்னைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் `வெளிப்படையான' அதிகாரபூர்வமான அறிவிப்பு ஆகும்.

அதாவது, அரசின் தற்போதைய நிதி நிலைமையை, எதிர்கால நடவடிக்கைகளை மக்களிடத்தில் வெளிப்படையாகத் தெரிவித்து அவர்களைத் தெளிவுபடுத்தும் அறிக்கை இது. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வெள்ளை அறிக்கை என்பது `வெளிப்படையான' விளக்கம் தரும் அறிக்கை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு இன்று வெளியிடவுள்ள வெள்ளை அறிக்கையில், நமது மாநிலத்தின் கடன் சுமைக்கு என்ன காரணம் என விரிவாக விளக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், தற்போது மாநில அரசாங்கம் கடன் சுமையால் முழுவதுமாக மூழ்கிப் போயிருக்கிறது. நடப்பு 2021-2022-ம் நிதி ஆண்டின் முடிவில், தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அ.தி.மு.க அரசின் கடந்த பட்ஜெட் தெரிவிக்கிறது.

09 Aug 2021 9 AM

ஏற்கெனவே வாங்கிய சுமார் ரூ.4.85 லட்சம் கடனுக்காக, ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி ரூபாயைக் வட்டியாகக் கட்டிவரும் நிலையில், மேலும் கடன் சுமை அதிகரிப்பது பிரச்னைக்கு உரிய விஷயம். 2011-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, 2020 - 21-ம் நிதியாண்டில் சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

மேலும், 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தனது வருவாய் இலக்கை எட்டவில்லை. செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்ததால், வருவாய் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது. வருவாய் இன்றி திட்டங்களை நிறைவேற்ற கடன்கள் வாங்கியதாலும், அந்தக் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியாலும் ஆண்டுதோறும் செலவினம் அதிகரித்து, பற்றாக்குறை நீடிக்கிறது. கடன்களை எதற்கு வாங்கினார்கள், எப்போது வாங்கினார்கள், அதன் பயன்பாட்டு விவரங்கள் என்ன என்பதை தி.மு.க அரசின் வெள்ளை அறிக்கை விளக்க இருக்கிறது.

இந்த அறிக்கையை தயார் செய்து, அது மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தபின், தமிழக அரசின் முழுமையான நிதி நெருக்கடி என்ன என்பது கடைக்கோடி மக்களுக்கும் தெரியவரும்.