ஏற்கெனவே இருந்த பழைய வருமான வரி வலைதளத்தில், சில பயன்பாட்டுக் குறைபாடுகள் இருந்தன. வருமான வரி தாக்கல் செய்வோருக்கு சில வசதிகள் இல்லாமல்கூட இருந்தது.
அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில், நடைமுறையில் இருந்து வந்த www.incometaxindiaefiling.gov.in என்ற வலைதளம் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக, www.incometax.gov.in என்ற புதிய வலைதளம், கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், அன்றைய தினமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த வலைதளத்தை பலமணி நேரம் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அன்றிலிருந்து, இன்று வரையிலும் வருமான வரித்துறை புதிய வலைதளத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வரி செலுத்துவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். புதிய வலைதளம் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியும், இதில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யாமல் இருப்பது நிதி அமைச்சகத்துக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. வலைதளத்தில் தொடர்ந்து பிரச்னைகள் இருப்பதைக் குறிப்பிட்டு, வலைதளத்தை ஸ்கீரின்ஷாட் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து பயனாளர்கள் அவர்களின் ஆதங்கத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகடந்த ஆகஸ்ட் 21 மற்றும் 22-ம் தேதிகளிலும் தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்வதற்காக வலைதளம் முற்றிலும் செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஆகஸ்ட் 22-ம் தேதி மாலை மீண்டும் இயக்கத்துக்கு வந்தது. அதிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
புதிய வருமான வரி வலைதளத்தில் தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வருவதால், அதை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சலீல் பரேக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் ஆகஸ்ட் 23-ம் தேதி ஆஜராகி விளக்கம் கொடுக்கும்படி சலீல் பரேக்குக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், வருமான வரி வலைதளத்தில் இருக்கும் அனைத்து தொழில்நுட்பக் குறைகளையும் வருகிற செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சரி செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய வலைதளத்தை ரூ.164.5 கோடி செலவில் இன்ஃபோசிஸ் நிறுவனம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
புதிய வருமான வரி வலைதளத்தில் இருக்கும் பிரச்னைகள், பயனாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணனிடம் பேசினோம். ``புதிய வலைதளம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை சின்னச் சின்ன பிரச்னைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆரம்பத்தில் உருவான பிரச்னைகளை எப்படியோ சமாளித்துவிட்டோம்.
ஆனால், வலைதளம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமான சில ஆப்ஷன்கள் இன்னும் இந்த வலைதளத்தில் கொடுக்காமல் இருக்கிறார்கள். அதை எப்போது செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. கடந்த வாரத்தில் ஆதார் ஓ.டி.பி இல்லாமலும் கூட வருமான வரி வலைதளம் இயங்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்படி தொழில்நுட்பக் கோளாறுகள் அதிகம் உள்ள இந்த வலைதளத்தை பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் என்ன ஆகுமோ என்கிற கேள்வியும் எழுகிறது. ஏனெனில், வருமான வரி தாக்கல் செய்வதற்காகக் கடைசி தேதி நெருங்கும் போது ஒரே நாளில் 50 லட்சம் பயனாளர்கள் வருமான வரி தாக்கல் செய்வார்கள். அப்போது இந்த வலைதளம் தாக்குப்பிடிக்குமா அல்லது மறுபடியும் தொழில்நுட்பக் கோளாறுகளில் சிக்குமா என்கிற சந்தேகம் வருகிறது.
கடந்த இரண்டு நாள்களாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த வலைதளம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. நிதியமைச்சர் இன்ஃபோசிஸ் சி.இ.ஓ-வுக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியானதும், அவசர அவசரமாக வலைதளம் சரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கத்துக்கு வந்தது. அதிலும் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன.
வலைதளத்தை உருவாக்கிய பிறகு, அதைச் சோதனை ஓட்டம் பார்க்காமல், அவசர அவசரமாக இயக்கத்துக்கு கொண்டு வந்ததுதான் இந்த பிரச்னைகளுக்கெல்லாம் மிக முக்கிய காரணமாகும். இயக்கத்தில் இருக்கும்போது வலைதளத்தில் இருக்கும் குறைகளை சரிசெய்வதென்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. வருமான வரியை முழுமையாகத் தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாதம்தான் பாக்கி இருக்கிறது. அதற்குள் அனைத்தும் சரி செய்யப்படுமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார் தெளிவாக.
புதிய வருமான வரி வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, `புதிய இணையதளம் குறித்து புரிந்துகொள்ள சிறிது நேரம் ஆகலாம். எனவே, புதிய போர்ட்டல் தொடங்கப்பட்ட பின்னர், ஆரம்பகட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக சிறிது பொறுமை காக்க வேண்டும்' என வருமான வரித்துறை கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் சிக்கல்கள் தொடர்வது வரி செலுத்துவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.