Published:Updated:

21 நாள் ஊரடங்கு... இந்தியப் பொருளாதாரம் பற்றி நிறுவனங்களின் மதிப்பீடும் பரிந்துரைகளும்!

Curfew / Day 2
Curfew / Day 2

21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக நமது பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிப்படையும் எனப் பல பங்கு ஆய்வு நிறுவனங்கள் தங்கள் மதிப்பீட்டை வெளியிட்டிருள்ளன. இந்த மதிப்பீடு ஒவ்வொரு பங்கு ஆய்வு நிறுவனத்துக்கும் வேறுபடுகின்றன.

கடந்த 25-ம் தேதி முதலே நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. கொரோனா நோய் மேலும் பரவாமல் இருக்க வேண்டுமெனில், இந்த ஊரடங்கு உத்தரவு மிகவும் அவசியம். இந்த ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வெளியில் நடமாடுவது குறைந்துள்ளது. கடைகள் மூடப்பட்டு, சேவைத் துறைகள் மட்டும் ஓரளவுக்கு செயல்படுகின்றன.

Curfew
Curfew

தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், உற்பத்தியானது முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கிறது. விவசாயத் துறை மட்டுமே இப்போது ஓரளவு செயல்படும் துறையாக இருக்கிறது. இந்தக் கொடிய நோய் பரவலால் நம் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். உயிரைக் காக்கும் இந்தப் போரில் இந்தப் பொருளாதார பாதிப்புகளை நாம் வேறுவழியில்லாமல் எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது.

நிறுவனங்களின் மதிப்பீடு...

21 நாள் ஊரடங்கு உத்தரவு காரணமாக நமது பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிப்படையும் எனப் பல பங்கு ஆய்வு நிறுவனங்கள் தங்கள் மதிப்பீட்டை வெளியிட்டிருள்ளன. இந்த மதிப்பீடு ஒவ்வொரு பங்கு ஆய்வு நிறுவனத்துக்கும் வேறுபடுகின்றன. பல்வேறு விஷயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மாறுபடுகிறது. பொருளாதாரம் குறித்த மதிப்பீட்டை இந்த நிறுவனங்கள் வெளியிட்டிருப்பதுடன், பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய பரிந்துரையையும் வெளியிட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் பார்ப்போம்.

Curfew
Curfew

பர்க்ளேஸ் மதிப்பீடும் பரிந்துரைகளும்

`21 நாள் ஊரடங்கு முடக்கத்தால், நமது பொருளாதாரம் ஏறக்குறைய 120 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 8.4 லட்சம் கோடி) அளவு பாதிப்புக்குள்ளாகும். இது நமது ஜி.டி.பி.யில் 4% ஆகும்’ என பர்க்ளேஸ் நிறுவனம் மதிப்பீட்டுள்ளது. நமது 2021-ம் ஆண்டு ஜி.டி.பி வளர்ச்சியானது 5.2 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது. தற்போது அது 3.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் எனத் தனது மதிப்பீட்டினை மாற்றியிருக்கிறது.

பர்க்ளேஸ் பரிந்துரைகள்

1. வருகிற ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 165 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு குறைக்கப்பட வேண்டும்.

2. அடிப்படை வட்டி விகிதம் 3.5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

3. நிதிப் பற்றாக்குறை 5% என்கிற அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

கிரிசில் மதிப்பீடும் பரிந்துரைகளும்

2021-ம் ஆண்டில் நமது ஜி.டி.பி 5.7 சதவிகிதமாக இருக்கும் என இந்த நிறுவனம் கடந்த வாரம் சொன்னது. தற்போது இது 5.2 சதவிகிதமாக இருக்கும் எனச் சொல்லியிருக்கிறது. ஊரடங்கு உத்தரவுக்குப் பின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதற்காக இந்த நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

கிரிசில் பரிந்துரைகள்

1. அடிப்படை வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்க வேண்டும்.

2. ஊரடங்கு முடக்கத்தினால் மக்கள் படும் கஷ்டத்தைத் தீர்க்க மத்திய அரசாங்கம் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Representational Image
Representational Image

எடல்வைஸ் செக்யூரிட்டீஸ் மதிப்பீடும் பரிந்துரைகளும்

2021-ல் நமது ஜி.டி.பி 5 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிட்டது. இதிலிருந்து 50 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கோ, அதைவிட கொஞ்சம் அதிகமாகவோ குறையும். ஆனால், வளர்ந்துவரும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டால், நமது பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கும் என இந்த நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.

எடல்வைஸ் செக்யூரிட்டீஸ் பரிந்துரைகள்

1. தற்போதுள்ள நிலையில் வட்டி விகிதத்தை 100 - 200 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதற்கு வாய்ப்புள்ளது.

2. கடன் சந்தையில் மத்திய அரசாங்கம் அடிக்கடி தலையிட்டு, எல்லோருக்கும் எளிதில் கடன் கிடைக்கிற மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. பொருளாதார ஊக்குவிப்புச் சலுகைகள் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.

டி.பி.எஸ் இந்தியா ஈக்விட்டி ரிசர்ச் நிறுவன மதிப்பீடு!

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த ஊரடங்கு முடக்கத்தில் என்ன விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பது பற்றி டி.பி.எஸ் இந்தியா ஈக்விட்டி ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வினை வெளியிட்டிருக்கிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அடுத்த மூன்று வாரங்களுக்கு வருமானம் எதுவும் இல்லாமலே இருக்க வேண்டியிருக்கும். இதனால் யாருக்கும் சம்பளம் தர முடியாத நிலை ஏற்படும். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன், தொழிலை மீண்டும் தொடங்குவதிலும் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், பல நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதில் கஷ்டம் ஏற்படும் என்று டி.பி.எஸ் நிறுவனம் சொல்லியிருக்கிறது.

Curfew
Curfew

இந்தக் கஷ்டங்களிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் காக்க வேண்டுமெனில், இந்த வகை நிறுவனங்களுக்குக் குறுகிய காலக் கடன் தர வேண்டும். ஏற்கெனவே கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடனைத் திரும்பக் கட்டுவதால் ஏதும் பிரச்னைகள் இருந்தால், அதைச் சரிசெய்வதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும். வேண்டுமெனில், இந்த நிறுவனங்களுக்குப் பணப் பரிமாற்றமும் செய்ய வேண்டும்.

பங்கு ஆய்வு நிறுவனங்கள் இப்படிப் பல பரிந்துரைகளைச் சொல்லியிருந்தாலும் இவற்றில் எவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்துவது, புதிதாக என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பதைப் பற்றி மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது!

``வியாபாரம் இயல்புக்கு திரும்ப ஆறு மாசம் ஆகும்!” - கொரோனாவால் நொந்துபோகும் வியாபாரிகள்
அடுத்த கட்டுரைக்கு