Published:Updated:

Income Tax: புதிய வலைதளம் மூலம் வரி செலுத்திய 2 கோடி பேர்; தீர்ந்துவிட்டனவா பிரச்னைகள்?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``புதிய வருமான வரி வலைதளத்தைப் பயன்படுத்தி தற்போது வரை இரண்டு கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இருந்த பழைய வருமான வரி வலைதளத்தில், சில பயன்பாட்டுக் குறைபாடுகள் இருந்ததால், அதை நிவர்த்தி செய்யும் வகையில், நடைமுறையில் இருந்துவந்த www.incometaxindiaefiling.gov.in என்ற வலைதளம் பயன்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக, www.incometax.gov.in என்ற புதிய வலைதளம், கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

ஆனால், அன்று முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலும் புதிய இணையதளத்திலும் தொழில்நுட்பக் குறைபாடுகள் எக்கச்சக்கமாக இருந்தன. இதனால் வரி செலுத்தும் தனிநபர் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரையிலும் வரி செலுத்த முடியாத நிலை உருவானது.

புதிய வருமான வரி வலைதளத்தில் தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வருவதால், அதை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சலீல் பரேக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன் ஆகஸ்ட் 23-ம் தேதி ஆஜராகி விளக்கம் கொடுக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பிறகு, புதிய வருமான வரி வலைதளத்தில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்யும் பணியை இன்ஃபோசிஸ் நிறுவனம் துரிதமாக்கியது.

Tax (Representational Image)
Tax (Representational Image)
எஃப் அண்ட் ஓ; இளம் முதலீட்டாளர்களின் டார்லிங்காக மாறக் காரணம் என்ன? பணம் பண்ணலாம் வாங்க - 32

அதன் காரணமாக இன்று பெரும்பாலான பிரச்னைகள் சரி செய்யப்பட்டிருப்பதாக ஆடிட்டர் மற்றும் வரி செலுத்துவோர் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் இது குறித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``புதிய வருமான வரி வலைதளத்தைப் பயன்படுத்தி தற்போது வரை இரண்டு கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணனிடம் பேசினோம். ``புதிய வலைதளம் அறிமுகமான நாளில் இருந்தே, வருமான வரி தாக்கல் செய்வதில் ஏகப்பட்ட பிரச்னைகளும் குழப்பங்களும் இருந்தன. புதிய வலைதளத்தில் இருந்த தொழில்நுட்பக் கோளாறுகளால் வருமான வரி தாக்கல்செய்ய முடியாத நிலைகூட உருவானது. ஆனால், பல மாதங்கள் கழித்து, அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது. பெரும்பாலான குறைபாடுகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. தனிநபர்கள் பெரும்பாலும் அவர்களாகவே வருமான வரியைத் தாக்கல் செய்துவிடுவார்கள்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கும் இரண்டு கோடி பேரில் தனிநபர் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், நிறுவனங்கள் வருமான வரி செலுத்தும் விஷயத்தில் இன்னும்கூட சில பிரச்னைகள் புதிய வருமான வரி வலைதளத்தில் இருக்கின்றன. அதையும் சரி செய்ய வேண்டும் என்பதை இந்தியா முழுக்க உள்ள ஆடிட்டர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஏனெனில், நிறுவனங்கள் முழுமையாக வருமான வரியைச் செலுத்தினால்தான், வங்கிகள் அவர்களுக்குக் கடன் கொடுக்க முன்வரும். இல்லையெனில், கடன் கிடைப்பதில் நிறுவனங்களும் சிக்கல் உருவாகும்.

ஆடிட்டர் கே. ஆர். சத்தியநாராயணன்
ஆடிட்டர் கே. ஆர். சத்தியநாராயணன்

இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களில் 80% - 90% பேர் இன்றைய தேதியில் வருமான வரியைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 30% - 35% பேர் மட்டுமே தாக்கல் செய்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தனிநபர்களுக்கு டிசம்பர் மாதம் இறுதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாலும், பிப்ரவரி 15-ம் தேதி வரையில் நிறுவனங்களுக்கு கால அவகாசம் இருப்பதாலும், அதற்குள் அனைத்து வருமான வரி செலுத்துபவர்களும் முழுமையாக வரியை செலுத்தியாக வேண்டும். அதற்குள் வலைதளத்தில் உள்ள அனைத்து வகையான பிரச்னைகளும் சரி செய்யப்பட வேண்டும்" என்றார்.

வருமான வரி பழசா, புதுசா? உங்களுக்கு ஏற்றது எது? | Old Tax regime Vs New Tax regime | Nanayam Vikatan

இதுவரை வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாத தனிநபர்கள் இனியாவது உடனடியாகத் தாக்கல் செய்யும் வேலையில் இறங்குவது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு