Published:Updated:

நகரங்களுக்கும் வருகிறதா 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்? அரசு பரிசீலனை

கிராமப்புற வேலைவாய்ப்பு
கிராமப்புற வேலைவாய்ப்பு ( vikatan )

நகர்ப்புற பகுதிகளில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் அப்பகுதிகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பவர்களை ஓரளவு மீட்டிட உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸானது உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல நாடுகளிலும் கடுமையான பொருளாதார வீழ்ச்சி, அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இதற்கு, இந்தியாவும் விதிவிலக்கல்ல. பாதிப்புகளில் இருந்து மீள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நகரப் பகுதிகளுக்கும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நகரம்
நகரம்
விகடன்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் இணைச் செயலர் சஞ்சய் குமார் இந்தத் திட்டம் தொடர்பாக ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் பேசும்போது, ``இந்தத் திட்டமானது ஆரம்பத்தில் சிறிய நகரங்களில் செயல்படுத்தப்படலாம். சுமார் ரூபாய் 350 பில்லியன் வரை இந்த திட்டத்துக்குச் செலவாகலாம். மத்திய அரசானது கடந்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தற்போது நிலவும் நெருக்கடியான சூழல் இதுதொடர்பான முடிவுகளை விரைவில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் அடிமட்ட நிலையிலுள்ள மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் நிலையை இந்தக் கொரோனா நெருக்கடி சூழல் ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கான புதிய வழியை இந்தத் திட்டம் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

`6,000 வேலைவாய்ப்பு; ரூ.5,137 கோடி முதலீடு!’ - தமிழக அரசு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள வேலை வாய்ப்புத் திட்டங்களுக்காக இந்த ஆண்டு மட்டும் சுமார் 1 டிரில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை அமைத்தல், கிணறு தோண்டுதல் போன்ற பணிகளை இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் செய்து வருகின்றனர். சுமார் 27 கோடி மக்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்பை இது தருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு ரூபாய் 202 வீதம் 100 நாள்கள் சம்பாதித்தும் வருகின்றனர். தற்போது, நகர்ப்புற பகுதிகளில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் அப்பகுதிகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பவர்களை ஓரளவு மீட்டிட உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 12.1 கோடி பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்திய பிறகு, வேலையிழப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு