நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

‘‘தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யத் தயார்..!’’ உறுதி அளித்த உலகத் தமிழர்கள்!

மாநாடு...
பிரீமியம் ஸ்டோரி
News
மாநாடு...

ஸ்டார்ட்அப்

தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் தொழில் களுக்கான பேச்சும் சிந்தனையும் மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்பாக ஏதோ ஒரு கூட்டம் நடந்துகொண் டிருக்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் தமிழ் தொழில்முனை வோர்கள், தங்களை வளர்த்த தாய்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த குளோபல் தமிழ் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்கள் மாநாட்டை அதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

கடந்த 9-ம் தேதி சென்னையில் உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், புத்தொழில் தொடங்குவதற்கான முதலீட் டாளர்களை ஒருங்கிணைக்கவும் சர்வதேச தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ஃபெட்னா இன்டர்நேஷனல் தமிழ் தொழில்முனைவோர்கள் கூட்டமைப்பு (FITEN), தமிழக அரசின் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது. ஸ்டார்ட்அப் தமிழ்நாடு மிஷன் இயக்குநர் சிவராஜா ராமநாதன், ஃபிடென் தலைவர் கணபதி முருகேஷ், ஃபெட்னா தலைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் மாநாட்டை ஒருங்கிணைத்தனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரன், மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்கள், நூற்றுக்கும் மேலான ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

குளோபல் தமிழ் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்கள் மாநாடு...
குளோபல் தமிழ் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்கள் மாநாடு...

இந்த மாநாட்டின் முக்கிய அம்சம் தொழில்முனைவோர் களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும் விதமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக www.tamilangels.fund என்ற பிரத்யேக இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் இந்த மாநாட்டில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த இணையதளத்தில் புத்தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்களும், புத்தொழில் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களும் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவிலேயே தொழில் தொடங்க சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையே இதற்குக் காரணம். தமிழகத்தில் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலை உறுதி செய்வதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. பெண்கள் தொழில் தொடங்கவும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் நுட்ப வசதிகள், ஒப்புதல்கள் வேகமாக கிடைக்க வழிவகை செய்தல் எனத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தமிழகம் தொழில் தொடங்க ஏற்ற இடமாக மாறியிருக்கிறது.

2022-ல் புத்தொழில் முதலீடுகள் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செய்யப் பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளைவிட 70% அதிகம். புத்தொழில்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வளர்ச்சி யில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய முதலீட்டாளர்களை வரவேற்கிறேன்” என்றார்.

முதல் கட்டமாக அமெரிக்கவாழ் தமிழ் தொழில் முனைவோர்கள், தமிழக ஸ்டார்ட்அப் தொழில்களில் ரூ.16 கோடி முதலீடு செய்ய உள்ளதாக மாநாட்டிலேயே அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த மாநாட்டில் தமிழகத்தில் புத்தொழில் தொடங்குவதில் உள்ள வாய்ப்புகள், சவால்கள், திறன் வளர்த்தல், பெண்கள் தொழில் தொடங்குவதற்கான சூழல் எனப் பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.

இதில் சிறப்புரை ஆற்றினார் ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ ஶ்ரீதர் வேம்பு. “இந்தியாவில் திறமைக்குப் பஞ்சம் இருப்பதைப் போன்ற ஒரு பார்வை இருக்கிறது. ஆனால், உணமையான பிரச்னை திறமையானவர்களை நாம் அடையாளம் காண்பதில்லை என்பதுதான். உலகின் முன்னணி நிறுவனங்களில் உயர்பதவியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இன்னும் சரியாகச் சொன்னால், முன்னணி நிறுவனங்களின் பணியாளர்களில் 30 - 40 சதவிகிதத்தினர் இந்தியர்கள்.

ஜோஹோவில் இப்போது 12,000 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானாவர்கள் கிராமத்தைச் சேர்ந்த வர்கள். இந்தியாவின் டாப் கல்லூரிகளில் படிக்காத, தமிழ் மீடியத்தில் படித்த கிராமத்து இளைஞர்கள். இவர்களிடம் இருக்கும் திறமையைக் கண்டறிவதுதான் ஜோஹோவின் முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.

ஶ்ரீதர் வேம்பு
ஶ்ரீதர் வேம்பு

தமிழகத்தில் 5,000-க்கும் மேலான டவுன்ஷிப்கள் உள்ளன. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேலான டவுன்ஷிப்கள் உள்ளன. இங்குள்ள இளைஞர்களிடம் திறமையைக் கண்டறிந்தால், உலகத் தரத்திலான முன்னணி நிறுவனத்தை இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் நம்மால் உருவாக்க முடியும். அதுதான் ஜோஹோவின் இலக்கும் கூட.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜோஹோவின் ஊழியர்கள் எண்ணிக்கையை 25,000-ஆக உயர்த்தத் திட்டமிருக்கிறோம். தற்போது 3 பில்லியன் டாலர் நிறுவனமாக இருக்கும் ஜோஹோவை, விரைவில் 30 பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்த்தெடுக்க கிராமத்து இளைஞர்களின் திறமை முக்கிய மான அம்சமாக இருக்கும். அதே போல, இன்று தென்காசியின் கிராமங்களில்கூட வேகமான இணையச் சேவைகள் கிடைக் கின்றன. உள்கட்டமைப்புகள் மேம் பட்டிருக்கின்றன. தொழில் செய்வதற்கான இடமும், பணி யாளர்களும் எளிதாகக் கிடைக் கின்றனர். எனவே, தொழில் தொடங்க சரியான ஐடியாதான் தேவையாக இருக்கிறது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த இலக்கை மிக எளிதாக எட்டு வதற்கான அனைத்து திறன்களும் இங்கு உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அவர் பேசினார்.

மாநாட்டில் இன்னோசன்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் ‘நான் முதல்வன்’ திட்டத்தைப் பற்றிப் பேசினார். ‘‘பட்டப்படிப்புகள் படித்திருந் தாலும் துறை ரீதியான திறன்கள் போதுமானதாக இல்லை என்ற குறை தொழில்துறையினரிடம் காணப்படுகிறது. இந்த இடை வெளியைச் சரிசெய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம். தொழில் துறையினரின் எதிர்பார்ப்பை அறிந்துகொண்டு, அந்த தேவை யைப் பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களிடம் திறன்களை வளர்க்கும் முயற்சியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி செயல் படுத்தி வருகிறோம்” என்றார்.

அதையடுத்து சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் வி.காமகோடி பேசினார். “இந்தியாவில் ஐடியாக்களுக்கு குறைவில்லை. ஏராளமான ஐடியாக்கள் இளைஞர்களிடம் இருக்கின்றன. அவற்றை எப்படி ஒரு புராடக்டாக, சேவையாக மாற்றுவது என்பதற்கான திட்டம் தான் அவர்களிடம் இல்லை.

ஐ.ஐ.டி-யின் சென்னை வளாகத்தில் ஐந்து இன்கு பேட்டர்களை இளைஞர்களுக்காகவே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஹெல்த் செக்டார், கிராமப்புற வளர்ச்சி, நிதித்துறை எனத் தனித்தனியாக இன்குபேட்டர் களை வடிவமைத்திருக்கிறோம். இதுவரை 300 நிறுவனங்கள் இந்த இன்கு பேட்டர்களில் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு ஐடியாவிலும் ஐ.ஐ.டி இன்குபேட்டர்கள் சில ஆயிரங்களை முதலீடு செய்ததன் விளைவு, இன்று அது கோடிகளாக மாறியுள்ளது. இந்தியாவில் டயர் 2, டயர் 3 நகரங்களில் ஐடியா வேட்டையை நடத்த வேண்டும். இதைப் பெரிய அளவில் செய்தோம் எனில், நிச்சயம் இந்தியாவே வியக்கும் வண்ணம் ஐடியாக்களை உருவாக்க முடியும். ஐ.ஐ.டி இன்குபேட்டர்கள் மூலம் 3,000 நிறுவனங்களை உருவாக்கும் இலக்கு வைத்துள்ளோம்” என்று பேசினார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் அனைவருமே ஸ்டார்ட்அப் தொழில்களில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர். ஸ்டார்ட்அப் தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் தமிழகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையை இந்த மாநாடு உருவாக்கியிருக்கிறது. தமிழகத்திலிருந்து பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி அவை யுனிகார்ன்களாக, மல்ட்டி மில்லியன் நிறுவனங்களாக உருவெடுக்கும் என்று நம்புவோம்.

‘‘தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப்களில்
முதலீடு செய்யத் தயார்..!’’ உறுதி அளித்த உலகத் தமிழர்கள்!

பெண்கள் போராடி ஜெயிக்க வேண்டும்!

தமிழகத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கான இடம் என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றிய விவாதம் இந்த மாநாட்டில் நடந்தது. சாம்பியன்வுமன் குளோபல் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் ஃபவுண் டேஷன் தலைவர் ரஞ்சனி மணியன், ஃபிடென் துணைத் தலைவர் ஜானகி கொவ்தா, அனுஹாசன், எழுத்தாளர் கல்பனா மோகன், வி.ஐ.டி உதவி துணைத் தலைவர் காதம்பரி விஸ்வநாதன், எஸ்.பி.ஐ வங்கி அட்வைஸர் சந்தியா சேகர் உள்ளிட்டோர் விவாதத்தில் கலந்துகொண்டனர்.

‘‘பெண்கள் வெளி உலகத்தில் போராடி ஜெயிப்பதற்குமுன் தனக்குள்ளேயே போராடி ஜெயிக்க வேண்டியிருக்கிறது. விமர்சனங்களைப் பிரித்தறியத் தெரிந்துகொள்ள வேண்டும். தேவையற்ற கருத்துகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் முன்னேற வேண்டும்’’ என்று அவர்கள் பேசியது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக இருந்தது.