பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

அலுவலகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனம்..!

ஶ்ரீவத்சன், ஷியாம்சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீவத்சன், ஷியாம்சுந்தர்

ஸ்டார்ட்அப்

கோவிட் வந்த பிறகு, தினசரி அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்கிற அவசியம் பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது. இருக்கும் இடத்தில் இருந்தே வேலை அல்லது வீட்டில் இருந்தே வேலை என்னும் நிலைமைக்கு மாறியிருக்கிறது. இந்த நிலையில், அலுவலகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கோ ஃப்ளோட்டர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் நிதியைப் (Startup TN) பெற்றது. அதைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன் முதல்கட்ட நிதியை லாயல் வி.சி நிறுவனத்திடம் இருந்து திரட்டியது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஷியாம்சுந்தர் நாக ராஜனுடன் பேசினோம். கோவிட்டுக்கு முன்னும், பின்னுமான அவரது தொழில் பயணத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அலுவலகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனம்..!

‘‘நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். ஐ.ஐ.டி வாரணாசியில் பிடெக் முடித்தேன். சிவில் படித்ததால் அதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால், டெக்னாலஜி நிறுவனத்தில் தான் வேலை கிடைத்தது. கொஞ்ச நாள் வேலை செய்துவிட்டு எம்.டெக் படிக்கலாம் என்றுதான் சாஃப்ட்வேர் துறையில் சேர்ந்தேன். ஆனால், அங்கு சேர்ந்தவுடன் டெக்னாலஜி பிடித்துவிட்டது. ஆரம்பத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து காக்னிசன்ட் என முக்கியமான நிறுவனங்களில் இந்தியா மட்டுமன்றி, சர்வதேச நகரங்களில் பணியாற்றினேன்.

காக்னிசன்ட் நிறுவனத்தில் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. அங்கு நாம் ஒரு ஐடியா கொடுத்து, அந்த ஐடியா ஓகே ஆகும் பட்சத்தில், அதற்குத் தேவையான மனித வளத்தைக் கொடுத்து அதை வடிவமைக்கச் சொல்வார்கள். 2012-ம் ஆண்டு சமயத்தில், காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஒரு தீர்வை உருவாக்குவது தொடர்பாக ஒரு ஐடியா கொடுத்தேன். அந்த ஐடியாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. அந்த ஐடியாவை மேம்படுத்தும் பணியில் இருந்தேன். இந்த சேவைகளை முக்கியமான காப்பீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தின.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தொழில்முனைவில் ஃபெல்லோஷிப்புக்கு வாய்ப்பு கிடைத்தது. டெக்னாலஜி குழுவையும் கையாள முடியும்; தொழில்முனைவு குறித்தும் நல்ல புரிந்துகொள்ளல் இருந்ததால் காக்னிசன்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறத் திட்டமிட்டேன்.

இந்த நேரத்தில்தான் சென்னையில் பெரு வெள்ளம் மற்றும் வர்தா புயல் வந்தது. அப்போது தனிமனிதர்களுக்கு எவ்வளவு இழப்புகள், சேதங்கள் ஏற்பட்டன என்றுதான் பலரும் பார்த் தார்கள். ஆனால், எனக்கு எவ்வளவு தொழில்கள் மூடப்பட்டன என்பது குறித்து மட்டுமே கவலை யாக இருந்தது.

வெளிநாடுகளில் தொழில்களுக்குக் காப்பீடு என்பது அவசியம். ஆனால், இங்கு தனிநபர் காப்பீடே குறைவாக இருக்கும்போது தொழில் காப்பீடு குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை. தவிர, தொழில்களுக்குக் காப்பீடு எடுப்பது என்பது சவாலானது. தீ விபத்து, வெள்ளம், மனிதவளம் எனப் பலவற்றைக் காப்பீடு செய்ய வேண்டும். அதனால் இது குறித்து யாரும் யோசிக்காமலே இருந்தனர்.

ஏற்கெனவே காப்பீட்டுத் துறையில் அனுபவம் இருக்கிறது, தொழில் காப்பீட்டுக்குத் தேவையும் இருக்கிறது என்பதால், பாலிசி பஜார் போல சிறு நிறுவனங் களுக்கேற்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு வேலையை விட்டேன்.

சிறு நிறுவனங்களுக்குத் தேவையான காப்பீட்டு ஆலோசனை வழங்குவது மற்றும் அவர்களுக்கு எந்த வகையான பாலிசி தேவை என்பதைக் கண்டறிவதுதான் வேலை. காலையில் வீட்டில் இருந்து கிளம்பினால் தொடர்ந்து நிறுவனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு மீட்டிங் முடிந்து மற்றொரு மீட்டிங்குக்கு இடைவெளி இருக்கும். ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு சென்று வர முடியாது. அதனால் கஃபேகளில் உட்கார்ந்து வேலை செய்வேன். காபி அல்லது டீ வாங்க வேண்டியிருக்கும். இது பெரிய செலவாக இருந்தது. அப்போது சில உணவகங்களில் ‘சாப்பிட எதுவும் வேண்டாம். சில மணிநேரங்களுக்கு உங்கள் இடத்தைப் பயன்படுத்த வேண்டும். சார்ஜ் ஏற்றும் பாயின்ட் மற்றும் வைஃபை கட்டணத்தை மட்டும் செலுத்து கிறேன்’ என்று நான் சொன்னதை சில உணவகங்கள் ஏற்றுக் கொண்டன.

இதை நண்பர்களிடம் சொன்னபோது அவர்களும் இதுபோன்ற சேவையை எதிர் பார்த்தது எனக்குத் தெரிந்தது. அந்த இடங்களை சிலருக்குப் பரிந்துரை செய்தேன். இதற்கான தேவை உயர்ந்துகொண்டே வந்தது.

இந்தச் சூழலில் என் மென் டார் சுகுமார் ராஜகோபாலனை சந்தித்தேன். இன்ஷூரன்ஸுக்கு பதில் இதை ஏன் தொடரக் கூடாது என்று நான் அவரிடம் கேட்க, ‘ஐடியா சிறப்பாக இருக் கிறது. இதை சந்தை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு முன் உதாரணம் கிடையாது. அதனால் சோதனை அடிப் படையில் முயற்சி செய்யலாம். நன்றாக வந்தால் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல லாம்’’ என்றார்.

காபி ஷாப் உணவகங்களில் உட்கார இடம் மட்டுமே கிடைக் கும். இந்தச் சேவையை பலர் பயன்படுத்தினார்கள். இதன் அடுத்தகட்டமாக புரஜெக்டர் ஸ்க்ரீன் உடன் மீட்டிங் ஹால் தேவைப்பட்டது. இந்தச் சூழலில் என் நண்பர் பிரவீன்சேகரை சந்தித்து உரையாடினேன். அவருடைய அலுவலகத்தில் உள்ள கான்பஃரன்ஸ் ஹாலை சில மணி நேரங்களுக்குப் பயன் படுத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார்.

ஶ்ரீவத்சன், ஷியாம்சுந்தர்
ஶ்ரீவத்சன், ஷியாம்சுந்தர்

இந்தப் பிரிவில் நல்ல வளர்ச்சி கண்டுவந்தோம். இந்தச் சூழலில் என் நண்பர் ஶ்ரீவத்சனும் என்னுடன் தொழிலில் இணைய விருப்பம் தெரிவித்தார். 2018-ம் ஆண்டு இறுதியில் என்னுடன் இணைந்தார்.

காபி ஷாப், கான்ஃபரன்ஸ் ஹாலைத் தொடர்ந்து ஒவ்வொரு அலுவலகத்திலும் கூடுதல் இடங்கள் இருக்கும். 20% இடத்தைத் தேவைக்காக எப்போதும் வைத்திருப்பார்கள். இந்த இடங்களை சிறு நிறுவனங் களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று யோசித்தோம். அதிலும் வெற்றி கிடைத்தது. இதற்கான டெக்னாலஜியை உருவாக்கினோம். பல அலுவல கங்களில் உள்ள கூடுதல் இடத்தை நாங்கள் பயன்படுத்தினோம். சென்னையுடன், கோவை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் விரிவாக்கம் செய்தோம். எங்கள் குழுவும் 14-ஆக உயர்ந்தது. மாதம் ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டி வந்தோம்.

அப்போதுதான் கோவிட் வந்தது. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அலுவலகம் கிடையாது என்பதால், எங்கள் தேவை குறைந்தது. அதனால் சப்ளையை உயர்த்தும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டோம். நான்கு நகரங்களில் இருந்து 16 நகரங்களில் சுமார் 400 அலுவலகங்களை எங்களுடன் இணைத்தோம். ஆனால், வருமானம் இல்லை.

முதல் அலை முடிந்தவுடன் பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களின் அலுவலகங்களை கேன்சல் செய்துவிட்டார்கள். ஆனால், முதல் அலை முடிந்தவுடன் பெரிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கினோம். நார்டன் பிரஸ் நிறுவனத்துக்குத் தேவையான அலுவலக வசதியை நாங்கள் செய்துகொடுத்தோம். பி2சி என்னும் மாடலில் இருந்து பி2பி மாடலுக்கு மாறினோம். அதாவது, நிறுவனங்களுக்கு அலுவலகம் தேவைப்படாது. ஆனால், பணியாளர்கள் வசதிக்கேற்ப வேலை மற்றும் மீட்டிங் இடம் தேவைப்படும். அந்த வசதியை வழங்கத் தொடங்கினோம்.

இந்தச் சூழலில் இரண்டாம் அலை வந்தது. அது மிக கொடூரமாக இருந்தது. ஆனால், இரண்டாம் அலை முடிந்த பின் நல்ல வளர்ச்சி இருந்தது. முன்பு அலுவலகங்களில் உள்ள கூடுதல் திறனைப் பயன்படுத்தினோம். ஏற்கெனவே கோ-வோர்க்கிங் அலுவலகங்கள் நிறைய இருந்தன. தற்போது அவற்றை இணைக்கும் பணியைத் தொடங்கினோம். முக்கிய மான நகரங்களைத் தவிர்த்து, ராஞ்சி, ஜலந்தர் உள்ளிட்ட அடுத்தகட்ட நகரங்களில் உள்ள கோ-வொர்க்கிங் அலுவலகத் தையும் இணைத்தோம்.

சார்ஜ்பீ எங்களுடன் இணைந்தது மிகப்பெரிய திருப்பு முனை. சார்ஜ்பீ நிறுவனத்துக்கு அலுவலகம் கிடையாது. ஆனால், இந்தியா முழுவதும் பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடைய டெக்னாலஜி மூலம் எங்கு வேண்டு மானாலும் அலுவலகத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பயன்பாட்டுக்கேற்ப சார்ஜ்பீ எங்களுக்குப் பணம் தந்துவிடும். இப்போது எங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில் 25-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நடுத்தர முதல் பெரிய நிறுவனங்கள் ஆகும். எங்களுடைய மொத்த வருமானத்தில் 80% அளவுக்கு கோ–வொர்க்கிங் இடத்தைப் பயன்படுத்துவதில் இருந்து கிடைக்கிறது. மீதமுள்ளவை அலுவலகங்களில் உள்ள கூடுதல் இடத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கிறது’’ என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் ஷியாம்சுந்தர்.

கோவிட்டுக்குப் பிறகு, அலுவலகத்துக்கான தேவை குறைந்தாலும் புதிய வாய்ப்புகளும் உருவாகி இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை!