Published:Updated:

தினமும் ரூ.2 கோடிக்கு வியாபாரம்... ஆலங்குடியில் அதிகரிக்கும் கடலை வர்த்தகம்!

வர்த்தகம்
பிரீமியம் ஸ்டோரி
வர்த்தகம்

வர்த்தகம்

தினமும் ரூ.2 கோடிக்கு வியாபாரம்... ஆலங்குடியில் அதிகரிக்கும் கடலை வர்த்தகம்!

வர்த்தகம்

Published:Updated:
வர்த்தகம்
பிரீமியம் ஸ்டோரி
வர்த்தகம்

இந்திய அளவில் நிலக்கடலை வர்த்தகம் அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி. இங்கு மட்டும் கடலை கூலி அறவை மில்கள் 30, கடலையைத் தரம் பிரித்து எடுக்கும் மில்கள் 26, கடலை ஆயில் மில்கள் 4 எனச் சுமார் 60 மில்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத் திலேயே இந்த எண்ணிக்கையில் கடலை மில்கள் வேறு எங்கும் இல்லை.

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினமும் ஆலங்குடிக்குப் படையெடுத்து வருகின்றனர். கடலை சீஸனான இப்போது, இங்குள்ள கடலை மில்களிலிருந்து தினமும் சுமார் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.இது குறித்து கடலை கூலி அறவை மில் உரிமை யாளர்கள் சிலருடன் பேசினோம்.

தினமும் ரூ.2 கோடிக்கு வியாபாரம்... ஆலங்குடியில் அதிகரிக்கும் கடலை வர்த்தகம்!

“விவசாயிகள் விளைவித்த கடலை மூட்டை களை, இங்கு உள்ள கூலி அறவை மில்களுக்குக் கொண்டு வருவாங்க. மில்லில் உள்ள மெஷினில் போட்டு உடைப்போம். உடைத்த பருப்புகளை மொத்த வியாபாரிகள், விவசாயிகள் சொல்லும் விலை தந்து வாங்கிச் செல்வார்கள். ஒளிவு மறைவு இல்லாம, வெளிப்படையா இந்த ஏலம் நடக்கும். விவசாயிகள் கொண்டு வந்த பருப்புக்கேற்ப, விவசாயிகளுக்கு உரிய பணத்தைத் தந்திடுவோம். மொத்த கடலை மிட்டாய தயாரிக்கும் கம்பெனிக்கு விப்பாங்க. கடலைமிட்டாய் தயார் செய்ய பயன்படாத கடலைப்பருப்புகள் எண்ணெய் மில்களுக்கு அனுப்புவாங்க.

கடலை பருப்புகளின் விலை ஆலங்குடியில் நிர்ணயம் செய்யப்படுறதில்லை. தங்க மார்க்கெட் மாதிரி, தினமும் காலை, மாலை யில சென்னையில உள்ள எக்ஸ்போர்ட் மார்க் கெட்டுல இருந்து ரெண்டு நேரமும் விலை எங்களுக்கு வந்திடும். எக்ஸ்போர்ட் மார்க்கெட்டைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்வோம். அந்த விலையை வச்சிதான் ஏலம் நடக்கும். கடலைமிட்டாய்க்கான பருப்பு மூட்டை அதிகபட்சமா ரூ.7,200 போகுது.

அறவை மில்களைப் பொறுத்தவரை, கடலைப் பருப்பை ஓடு தனியா, பருப்பு தனியா உடைச்சுத் தர்றதும், வியாபாரிகளையும் விவசாயிகளையும் நேரடியா வரவச்சு ரெண்டு பேருக்கும் இடையே பாலமாக இருப்பதும்தான் வேலை. கடலை உடைச்சுக் கொடுக்கிறது மூலமா மூட்டைக்கு ரூ.120 வரைக்கும் எங்களுக்குக் கிடைக்கும். இதை வச்சுதான், மில் பாரமரிப்பு, மின்சாரச் செலவு, லோடுமேன், வேலையாட்கள் கூலின்னு சமாளிக்கணும்.

கடலையைப் பொறுத்தவரை, பங்குனி, சித்திரை, வைகாசின்னு மூணு மாசமும், அடுத்து ஆடி, ஆவணி, புரட்டாசின்னு மூணு மாசமும் என ஆறு மாசம்தான் வரத்து இருக்கும். மற்ற ஆறு மாசம் எங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. முதலாளியில் இருந்து தொழிலாளி வரை எல்லாரும் வேலை இல்லாம சும்மாதான் இருக்கணும். அதனாலயே பலரும் இப்ப இந்தத் தொழிலை விட்டுப் போயிடுறாங்க. 20 வருஷத்துக்கு முன்னால ஆலங்குடியில மட்டும் நூற்றுக்கும் அதிகமான கடலை மில் இருந்துச்சு. இன்னைக்கு அது பாதியா குறைஞ்சிருச்சு. பலரும் மில்களை மண்டபம் ஆக்கிட்டாங்க. எங்கள மாதிரி சிலர்தான் இந்தத் தொழில்ல இருக்கோம்” என்றனர்.

