Published:Updated:

தமிழ் புத்தக வெளியீட்டு விழாவில் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கிய பி.டி.ஆர்: நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

``நானும், நிதி அமைச்சரும் இந்த விழாவுக்கு வருகிறோம் என்பதால், ஏதாவது காரசாரமான கன்டன்ட் கிடைக்கும் என நினைத்து மீடியா நண்பர்கள் அலைகடலென திரண்டு வந்திருப்பது தெரிகிறது. ஆனால், உங்களுக்கான கன்டன்ட் இங்கு கிடைக்க வாய்ப்பில்லை." - ஜெயரஞ்சன்

கடந்த 2017-ம் ஆண்டில் சி.பி.சந்திரசேகர், ஜெயதி கோஷ், பிரபாத் பட்நாயக் ஆகிய மூன்று முக்கிய பொருளாதார நிபுணர்கள் இணைந்து எழுதிய 'Demonetisation Decoded: A Critique of India's Currency Experiment' என்கிற புத்தகம் பரவலாக அனைவராலும் பேசப்பட்டது.

அந்த புத்தகத்தை பேராசிரியர்களான செள.புஷ்பராஜ், வே.சிவசங்கர் ஆகியோர், `பணமதிப்பு நீக்கம்: இந்திய நாணயப் பரிசோதனை குறித்த பார்வை' என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து, அதை இன்று சென்னை கத்தீட்ரல் சாலையிலுள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் வெளியிட்டனர்.

 நூல் வெளியீடு
நூல் வெளியீடு

இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவரும் மற்றும் பொருளாதார நிபுணருமான ஜெ.ஜெயரஞ்சன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃபிராங்கோ ராஜேந்திரதேவ் ஆகியோரும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.

முதலில் பேசிய ஜெயரஞ்சன், ``நானும், நிதி அமைச்சரும் இந்த விழாவுக்கு வருகிறோம் என்பதால், ஏதாவது காரசாரமான கன்டன்ட் கிடைக்கும் என நினைத்து மீடியா நண்பர்கள் அலைகடலென திரண்டு வந்திருப்பது தெரிகிறது. ஆனால், உங்களுக்கான கன்டன்ட் இங்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் நான் மிகக் கவனமாகவே பேச ஆரம்பிக்கிறேன். அது உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம்" என நகைச்சுவையாக பேச்சை ஆரம்பித்தார்.

ஜெயரஞ்சன்
ஜெயரஞ்சன்

``2016-ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கம் என்பது, பொருளாதார நடவடிக்கை கிடையாது. அது ஒரு அரசியல் முடிவு. மோடியின் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நிரூபிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது என்பது இந்த புத்தகத்தில் மிகச் சரியாக கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

மோடி தலைமையிலான அரசு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கறுப்பு பணத்தை ஒழிப்போம், கள்ளநோட்டு அச்சடிப்பது குறைக்கப்படும் என பல காரணங்களைச் சொன்னார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அதில் ஒரு காரணம் கூட இன்னும் நிறைவேறவில்லை.

நாட்டை ஒரு சிலருக்காக மாற்றுவது போல, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி உள்பட மோடி தலைமையிலான அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரைத் தொடர்ந்து பேசிய தாமஸ் ஃப்ராங்கோ, ``2016-ம் ஆண்டுக்கு முன்பாக 1946-ல் பணமதிப்பு நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது. மீண்டும் 1975-ல் பணமதிப்பு நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது. ஏனெனில், பண மதிப்பு நீக்கத்தால் கறுப்புப்பணம், ஊழல், தீவிரவாதம், கள்ளநோட்டு அச்சடிப்பு என எதையும் ஒழித்துவிட முடியாது. அப்படி ஊழலை ஒழிக்க வேண்டும் என மோடி அரசு நினைத்தால், மிகப் பெரிய ஊழல் நடக்கும் அரசின் `எலெக்டோரல் பாண்டு (Electoral bonds)' வெளியீட்டைத்தான் முதலில் ஒழிக்க வேண்டும்.

தாமஸ் ஃப்ராங்கோ
தாமஸ் ஃப்ராங்கோ

அதே போல, கள்ள நோட்டு புழக்கத்தைக் குறைப்பதற்காகவும், டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காகவும் பணமதிப்பு நீக்கம் செய்வதாக மத்திய அரசு சொன்னது. ஆனால், கள்ளநோட்டு புழக்கம் என்பது 2016-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதே போல, 2016-ல் 16 லட்சம் கோடி நோட்டுகளாக இருந்த இந்திய கரன்சிகளின் எண்ணிக்கை, தற்போது சுமார் 25 லட்சம் கோடி நோட்டுகளுக்கு மேல் புழக்கத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

பண மதிப்பு நீக்கம்: 5 ஆண்டுகள் நிறைவு; மோடி சொன்ன இந்த 4 நோக்கங்கள் நிறைவேறியிருக்கின்றனவா?

மேலும், பணமதிப்பு நீக்கம், கறுப்புப் பணம் புழங்குவதை எப்படி அதிகரித்திருக்கிறது என்பதை தெரியப்படுத்துவதற்காக, இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படாத ஒரு சில விஷயங்களையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 2016-ல் பணமதிப்பு நீக்கம் நடைபெறும்போது, ``ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிக்குப் பணம் நேரடியாக செல்லாமல், சிலரின் கைகளுக்கு மட்டும் நேரடியாக சென்றிருக்கிறது என நான் சந்தேகப்படுகிறேன்" என இந்நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சரியான விளக்கம் கொடுத்து எந்த அறிக்கையையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஆக, மோடி தலைமையிலான அரசால் சொன்னதை சரியாக நிறைவேற்ற முடியவில்லை என்கிறபோது, `நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் அவருக்கு இருக்கும் கடமைகளிலேயே மிக முக்கிய கடமையாகும்" என்றார் காட்டமாக.

இவர்களைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். தன் பேசின் பெரும்பகுதியை ஆங்கிலத்திலேயே பொளந்து கட்டினார் நிதி அமைச்சர்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

``கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு மோடி பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையை அறிவித்த போது, நான் சிங்கப்பூரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது அதிகாலை 3 மணிக்கு என் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. மோடி அறிவித்திருக்கும் பணமதிப்பு நீக்கம் குறித்து என்னிடம் என் மனைவி தெரிவித்தார். தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அதை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய அரசு மிகப்பெரிய தவறான முடிவை எடுத்திருக்கிறது என்பது விடிந்த பிறகுதான் தெரிந்தது.

பணம்
பணம்
Representational Image
பண மதிப்பிழப்பு நடவடிக்கை... 
நாடு நன்மை அடைந்ததா..?

ஒரு அரசு புழக்கத்தில் இருக்கும் பணத்தை மதிப்பு நீக்கம் செய்கிறது எனில், அதற்கு இணையான மதிப்பு நீக்கம் செய்யப்படாத நோட்டுகளின் எண்ணிக்கை புழக்கத்தில் போதுமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது. அதனால் பாதிக்கப்பட்டது பணக்காரர்கள் அல்ல. பாமர மக்கள்தான்" என்றவர், பெட்ரோல் விலை குறைப்பு உள்பட தி.மு.க அரசின் அரசியல் நடவடிக்கைகள் சிலவற்றை குறிப்பிட்டு பேசிவிட்டு அவசர அவசரமாக அரங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

ஏதோ பெரிசா `விஷயம்' கிடைக்கும் என்று எதிர்பார்த்துவந்த பார்வையாளர்கள் பலரும், பரபரப்பில்லாமல் முடிந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, சுவாரஸ்யம் இல்லாமல் கிளம்பினர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு