Published:Updated:

பல கோடி வருமானம் தரும் பழனி பஞ்சாமிர்தம்!

பழனி
பிரீமியம் ஸ்டோரி
News
பழனி

ஜி.ஐ பிசினஸ்

பழனி என்றாலே அங்கிருக்கும் முருகனும் பஞ்சாமிர்தமும்தான் நினைவுக்கு வரும். பழனிக்குப் போகிறவர்கள் குறைந்தது ஒரு டப்பா பஞ்சாமிர்தத்தை யாவது வாங்காமல் வரமாட்டார்கள். மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் விளையக்கூடிய ஐந்து வகையான பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தயாராகும் பஞ்சாமிர்தத்துக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அங்கீகாரமான புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டோம். அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள்.

பல கோடி வருமானம் தரும் பழனி பஞ்சாமிர்தம்!

திண்டுக்கல், கவுந்தம்பாடி, போடி...

‘‘வாழைப்பழம், கரும்பு சர்க்கரை, பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து பொருள்கள் கொண்டு பிரசாதம் தயாரிக்கப்படுவதாலே, பஞ்சாமிர்தம் என்ற பெயர் வந்தது. இதில் கூடுதல் சுவைக்காக கற்கண்டு, பேரிச்சம்பழம் சேர்க்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் விளையக்கூடிய வாழைப்பழம், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து கரும்பு சர்க்கரை, ஆவினில் இருந்து பசுநெய், லைன் டேட்ஸ் நிறுவனத்தில் இருந்து தேன், பேரீச்சம்பழம், போடியிலிருந்து ஏலக்காய் எனப் பல பொருள்களைக் கொள்முதல் செய்கிறோம்.

கரும்பு சர்க்கரை மெட்ரிக் டன் அளவுகளில் வாரம்தோறும் தேவைக்கு ஏற்றவாறு கொள் முதல் செய்வோம். வாழைப் பழம், கற்கண்டு, பேரீச்சம்பழம் ஆகியவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்கிறோம். இதனால் இடைத்தரகர்கள் இன்றி விவசாயி களுக்கு உரிய விலை கிடைக்கிறது. பழனி பஞ்சாமிர்தத்தைத் தயாரிப்பதன்மூலம் ஏலக்காய் விவசாயிகள், வாழை விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

திருக்கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்களின் வருகையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம். அதன் அடிப்படையிலும் கடந்த ஆண்டு வருகையை ஒப்பிட்டும் தேவைக்கேற்ப பஞ்சாமிர்தம் தயார் செய்யப்படுகிறது. இதற்கென பழனி அடிவாரத்தில் இரண்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயார் செய்யப்படுகிறது. இதற்காக மேற் பார்வையாளர்கள், லேப் டெக்னிஷியன்கள், லோடுமேன்கள், இயந்திரத்தை இயக்குவோர், பஞ்சாமிர்தத்துக்குத் தேவையான பொருள் களை சரிவிகிதத்தில் கலப்பதற்கான ஊழியர் கள் என மொத்தம் 50 பேர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுகின்றனர்.

பல கோடி வருமானம் தரும் பழனி பஞ்சாமிர்தம்!

மாதம் 15,000 டப்பா...

கார்த்திகை, மார்கழி மாதங்கள் மற்றும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற திருவிழாக் காலங்களில் 50,000 முதல் 60,000 டப்பாக்கள் தயாரிக்கப்படுகின்றன. பிற மாதங்களில் 10,000 முதல் 15,000 டப்பாக்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. அனைத்து டப்பாக்களும் அரை கிலோ அளவுகொண்டது. பிளாஸ்டிக் டப்பா என்றால் 35 ரூபாய், லேமினேசன் டின் டப்பாக்கள் என்றால் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ரூ.30 கோடிக்கு விற்பனை...

இதேபோல, கிப்ஃட் பாக்ஸில் 12 டப்பாக்கள் இருக்கும் ஒவ்வொரு டப்பாவும் 200 கிராம் கொண்டது. இந்தப் பாக்ஸ் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரை ஆறு மாதங்களுக்கு அதிகமான பக்தர்கள் வருகை இருக்கும். குறிப்பாக, கார்த்திகை, மார்கழி காலங்களில் ஐயப்பப் பக்தர்கள் பழனிக்கு அதிகமாக வருவார்கள். இதனால் பஞ்சாமிர்த விற்பனையும் அதிகமாக இருக்கும். பஞ்சாமிர்த விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். அதே அளவுக்கு செலவும் இருக்கும்.

பஞ்சாமிர்தம் தயாரிப்பில் ஒரு செட் என்பது 1,024 டப்பாக்களைக் கொண்டது. இதற்காக எவ்வளவு வாழைப்பழம், தேன், ஏலக்காய், கரும்பு சர்க்கரை, நெய் சேர்க்க வேண்டும் என அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் நடக்காதவாறு மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். இந்தத் தயாரிப்பு பணிகளும் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. தரத்தையும் சுத்தத்தையும் கண்காணிக்கவும், பஞ்சாமிர்தம் தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களும் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, பணி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பல கோடி வருமானம் தரும் பழனி பஞ்சாமிர்தம்!

30 நாள் வரை கெடாமல் இருக்கும்...

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்குத் தினமும் நெய்வேத்தியம் நடக்கும். அந்த நெய் தேவஸ்தானம் மூலம் தயாராகும் பஞ்சாமிர்தம் அனைத்திலும் கலந்து வழிபாடு செய்த பிறகே, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்துக்கும் தேவஸ்தானம் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்துக்கும் இதுவே வித்தியாசம் ஆகும். தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் 15 நாள்கள் முதல் 30 நாள்கள் வரை கெடாமல் இருக்கும். இதன்மூலம் கோயில் நிர்வாகத்துக்கு எவ்வித லாபமும் இல்லை. பஞ்சாமிர்த விற்பனை வருமானம் மீண்டும் பஞ்சாமிர்தம் தயாரிப்புக் கான மூலப்பொருள்கள் வாங்கவும் தயாரிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

குறிஞ்சி நிலத்தில் விளைவிக்கப்படும் பொருள்களைக் கொண்டு மதிப்புக்கூட்டு பொருளாக பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, புவிசார் குறியீடுக்காக 2017-ல் விண்ணப்பித்தோம். ஓராண்டாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பல கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர். பிறகு, கோயில் நிர்வாகத் தரப்பினரிட மும் பஞ்சாமிர்தம் தயாரிப்பு குறித்து கேட்டறிந்தனர். இதன் பிறகுதான் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளா வில் இருந்தும் அதிகமான பக்தர்கள் பழனிக்கு வருகின்றனர். மேலும், வட மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து செல்கின்றனர். ரோப் கார் வசதி வந்த பிறகு அதிகமான வர்கள் பழனிக்கு வருகிறார்கள். அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு, செல்லும்போது, தவறாமல் திருக்கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்துடன் செல்லத் தவறுவதில்லை’’ என்றனர்.

பாரம்பர்ய முறையில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு...

பழனியில் கந்தவிலாஸ், சித்தனாதன் உள்ளிட்ட நிறுவனங்களும் பாரம்பர்யமாக பஞ்சாமிர்த தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆரம்பக் காலங்களில் மனிதர்களால் பஞ்சாமிர்தத்துக்குத் தேவையான பொருள்கள் கலக்கப்பட்டு வண்டு கட்டுதல் எனும் முறையில் மண்சட்டியில் துணி வைத்து மூடி, பிறகு விற்பனைக்குக் கொடுத்துள்ளனர். இந்த முறையில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருந்துள்ளது. பழனி அடிவாரத்தில் உள்ள மக்கள் குடிசைத் தொழிலாக பஞ்சாமிர்த தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும், சர்க்கரை அளவுகளுக்கு ஏற்ப கூலி கொடுத்தும் பஞ்சா மிர்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பெறுகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு தானியங்கி இயந்திரங்கள் வந்த பிறகு, வேலையாட்கள் அதிகம் தேவைப்படவில்லை. மேலும், இயந்திரம் மூலம் குறைந்த நேரத்தில் அதிக அளவு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. இதனால் குடிசைத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் விபூதி, ஊதுபத்தி, பேரீச்சம்பழம், கற்கண்டு விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். பழனியில் உள்ள பெரிய கடைகளில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பஞ்சாமிர்தம் விற்பனையாகிறது. சிறிய கடைகளில் சராசரியாக ஒரு நாளுக்கு 20,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சுப்பிரமணி
சுப்பிரமணி

இதுகுறித்து பழினியில் நான்கு தலைமுறைகளாக பஞ்சாமிர்த விற்பனையில் ஈடுபட்டிருக்கும் ஆண்டவர் ஸ்டோர்ஸ் உரிமை யாளர் சுப்பிரமணியிடம் பேசி னோம். ‘‘எங்கள் கடை 1930-ல் தொடங்கப்பட்டது. போகர் முருகனை வழிபடும்போது பஞ்சா மிர்தத்தால் அபிஷேகம் செய்தார். அது மக்களுக்கு பிர சாதமாக வழங்கப்பட்டது. பிற்காலத்தில் பழனி அடிவாரத்தில் பஞ்சாமிர்தம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. தொடக்கத்தில் கைகளில் கலவையிட்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 15 ஆண்டுக்கு முன் தேவஸ்தானம் பஞ்சாமிர்தத் தயாரிப்புக்கு தானியங்கி இயந்திரம் வாங்கியது. அதைத் தொடர்ந்து பழனியில் உள்ள இரு பெரிய நிறுவனங்களும் தானியங்கி இயந்திரம் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கத் தொடங்கின. இதன் பிறகு, சிறிய அளவில் தொழில் செய்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது பெரிய நிறுவனங்கள் மூலம் ஒரு நாளைக்கு ஒரு டன் வரை வியாபாரம் நடக்கிறது. அதற்கு அடுத்தபடியாக உள்ள 10 கடைகளில் 200 கிலோ வரை வியாபாரம் நடக்கிறது. 10 முதல் 20 கிலோ வரை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய 10 கடைகளிலும் எங்களிடம் மூலப் பொருள்கள் வாங்கித் தயாரிக்கின்றனர்.

பொதுவாக, 250 கிராம், 500 கிராம், 1 கிலோ அளவு டப்பாக்களில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. 250 கிராம் 20 ரூபாய்க்கும், 500 கிராம் 40 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் தயாரிப்புத் தொழிலை மட்டும் நம்பி பழனியில் நூறு குடும்பங்கள் உள்ளன. சிறிய கடைகள் பஞ்சாமிர்தம் விற்பனையில் பெரிய அளவில் வருமானம் கிடைக்காவிட்டாலும், விபூதி, ஊதுபத்தி, குங்குமம் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை மூலம் சமாளித்து வருகின்றனர் என்றார். பஞ்சாமிர்த்தம் விற்பனை இனி கனஜோராக நடக்கட்டும்!