Published:Updated:

`11 ஆண்டுகளைவிடப் பெரிய சரிவை இந்திய ஜி.டி.பி சந்திக்கக் கூடும்!' - தேசிய புள்ளியியல் துறை கணிப்பு

ஜி.டி.பி வளர்ச்சி
ஜி.டி.பி வளர்ச்சி

2019-20 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு இருக்குமென்ற முன்கூட்டிய கணிப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சிவிகிதம் 5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 11 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மிகக்குறைவான ஜி.டி.பி வளர்ச்சி விகிதமாகும். கடந்த 2008-09 நிதியண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சிவிகிதம் 3.1 சதவிகிதமாக இருந்தது. அதன்பிறகு இதுவே குறைவான வளர்ச்சிவிகிதமாகும். கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாக இருந்தது.

ஜி.டி.பி வளர்ச்சி
ஜி.டி.பி வளர்ச்சி

நடப்பு நிதியாண்டு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு இருக்குமென்ற முன்கூட்டிய கணிப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், துறைவாரியான பொருளாதார வளர்ச்சி விகிதங்களை அளித்துள்ளது. இந்த புள்ளிவிவரத்தில், கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில், பெரும்பாலான துறைகளில் பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்திக்குமெனத் தெரியவந்துள்ளது.

ஜி.டி.பி உயர... மக்கள் நலன் காக்க... அரசு செய்யவேண்டிய 5 அதிரடிகள்!

உற்பத்தித்துறையைப் பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில் 6.9 சதவிகிதமாக இருந்து, ஜி.டி.பி வளர்ச்சி தற்போது 2 சதவிகிதமாகச் சரிவடையும் என்று கணித்துள்ளது. கட்டுமானத்துறையில், 8.7 சதவிகிதத்திலிருந்து 3.2 சதவிகிதமாக மிகப்பெரிய சரிவைச் சந்திக்கக்கூடும் என்றும் சேவைத்துறையின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டில் 7.5 சதவிகிதமாக இருந்து தற்போது 6.9 சதவிகிதமாகக் குறையுமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை 7 சதவிகிதத்திலிருந்து 5.4 சதவிகிதமாகவும், நிதித்துறை 7.4 சதவிகிதத்திலிருந்து 6.4 சதவிகிதமாகவும் குறையுமென்று கணிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சுரங்கத்துறை, பொது நிர்வாகம், பாதுகாப்புத்துறை போன்ற சில துறைகளில் மட்டும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி முதல் தேதியில் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டுக்கான திட்டமிடலில் இந்தப் புள்ளிவிவரங்கள் பயனளிப்பதாக இருக்கும். இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரியக்கூடுமென்று பல்வேறு பொருளாதார நிபுணர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் எச்சரித்ததையே கணிப்புகளும் சொல்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு