Published:Updated:

கைகொடுக்கும் தேங்காய் நார்... அள்ள அள்ள லாபம்! - தஞ்சையில் கலக்கும் தென்னைத் தொழில்!

தேங்காய் நார்
பிரீமியம் ஸ்டோரி
News
தேங்காய் நார்

ஒரு காலத்தில் தூக்கி எறியப்பட்ட தேங்காய் நார் கழிவுகள் இன்று லட்சக்கணக்கில் லாபம் தரும் ஒரு பொருளாக மாறியுள்ளது!

ஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தென்னை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால், தென்னை சார்ந்து நடைபெறக்கூடிய ஏராளமான தொழில்கள் இங்கு நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தேங்காயை உறித்த பிறகு அதிலிருந்து கிடைக்கும் மட்டையை மெஷினில் அரைத்து கயிறு தயாரிக்கப் பயன்படும் நார் எடுக்கப்படுகிறது. நார் எடுக்கக்கூடிய சிறிய, பெரிய அளவிலான கயிறு பேக்டரிகள் இங்கு ஏகப்பட்டவை செயல் படுகின்றன.

மட்டையை அரைக்கும்போது மெஷினிலிருந்து நார், சிறிய அளவிலான தூள் என இரண்டுவிதமாக வெளியே வரும். மட்டையிலிருந்து கிடைக்கும் தூள் எதற்கும் பயன்படாமல் இருந்ததால், அவற்றைக் கழிவுகளாக வீதியில் கொட்டி தீ வைத்து எரித்ததும் தொடர்ந்தது. தற்போது அந்தக் கழிவுகளே கயிறு பேக்டரி நடத்தும் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கில் லாபம் கொடுத்து தாங்கிப் பிடிக்கிறது.

கைகொடுக்கும் தேங்காய் நார்... அள்ள அள்ள லாபம்! - தஞ்சையில் கலக்கும் தென்னைத் தொழில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பேராவூரணியைச் சேர்ந்த ராஜாமுகமது என்பவர், பர்வீன் கயிறு பேக்டரி என்ற பெயரில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 10 வருஷத்துக்கும் மேலாக அவர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நாம் ராஜாமுகமதுவிடம் பேசினோம்.

‘‘தேங்காய்களை உறித்த பிறகு, அவற்றிலிருந்து கிடைக்கும் மட்டைகளை மெஷினில் அரைத்தால் கயிறு தயாரிக்க பயன்படக்கூடிய நார் கிடைக்கும். நரம்பு போல் நீளமாக இருக்கும் நாரைத் திரித்தே கயிறு உற்பத்தி செய்யப்படும். மட்டைகளை அரைக்கும்போது சிறிய அளவிலான தூள்களாகவும் வெளியே வரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அவை எதற்கும் பயன்படாமல் இருந்ததால், கழிவுகளாக எண்ணி பலரும் சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து எரித்தனர். என்னைப் போன்று இந்தத் தொழில் செய்துவந்த அனைவரும் தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் கழிவுகளை என்ன செய்வது எனத் தெரியாமலும் கொட்டிவைக்க இடமில்லாமலும் புலம்பித் தவித்தோம்.

ராஜாமுகமது
ராஜாமுகமது

அந்தச் சமயத்தில், தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளாகக் கருதப்பட்ட தூளுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து மெள்ள அதில் கவனம் செலுத்தினேன். மட்டைக் கழிவுகளை கேக் வடிவில் கட்டியாகத் தயாரித்து ஏஜென்ட் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தேன். தொடக்கத்தில் பலவிதமான பிரச்னைகள், சின்னச் சின்ன இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. நாளடைவில் இதிலுள்ள சூட்சுமங்களைத் தெரிந்துகொண்ட பிறகு, நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது.

தேங்காய் மட்டையை மெஷினில் வைத்து அரைக்கும்போது அவை நாராகவும் தூளாகவும் மெஷினிலேயே தனித்தனியாக வெளியே வந்துவிடும். நார்களைத் தமிழகத்தின் பல மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடு களுக்கும் அனுப்புகிறேன். தேங்காய் நாரிலிருந்து கயிறு, மெத்தை, அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன.

சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த வகை பொருள்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேங்காய் நாரில் ஓரளவுக்கு வருமானம் கிடைத்தாலும் உடல் உழைப்புக்கு ஏற்ற அளவில் முழுப் பயன் கிடைக்கவில்லை. பல சமயம், நஷ்டத்தைச் சுமக்கக்கூடிய சூழலும் ஏற்பட்டது. ஆனால், மட்டையிலிருந்து கிடைக்கும் தூளை கேக் செய்து ஏற்றுமதி செய்யத் தொடங்கிய பிறகு நிலைமை மாறி நஷ்டத்திலிருந்து தப்பித்ததுடன், நிறைவான வருமானமும் கிடைத்தது.

அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கொரியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தக் கட்டிகள் ஏற்றுமதி ஆகிறது. அனைத்துச் செலவும் போக மாதம் ரூ.3.5 லட்சம் லாபம் கிடைக்கிறது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெஷினிலிருந்து வெளியேறிய தூள் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். அதை அப்படியே கேக் வடிவில் கட்டியாகத் தயார் செய்து ஏற்றுமதி செய்யலாம். ஆனால், அவை குறைந்த அளவே லாபம் கிடைக்கும். இது போன்ற கட்டிகளை வெளிநாடுகளில் வாங்கி அவற்றைத் தூளாக்கி கோழிப் பண்ணைகளில் தரைப்பகுதியில் பெட் போன்று அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். விலங்குகள் வளர்க்கவும் பயன்படுத்துகின்றனர். தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால், இதைக் கீழ்ப்பகுதியில் வைத்து, சிறுநீரை உறிஞ்ச செய்கின்றனர்.

ராஜாமுகமது
ராஜாமுகமது

உப்புத்தன்மை கொண்ட மட்டைத் தூளைத் தரைப்பகுதியில் பரப்பி வைத்து தண்ணீரை நன்றாகத் தெளித்து காய வைக்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் தூளைக் கொட்டி நன்கு கழுவி எடுத்து, பின்னர் உலர்த்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் அதிலிருக்கும் உப்புத்தன்மை வெளியேறிவிடும். உப்புத்தன்மை இல்லாத கட்டிகளுக்கு விலை கூடுதலாகக் கிடைப்பதுடன் அதற்கான தேவைகளும் அதிகமாக இருக்கின்றன. உப்புத்தன்மை நீக்கப்பட்டவை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் மட்டைத் தூளைச் சலித்து எடுத்து மெஷினில் கொட்டினால் அதுவே கேக் வடிவில் கட்டியாக்கி வெளியே அனுப்பிவிடும். அந்தக் கட்டிகளை மரப்பலகையால் செய்யப்பட்ட சட்டத்தில் அடுக்கி வைத்து, பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். இதற்கென தனியாக ஏஜென்டுகள் உள்ளனர். அவர்கள் மூலமாகவே இவை ஏற்றுமதியாகிறது.

5 கிலோ, 65 கிராம், 30 கிராம், 10 கிராம் போன்ற எடைகளில் கட்டிகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. 5 கிலோ கேக் 80 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் தன்மை கொண்டது. வெளிநாடுகளில் கேக்கை வாங்கி மறுபடியும் தூளாக்கி மாடித்தோட்டம், புல்தரை அமைப்பது, காய்கறிச் சாகுபடி, மரக்கன்றுகள் வளர்ப்பது போன்ற எளிய முறையான விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்டார் பெர்ரி போன்ற பழங்கள் விளைவிக்கவும் பயன்படுத்துகின்றனர். மிகச் சிறிய அளவிலான கட்டியில் விதைகளை ஊன்றி மரக்கன்றுகள் வளர்த்து வருகின்றனர். சொட்டுநீர் முறையைப் பயன்படுத்தியும் இதன்மூலம் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீர் தேவை அதிகமிருக்காது என்பதே இதன் பயன்பாடு அதிகமானதற்கு முக்கியமான காரணம். குறிப்பாக, பாலைவனப் பிரதேசங்கள், பனிப் பிரதேசம் என எல்லா கால சூழ்நிலைக்கும் கைகொடுப்பதால், இதற்கான தேவைகள் அதிகமாகி இருப்பதுடன் இதன்மூலம் நல்ல முறையில் விவசாயமும் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் புல்தரைகள் அமைக்கவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஸ்டார் ஹோட்டல்களில் புல்தரை அமைக்க மாடி, பால்கனியில் செடிகள் வளர்க்க பயன்படுத்தப் படுகின்றன.

30 செ.மீ நீள, அகலத்தில் 12 செ.மீட்டர் அடர்த்தியுடன் 5 கிலோ கட்டி தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். தூளாகவே அனுப்பினால் வெளிநாடுகளுக்கு ஏற்றிச் செல்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், கட்டிகளாகத் தயார் செய்து அனுப்புகிறோம். ஒரு கிலோ கேக் ரூ.26-க்கும், ஒரு டன் ரூ.26,000-க்கும் விற்கிறோம்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, ஐரோப்பியா, சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தக் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அனைத்துச் செலவும் போக மாதம் ரூ.3.5 லட்சம் லாபம் கிடைக்கிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணியில் மட்டும் சுமாராக சிறிய அளவில் 50, பெரிய அளவில் 5 ஃபேக்டரிகள் செயல்பட்டு வருகின்றன. தென்னை மரங்கள் நிறைந்த அனைத்துப் பகுதியிலும் இந்தத் தொழில் நடைபெறுகிறது.

கஜா புயலால் இப்பகுதியிலிருந்த ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதால், தேங்காய் மட்டை தட்டுப்பாடு அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் தேவை அதிகமிருந்தும் குறிப்பிட்ட அளவே தயார் செய்ய முடிகிறது’’ என்றார் ராஜாமுகமது. ஒருகாலத்தில் கழிவுகளாகத் தூக்கி எறியப்பட்ட பொருள் இப்போது எல்லோருக்கும் கைகொடுத்து உதவுவது ஆச்சர்யம்தான்!