Published:Updated:

முதல் சம்பளம் ரூ.2,100, இப்போதைய டேர்ன் ஓவர் ரூ.3,000 கோடி! - ஜி.எஸ்.கே. வேலுவின் வெற்றிக்கதை

B U S I N E S S

பிரீமியம் ஸ்டோரி

மதுரை, நாகர்கோவிலில் தமிழ் மீடியத்தில் பள்ளிப்படிப்பு, சாதாரணக் குடும்பப் பின்னணி, அம்மாவின் தாலியை அடகு வைத்து கல்லூரியில் படிப்பு எனப் பல கஷ்டங்களையும் தாண்டி வந்த ஜி.எஸ்.கே வேலு, இன்று ஒரு மிகச் சிறந்த தொழில் முனைவர். வெளிநாட்டு நிறுவனங் களுக்கு இணையாக மருத்துவ உபகரணங்களைத் தயார் செய்து, உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறார். இன்று அவருடைய ட்ரிவிட்ரான் குரூப் ஆப் கம்பெனீஸின் ஆண்டு டேர்ன்ஓவர் சுமார் ரூ.3,000 கோடிக்கு மேல். கோவிட்-19 இரண்டாம் அலையில் நம்முடன் நேரடியாக சந்தித்துப் பேசினார் ட்ரிவிட்ரான் குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.எஸ்.கே வேலு. இனி அவர் நமக்களித்த பேட்டி...

ஜி.எஸ்.கே. வேலு
ஜி.எஸ்.கே. வேலு

தாலியை அடகு வைத்து....

‘‘நான் பிறந்தது கன்னியாகுமரியில் உள்ள ஆரல்வாய்மொழி. என்றாலும், ஆரம்பப் பள்ளி மதுரைக்குப் பக்கத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் படித்தேன். பிறகு10-ம் வகுப்பு வரை மதுரையிலும், ப்ளஸ் டூ-வை நாகர்கோவிலிலும் படித்தேன். எனக்கு மருத்துவம் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், நுழைவுத் தேர்வில் ஒரே ஒரு மார்க்கில் எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை. சித்தா போன்ற படிப்புகள் எனக்குக் கிடைத்தாலும் அதில் எனக்கு விருப்பமில்லை. எனவே, மருத்துவம் தொடர்புடைய வேறு ஏதாவது ஒரு படிப்பைப் படிக்க விரும்பினேன். அந்த சமயத்தில் பிட்ஸ்பிலானியில் நான் படித்த பள்ளியிலிருந்து ஒரு சீனியர் மாணவர் படித்தார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் அண்ட் பார்மசி படிக்க அங்கு போனேன்.

என் அப்பா ஒரு சாதாரண லைப்ரேரியனாக இருந்தார். நிறைய பணம் செலவழித்து, படிக்க வைக்க வேண்டாம் என்று என் சொந்தக் காரர்கள் சொன்னார்கள். ஆனால், என் அம்மா அவரது தாலியை அடகு வைத்து என் படிப்புக்கான பணத்தைக் கட்டினார்.

படித்து முடிக்கும்போது ஆறு மாதம் ஏதாவது ஒரு மருத்துவமனையில் பயிற்சி பெற வேண்டும். நான் சென்னையில் உள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட்டைத் தேர்வு செய்தேன். அங்கே எனக்கு கைடாக இருந்த டாக்டர் சாந்தா, எங்களுக்கு சவால் விடுத்தார். ‘எங்களுக்கு ஒரு மருத்துவ உபகரணம் நன்கொடையாக வந்திருக்கிறது. இதை யாராலும் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை. உங்களால் இதை இன்ஸ்டால் செய்ய முடியுமா’ என்று கேட்க, நாங்கள் அதைச் செய்து தந்தோம். இந்தத் துறையில் நான் நுழைய முதல் காரணமாக இருந்தது அந்த நிகழ்ச்சி.

பிட்பாக்கெட் போன முதல் சம்பளம்...

பயிற்சி முடிந்தவுடன் மேற்கொண்டு உயர்படிப்பு படிக்க எனக்கு ஆசை. காரணம், டோஃபல், ஜி.ஆர்.இ-யில் நான் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். ஐ.ஐ.எம் லக்னோ, பெங்களூரிலும் எனக்குப் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், வறுமையான குடும்பச் சூழல் காரணமாக மீண்டும் வேலைக்குப் போவது என்று முடிவு செய்தேன்.

சென்னையில் உள்ள ஐ.எம்.ஐ என்னும் நிறுவனத்தில் ரூ.2,100-க்கு வேலைக்குச் சேர்ந்தேன். முதல் மாதம் சம்பளம் கிடைத்தவுடன் அப்பாவின் கடனை அடைக்க வேண்டும், அம்மாவுக்குத் தர வேண்டும் எனப் பல கனவுகளுடன் இருந்தேன். ஆனால், முதல் மாத சம்பள கவரை வாங்கி பஸ்ஸில் வரும்போது, அதை பிட்பாக்கெட் அடித்துவிட்டார்கள். இதை என் பாஸிடம் சொன்னபோது, அவர் மீண்டும் 2,100 ரூபாயை சம்பளமாகத் தந்தார். அந்த நன்றிக் கடனுக்காகவே அவரிடம் தொடர்ந்து வேலை பார்த்தேன். பிற்பாடு அவருடன் பார்ட்னர் ஆனேன்.

பிறகு, அமெரிக்க நிறுவனமான சீபாகானில் இந்தியத் தலைமை அதிகாரியாகவும், தெற்காசிய நாடுகளுக்கும் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது சீனாவில் ஒரு சில வருடங்கள் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்றாலும் அதை எப்படித் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் என சீனாவில் கற்றுக்கொண்டேன். அவர்கள் எதையும் பிரமாண்ட மாகச் செய்ய நினைப்பார்கள். எவ்வளவு பெரிய தொழிற்சாலை யாக இருந்தாலும் சொன்ன நேரத்துக்கு முன்பே முடித்துத் தருவார்கள். இதெல்லாம் நான் சீனாவில் கற்றுக்கொண்ட பாடங்கள். பிற்பாடு நான் சொந்த மாகத் தொழில் தொடங்கியபோது பெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்க 25 ஏக்கர் இடம் வாங்கினேன். வெறும் 2.5 ஏக்கர் நிலம் போதுமே என்றார்கள். ஆனால், சீனாவில் எனக்குக் கிடைத்த அனுபவத்த்ஆல் 25 ஏக்கர் வாங்கினேன்.

முதல் பிசினஸ்மேன் நான்....

என் குடும்ப வரலாற்றிலேயே யாரும் பிசினஸ்மேன் இல்லை. எனக்கும் ஆன்ட்ரபிரினர்ஷிப் என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால், 20 வயதில் ஐ.எம்.ஐ நிறுவனத்தில் முதல்முதலாக ஆக்ஸிடென்டல் பிசினஸ்மேன் ஆனேன். இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் டிஸ்ட்ரிபியூஷன் தொழிலை எப்படிச் செய்ய வேண்டும் என்றும், சிபாகானில் வேலை பார்த்தபோது உலகம் முழுக்க எப்படி பிசினஸ் செய்ய வேண்டும் என்றும் கற்றுக் கொண்டேன்.

பத்து வருடங்கள் பணி அனுபவம் பெற்ற பிறகு, 1997-ல் சொந்தமாகத் தொழில் தொடங் கினேன். 1997-ல் ட்ரிவிட்ரான் மெடிக்கல் சிஸ்டம் என்கிற நிறுவனத்தையும், கெய்ரான் டயக்னாஸ்டிக்ஸ் என்கிற நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்தும் ஆரம்பித்தேன். பிசினஸ் நல்லபடியாக நடக்கத் தொடங்கியபின், கெய்ரான் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தை பேயர் நிறுவனம் வாங்கியதால், நாங்கள் ஆரம்பித்த தொழில்கள் ஏறக்குறைய திவால் நிலைக்கு வந்துவிட்டது. தொடர்ந்து பிசினஸ் செய்வதா அல்லது மீண்டும் வேலைக்குப் போவதா என்கிற குழப்பம் வந்தது. ஆனால், வேலைக்குச் செல்வதைவிட பிசினஸ் செய்வதே சரி என்று நான் முடிவெடுத்தேன்.

15 இடங்களில் தொழிற்சாலை...

அதன்பிறகு, வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய நிறுவ னங்கள் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்களை இந்தியா முழுக்க பெரிய அளவில் டிஸ்ட்ரிபியூஷன் செய்யும் தொழிலைச் செய்ய ஆரம்பித் தோம். இந்த பிசினஸ் சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிலையில், 2010-ல் ஏன் நாமே இந்தியாவில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கக் கூடாது என்று நினைத்து, ஜப்பானில் உள்ள அலோகா நிறுவனத்துடன் இணைந்து அல்ட்ரா சவுண்ட் உபகரணத்தைத் தயாரிக்க ஆரம்பித்தோம். இதில் எங்களுக்குப் பெரிய வெற்றி கிடைத்தது. இன்றைக்கு உலகளவில் 15 இடங்களில் எங்களுக்குத் தொழிற் சாலைகள் இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் 90% லாபம் இதிலிருந்தே வருகிறது. ஒரு டிரேடிங் நிறுவனமாக இருந்து, தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து, தற்போது மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை நாங்கள் எங்கள் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்து பயன்படுத்தும் அளவுக்கு ஒரு ‘இன்னோவேட்டிவ்’ நிறுவனமாக வளர்ந்திருக்கிறோம். 1980, 1990-களில் இந்தியாவில் பார்மா நிறுவனங்கள் ஏராளமாக உருவாகி, உலகம் முழுக்கத் தேவையான மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு ஹப்பாக வளர்ந்திருக்கிறது. அதே போல, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உலகம் முழுக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு ஹப்பாக நம் இந்தியா மாறும் என்பது எங்கள் கணிப்பு. பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ இதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தொழில் தொடங்க பிரைவேட் ஈக்விட்டி...

நான் முதல் முதலாகத் தொழில் தொடங்கியபோது அதை பெரிய அளவில் வளரக் காரணமாக இருந்தது பிரைவேட் ஈக்விட்டிதான். இப்போது நான் ஓரளவு வளர்ந்துள்ள நிலையில், நிறுவனங்கள், தனிமனிதர்களை இணைத்து, பிரைவேட் ஈக்விட்டி தொடங்கி, பல நிறுவனங்கள் பெரிதாக வளர உதவுகிறோம்.

இப்போது நான் ஃபிக்கி (FICCI) அமைப்பின் தமிழகப் பிரிவுக்குத் தலைவராக இருக்கிறேன். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலவிதமான தொழில்களைக் கொண்டு வரவேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்’’ எனச் சிரித்தபடி பேசி முடித்தார் ஜி.வி.கே வேலு!


இந்த பேட்டியை வீடியோவில் பார்க்க

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு