Published:Updated:

`கறுப்புப்பணப் பட்டியலை வெளியிட முடியாது!' - மத்திய நிதி அமைச்சகம் கைவிரிப்பு

தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிடுவோம் என்றும், அந்தக் கறுப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம் என்றும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சுவிட்சர்லாந்து வங்கி
சுவிட்சர்லாந்து வங்கி

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிட மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

வங்கி நிதிக்கணக்குகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்து நாட்டோடு ஒப்பந்தமிட்டுள்ள 75 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதன்படி, சுவிட்சர்லாந்து வங்கியில் கறுப்புப்பணம் வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை, தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி சுவிட்சர்லாந்து வங்கி வழங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவற்றை மத்திய அரசு பகிரங்கமாக வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தது. எனவே, அந்தப் பட்டியலை வெளியிடும்படி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கேட்டதற்குத்தான் இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான ரகசியத்தன்மை காக்கும் விதிமுறைப்படி அதைத் தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி கோரமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. வரி தொடர்பாக வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை வெளியிடுவதிலிருந்து, தகவல் அறியும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டத்தின் பிரிவு 8 (1) (அ) மற்றும் 8 (1) (எஃப்) ஆகியவற்றின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan

காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்கான தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிடுவோம் என்றும், அந்தக் கறுப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம் என்றும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால், மோடி தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்தபின்னும்கூட அந்தப் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. கறுப்புப்பணம் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்ற விவரமும் கொடுக்கப்படவில்லை. இன்றுவரை கறுப்புப்பணம் கைப்பற்றப்பட்டது குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களாகவே இருக்கின்றன.