Published:Updated:

பழங்களில் இருந்து ஐஸ்க்ரீம்... ஈரோடு தம்பதியின் வித்தியாச வெற்றி!

விசாலாட்சி, தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
விசாலாட்சி, தியாகராஜன்

தொழில்

பழங்களில் இருந்து ஐஸ்க்ரீம்... ஈரோடு தம்பதியின் வித்தியாச வெற்றி!

தொழில்

Published:Updated:
விசாலாட்சி, தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
விசாலாட்சி, தியாகராஜன்

பழங்கள் மற்றும் காரமான உணவுப் பொருள் களில் ஐஸ்க்ரீம்... இந்த ஒன்லைன் ஐடியாவைப் பிடித்து ஜெயித்துக் காட்டி யிருக்கிறார்கள், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் - விசாலாட்சி தம்பதி. வெணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி... இது போன்ற பழக்கப்பட்ட ஐஸ்க்ரீம் வகையை மட்டுமே சாப்பிட்டுப் பழகியவர் களுக்கு, இவர்களின் வித்தி யாசமான தயாரிப்புகள், ஐஸ்க்ரீம் மீதான பிரியத்தை மேலும் அதிகப்படுத்துவதாக அமைகின்றன.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள ஒட்டர்கரட்டுப் பாளையத்தில் அமைந்திருக் கிறது இந்தத் தம்பதியின் ‘Yesty Food Products’ நிறுவனம். ஐஸ்க்ரீம் தயாரிப்பு வேலைக்கு இடையே, தியாக ராஜன் - விசாலாட்சி தம்பதி, தங்களின் தொழில் அனுபவம் குறித்து நம்மிடம் பேசினார்.

விசாலாட்சி, தியாகராஜன்
விசாலாட்சி, தியாகராஜன்

“2010-ல் மகாராஷ்டிராவுல வேலை செய்துகிட்டிருந்தேன். பால் சார்ந்த தொழிலுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைக்கும்ங்கிறதால, பண்ணைக்காரங்ககிட்ட பால் கொள்முதல் செஞ்சு, கோயம்புத்தூர்ல வீடுதோறும் விற்பனை செஞ்சேன். கூடவே, பனீர், தயிர்னு சில மதிப்புக்கூட்டுப் பொருள் களிலும் கவனம் செலுத்தி னேன். அப்ப நான் வெளியூர் வேலையில இருந்ததால, அந்தத் தொழில்ல முழுமையா கவனம் செலுத்த முடியலை. இதுக்கிடையே, குஜராத்துல சில காலம் வேலை செஞ்சேன்.

ஐஸ்க்ரீம் தயாரிப்புக்குப் பெயர்போன குஜராத்துல தெருவுக்குத் தெரு ஐஸ்க்ரீம் கடைகள் இருக்கும். வருஷம் முழுக்கவே ஐஸ்க்ரீமுக்கு வரவேற்பு இருக்கிறதால, இந்தத் தொழிலை நம்மூர்ல ஆரம்பிக்கலாமேனு யோசனை வந்துச்சு...” என்றவர், 2015-ல் வேலையை விட்டு விட்டு, சொந்தத் தொழிலைத் தொடங்கினார்.

பழங்களில் இருந்து ஐஸ்க்ரீம் தயாரிக்கும் முயற்சி குறித்து ஆரம்பித்த விசா லாட்சி, “ஐஸ்க்ரீம் பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத் ததும், இந்தத் துறையில நாம என்னவா இருக்கப் போறோம்னுதான் முதல்ல யோசிச்சோம். பெரிய நிறுவனங்கள்ல இருந்து உள்ளூர் தயாரிப்புகள் வரை ஏற்கெனவே நிறைய போட்டி யாளர்கள் இருக்கிற சூழல்ல, நமக்கான இடத்தைத் தக்க வைக்க ‘மாத்தி யோசி’ச் சாதான் நிலைச்சு நிற்க முடியும்ங்கிறது திட்ட வட்டமா புரிஞ்சது. அதனால தான், பழங்கள்ல இருந்து ஐஸ்க்ரீம் தயாரிக்கத் திட்ட மிட்டோம். வட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டுல பல இடங்களுக்கும்போய் ஐஸ் க்ரீம் தயாரிப்புக்கான பயிற்சி களைப் பெற்றோம். பிறகு, ரூ.25 லட்சம் முதலீட்டுல இந்தத் தொழிலை ஆரம்பிச்சோம்.

பழங்களைப் பயன்படுத்தி ஐஸ்க்ரீம் தயாரிக்கலாம்னு முடிவெடுத்தாலும், அதுல எவ்வளவு சதவிகிதம் பழங்கள் சேர்க்கணும், எந்தெந்த பழங் களைப் பயன்படுத்தணும்ங்கிற விஷயமெல்லாம் எங்களுக்குத் தெரியலை. பலகட்ட சோதனை முயற்சிக்குப் பிறகு, சரியான தயாரிப்பு முறையைக் கத்துக்கிட்டோம். கொள்முதல் செஞ்ச மொத்த பால்லயும் கொழுப்புச்சத்து ஒரே அளவுல இருக்காது. சில அடிப்படை செயல்பாடுகளுக்குப் பிறகு, ஐஸ்க்ரீம் தயாரிப்புக்கான ‘பேஸ் மில்க்’ தயாராகிடும். அதனுடன், நறுக்கிய பழங்களைக் கூழாக்கி, அதை 30% அளவுக்குச் சேர்ப்போம். தயாரான கலவையை, குளிர்விப்பு யூனிட்டில் வெச்சிருந்தா, ஐஸ்க்ரீம் தயாராகிடும். ஆரம்பத்துல தினமும் 25 லிட்டர் பால் கொள்முதல் செஞ்சு, குறைவான அளவுலதான் ஐஸ்க்ரீம் தயாரிச்சோம். ஆனா, அதை விற்பனை செய்யவே ரொம்ப சிரமப்பட்டோம். விசேஷங்கள், திருவிழாக்கள், உள்ளூர் கடைகள், பார்ட்டி ஆர்டர்கள்னு எல்லா விதமான விற்பனைக்கான வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கிட்டோம். அதிக அளவுல ஃப்ரீ சாம்பிள் கொடுத்தோம்.

பழங்களில் இருந்து ஐஸ்க்ரீம்... ஈரோடு தம்பதியின் வித்தியாச வெற்றி!

இந்தத் தொழிலை ஆரம்பிச்சப்ப பலா மற்றும் கொய்யா பழங்கள்ல மட்டுமே ஐஸ்க்ரீம் தயாரிச்ச நிலையில, அத்தி, முலாம் பழம், சீதா, மா, எலுமிச்சைனு பலவிதமான பழங்கள்ல ஐஸ்க்ரீம் தயாரிச்சோம். நிறைய ஃப்ளேவர்களை உருவாக்கணும்னு பச்சை மிளகாய், இஞ்சி, வெற்றிலை போன்ற காரமான உணவுப் பொருள்களை அரைச்சு சாறு எடுத்து, அதை 5% அளவுக்குச் சேர்த்து ஐஸ்க்ரீம் தயாரிக்க ஆரம்பிச்சோம். மேலும், பேரீச்சை, பஞ்சாமிர்தம், குல்கந்து, ஸ்வீட் பீடா, புதினா போன்றவற்றிலும் ஐஸ்க்ரீம் தயாரிக்கிறோம். கப், கோன், பாக்ஸ், குல்ஃபி, ஃபரூடா, மில்க் ஷேக்னு பலவிதங்கள்லயும் ஐஸ்க்ரீம் விற்பனையை செய்றோம்.

குறித்த காலகட்டத்துக்குள்ளாற விற்பனை ஆகலைன்னா, லாபம் கிடைக்காட்டியும் பரவா யில்லைனு ஆஃபர்ல வித்திடுவோம். இப்ப தினமும் 200 லிட்டர் பால் கொள்முதல் செய்றோம். இப்போதைக்கு எங்களுக்கான வருமானத்தைவிடவும், இந்தத் தொழில்ல காலூன்றி நல்ல பெயர் எடுக்கிறதைத் தான் முதல் இலக்கா வச்சிருக்கோம்” என்கிறார் பெருமிதத்துடன்.

கோபிசெட்டிபாளையம், ஒட்டர்கரட்டுப் பாளையம், ஈரோடு ஆகிய ஊர்களில் ‘சில் பைட்’ என்ற பெயரில் உணவகங்களையும் இவர்கள் நடத்திவருகின்றனர். தவிர, 30 டீலர்கள் மற்றும் 30 தள்ளுவண்டிக்கடை விற்பனையாளர்கள் (Mobile vendors) தங்களின் ஐஸ்க்ரீமை விற்பனை செய்கின்றனர். ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.1 கோடி டேர்ன்ஓவர் செய்யும் இவர்கள், அடுத்தடுத்த கட்ட இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்.

“நல்ல வருமானம் கிடைக்கிற வேலையை விட்டுட்டு, ‘பிசினஸ் பண்றேன்னு ஏன் சிரமப் படுறீங்க?’னு பலரும் கேட்பாங்க. யார் என்ன சொன்னாலும், பிசினஸ்ல எவ்ளோ ஏற்ற இறக்கம் வந்தாலும், எடுத்த முடிவுல மாற்றமே கிடையாதுனு உறுதியா இருந்தோம். அதேபோல, பேங்ல லோன் வாங்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், வாடிக்கை யாளர் வட்டாரத்தை அதிகப்படுத்தவும் ரொம்பவே சிரமப்பட்டோம். அனுபவம்தான் பெரிய ஆசான்னு சொல்றது போல, ஆரம்பத்துல இருந்த தயக்கம், பயம் இப்ப முழுமையா நீங்கிடுச்சு. பல வெற்றிகரமான முயற்சிகளுக்கு, தோல்விகள் தான் பாடம் கத்துக்கொடுக்கும். அதனால, எங்க நம்பிக்கையைக் கைவிடாம தொழிலை விரிவு படுத்துறல கவனம் செலுத்துறோம்.

கோடைக் காலத்துல ஐஸ்க்ரீம் விற்பனை அதிகமா இருக்கும். மத்த காலங்கள்ல வெளிநிகழ்ச்சிக் கான ஆர்டர்களுக்கு முக்கியத் துவம் தந்து உற்பத்தி குறையாம பார்த்துப்போம். நான் ஐஸ்க்ரீம் தயாரிப்பு விஷயங்கள் எல்லாத் தையும் பார்த்துக்கிறேன். மார்க்கெட்டிங், விற்பனை சார்ந்த விஷயங்களை என் கணவர் பார்த்துக்கிறார்” என்று விசாலாட்சி சொல்ல, தங்களின் எதிர்கால இலக்கு குறித்துச் சொன்னார் தியாகராஜன்.

“காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி தொழில்ல புதுமைகளைப் புகுத்தினால்தான் ரொம்ப காலத் துக்குத் தாக்குப்பிடிச்சு வளர முடியும். அதனாலதான், நாங்க தயாரிக்கும் ஃபுரூட்ஸ் ஐஸ் க்ரீமுக்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சதும், வெவ்வேறு பழங்கள்ல இருந்தும் ஐஸ்க்ரீம் தயாரிக்கிறதுக்கான சோதனை களைப் பண்ணிட்டு இருக்கோம். சான்விச், பீட்சா, பர்கர், கட்லெட், டீ, காபினு பல்வேறு உணவுகளையும் எங்க உணவகங் கள்ல விற்பனை செய்றோம். இப்ப கோவைலயும் புது அவுட்லெட் தொடங்கியிருக் கோம். இந்தியா முழுக்க எங்க தயாரிப்புகளைக் கொண்டு போகிற பெரிய இலக்கை நோக்கி பயணிக்கிறோம்” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.