Published:Updated:

இசைக்கருவிக்குள் ஒளிந்து தப்பிய ஜப்பான் நிஸான் முன்னாள் சி.இ.ஓ கார்லோஸ் கோன்! ஏன், எப்படி?

கார்லோஸ் கோன் (Carlos Ghosn)
கார்லோஸ் கோன் (Carlos Ghosn)

தெளிவான திட்டத்துடன் சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட்டே இல்லாமல் ஜப்பானிலிருந்து லெபனான் நாட்டுக்கு தப்பித்துச் சென்றுவிட்டார் முன்னாள் நிஸான் சி.இ.ஓ கார்லோஸ் கோன்.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்த நிஸான் மற்றும் மிட்சுபிஷி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோன் ஜப்பானிலிருந்து தப்பித்துவிட்டார். கோர்ட்டில் வழக்கு வருகிறது என்றால் உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனையில் படுத்துக்கொள்வதுதான் இதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால், பணமும், அதிகாரமும் இருந்தால் கஷ்டப்பட்டு நடிக்கத் தேவையில்லை, தப்பித்துவிடலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

Carlos Ghosn with lebanon flag
Carlos Ghosn with lebanon flag
Nikkei Asian Review

ஒரு காலத்தில், மதிக்கத்தக்கத் தொழில் ஆளுமையாக இருந்த கார்லோஸ் கோன், நவம்பர் 2018-ல் வருமான வரி மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானார். இதனால், அவர் நிஸான் மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரெனோ நிறுவனத்தில் இவரின் CEO பதவியும் பறிக்கப்பட்டது.

பிறகு, 45 லட்சம் டாலர் செலுத்தி, ஜாமீன் வாங்கி, டோக்கியோவில் வீட்டுக் காவலில் இருந்துவந்தார். இவரிடமிருந்த பிரான்ஸ், பிரேசில் மற்றும் லெபனான் நாடுகளின் பாஸ்போர்ட்கள் பறிக்கப்பட்டன.

நிஸான்
நிஸான்
Vikatan

ஆனால், சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட்டே இல்லாமல் ஜப்பானிலிருந்து லெபனான் நாட்டுக்கு தப்பித்துச் சென்றுவிட்டார் கோன். இவரைப் பிடிக்க சர்வதேச காவல்துறைக்கு (Interpol) கைது ஆணை பிறப்பித்த பிறகு, மெயில் ஒன்றை அனுப்பியிருக்கிறார். "ஜப்பானின் நீதித்துறை தில்லுமுல்லு செய்கிறது, தண்டனையிலிருந்து நான் தப்பித்து ஓடவில்லை, எனக்கு ஜப்பானில் அரசியல் துன்புறுத்தல் இருக்கிறது" என அந்த மெயிலில் ஜப்பானின் நீதித்துறையைக் கடுமையாகச் சாடியுள்ளார். 

முன்னாள் நிஸான் CEO
முன்னாள் நிஸான் CEO

ஜப்பான் நீதிமன்றங்கள் 99 சதவிகித தண்டனை விகிதத்துக்கு பெயர்போனவை. குற்றம் நிரூபிக்கப்படாமல் 23 நாள் ரிமாண்ட் தரும் அளவு கடுமையானவை என நீதித்துறை மீது விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கார்லோஸ் கோனுக்கு எதிராக நம்பகத்தன்மையான பல ஆதாரங்களை ஜப்பான் அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. கார்லோஸ் கோனின் இந்த முயற்சி தெளிவான விக்டிம் பிளே.

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் ஒரு வாரக் காலம் ஜப்பானில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதைப் பயன்படுத்திக்கொண்டு, பாரா மிலிட்டரியின் உதவியோடு, புத்தாண்டுக்காக தன் வீட்டில் ஓர் இசைக் கச்சேரியை நடத்தியுள்ளார் கோன். கச்சேரி முடிந்தபின் அந்தக் குழுவின் இசைக்கருவிக்குள் மறைந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். பிறகு, ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியால் ஒசாகோ விமானநிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தப்பித்து துருக்கி சென்றுள்ளார். 

அட்டாடர்க் விமானநிலையம்
அட்டாடர்க் விமானநிலையம்

அங்கிருந்து இன்னொரு விமானம் மூலம் லெபனான் சென்றுள்ளார். கார்லஸ் கோன் துருக்கியில் வந்து இறங்கிய அட்டாடர்க் விமானநிலையம் கடந்த ஏப்ரல் மாதமே செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. கார்கோ விமானங்கள் வருவதற்கு மட்டுமே அவ்வப்போது அனுமதி இருக்கும் இந்த இடத்திலிருந்து இவர் தப்பித்துள்ளதால் இஸ்தான்புல் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது 4 பைலட், ஒரு மேனேஜர், 2 ரன்வே ஊழியர்களை இஸ்தான்புல் காவல்துறை கைதுசெய்துள்ளது. ஒரு தனியார் ஏவியேஷன் நிறுவனத்தையும் முடக்கியுள்ளது.

இந்த எஸ்கேப் பிளானுக்காக, டோக்கியோவில் ஒரு டீமை வேலைக்கு அமைத்து, இந்த டீம் மூலம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு டீமை நிர்வகித்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் கோன். இன்டர்போல், கார்லோஸ் கோன் மீது ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இருந்தும், ஜப்பான்-லெபனான் நாடுகளுக்கு இடையே 'extradition agreement' இல்லை என்பதால் இவரை லெபனான் அரசு ஜப்பானுக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் இல்லை. ஜப்பான் கமாண்டர்கள் சீக்ரெட் ஆபரேஷன் நடத்தி, அடால்ஃப் ஈக்மேனைப் போல இவரைக் கடத்திவருவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். 

கார்லோஸ் கோன்
கார்லோஸ் கோன்
புதிதாகப் பரவி வரும் QR code மோசடி - ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களே உஷார்!

நீங்கள் நம்பியே ஆகவேண்டிய உண்மை, தெளிவாகத் திட்டமிட்டு ஜப்பானின் தண்டனையில் இருந்து தப்பித்துவிட்டார் கார்லோஸ் கோன்.

அடுத்த கட்டுரைக்கு