தொடர்ந்து, தினமும் நடைபெறும் வர்த்தகம் குறித்து சில வர்த்தகர்களுடன் பேசினோம். “பங்குனி இறுதி வாரத்தில் இருந்து, சித்திரை இறுதி வரையிலும் ஒரு மாதம் வரத்து அதிமாக இருக்கும். இப்போது, சீஸன் நேரம் என்பதால், இங்குள்ள மில்களில் சராசரியா தினமும் 3,500 மூட்டைகள் வரையிலும் கடலையை உடைக்குது. ஒரு மூட்டைக்கு ரூ.6,800 சராசரி விலை என்றாலும் தினமும் ரூ.2.38 கோடி தினமும் வர்த்தகம் ஆகுது. மற்ற இரண்டு மாதங்களில் இது அப்படியே பாதி ஆகிடும். ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களிலும் இதே மாதிரிதான் வர்த்தகம் நடக்கும். இந்தச் சமயத்தில், கடலை வரத்து அதிகமாக இருந்தாலும், கடலை விலை அதிகமாகவே இருக்கும்.

முன்னாடி எல்லாம் ஏலம் எடுத்திட்டு வந்து சல்லடை மெஷினில் சலிச்சிட்டு, ஆள் வைத்து மூட்டையிலிருந்து பருப்பைப் தரம் பிரித்து எடுப்போம். ஆனா, இப்ப இதற்கென பிரத்யேகமான மெஷின்கள் வந்திருச்சு. தரம் பிரிக்கிறதோட, கல், கருப்புன்னு எல்லாத்தையும் நீக்கி சுத்தமா நமக்கு தந்திடுது.

இப்படி மெஷின்ல தரம் பிரிச்செடுத்த பருப்பை சென்னை, மும்பையில் இருக்கும் எக்ஸ்போர்ட் ஏஜென்சி களுக்கு அனுப்புவோம். அவங்க வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு அனுப்புறாங்க. குறிப்பா, ஆசிய நாடுகள் எல்லாத்துக்கும் நம்ம பருப்பு ஏற்றுமதி செய்யப்படுது’’ என்றார், மிட்டாய்ப் பருப்பு வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த குமார். அவரே தொடர்ந்து பேசினார்.

குமார்
குமார்

‘‘பொதுவா, எக்ஸ்போர்ட் குவாலிட்டிங்கிறது 50 - 60, 80 - 90-ன்னு ரெண்டு ரகம். குவாலிட்டி பார்க்கிற மெஷினில் ஒரு அவுன்ஸ் அதாவது, 28.5 கிராம் அளவில் 50 - 60 பருப்புகள் வந்தா அது முதல் ரகம். அதே 28.5 கிராமுக்கு 80 - 90 பருப்புகள் வந்தா அது ரெண்டாவது ரகம். 140 - 160 பருப்பு வந்தா மூணாவது ரகம். இதுக்குப் பேருதான் கல்யாணி ரகம். சில நேரங்களில் இதுவும் எக்ஸ் போர்ட்டுக்கு அனுப்புவோம். இல்லைன்னா, எண்ணெய் ஆட்டுற மில்களுக்கு அனுப்புவோம்.

ஒரு மூட்டையில 80% எஸ்போர்ட் ரகம் இருந்தால், 15% எண்ணெய் பருப்புக்குப் போயிடும். 5% வரைக்கும் கழிவு போயிடும். இதே போல, எக்ஸ் போர்ட்டுக்கு அனுப்புறதுக்கு பருப்பு ஈரப்பதம் அளவிடும் மாய்ச்சர் மெஷினில் போட்டுப் பார்த்தால், 8.2 பாயின்ட்டுக்கு இருக்கணும். 9 என்று காட்டி னால், கடலையில ஈரப்பதம் அதிகமாக இருக்குன்னு அர்த்தம். அந்தக் கடலை 8.2-க்கு வர ரெண்டு, மூணு நாள் ஆகும். அதுவரை அதை எக்ஸ்போர்ட் செய்ய முடியாது. அதற்கிடையில விலை ஏறுனாலும், லாபம். விலை இறங்கினா எங்களுக்கு நஷ்டம்தான்.

0 - 60 பருப்பு இன்னைக்கு மார்க்கெட் ரூ.7,200 வரைக்கும் போகுது. சீஸன் நேரத்தில் ஒரு மிட்டாய் வியாபாரி அதிக பட்சமா மூன்று நாளைக்கு ஒரு முறை 20 டன் வரைக்கு அனுப்பு வோம். எல்லாக் கணக்கும் பேங்க் மூலமாதான் நடக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு எக்ஸ் போர்ட் குவாலிட்டியில கடலைபருப்பை அனுப்பு றோமோ, அந்தளவுக்கு லாபம் கிடைக்கும். இதோட, குஜராத் துக்கு நேரடியாகப் போய் விதைகடலை வாங்கி வந்து, விவசாயிகளுக்குக் கடனாகவும் தர்றோம்’’ என்றார் குமார்.

இனிவரும் நாள்களில் ஆலங்குடி கடலை வியாபாரத்தில் இன்னும் கலக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism