Published:Updated:

8 மாதங்களில் இல்லாத அளவு சரிந்த ஜி.எஸ்.டி வரி வசூல்; என்ன காரணம்?

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

கடந்த 2020 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழே சென்றிருக்கிறது.

சரக்கு மற்று சேவை வரி என்று சொல்லப்படும் ஜி.எஸ்.டி வரியானது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள். காரணம், கடந்த ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி மூலம் வசூலான வரி வருமானம் ரூ.1 லட்சத்துக்கும்கீழே சென்றிருக்கிறது.

நம் நாட்டில் ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 2017 ஜூலை 1-ம் தேதி 17 வரிகள், 13 கூடுதல் வரிகள் ஆகியவற்றை ஒழித்து, நாடு முழுதும் ஒரே வரி முறையான ஜி.எஸ்.டி (Goods and services tax), எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி அமலானது.

ஜி.எஸ்.டி வரி
ஜி.எஸ்.டி வரி
vikatan

கொரோனா பேரிடர் காலத்திலும் வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தி வந்த காரணத்தால், கடந்த எட்டு மாதங்களாக, ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வசூலானது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் மட்டும் ஜி.எஸ்.டி.வரி வாயிலாக சுமார் ரூ.11.36 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2021-2022-ம் நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகி புதிய சாதனையை படைத்தது. அதற்கடுத்த மே மாதத்திலும் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.1.02 லட்சம் கோடி வசூலானது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி. ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக வசூலாகியுள்ளது. அந்த மாதத்தில் வசூலாக ஜி.எஸ்.டி வரி ரூ.92,849 கோடி. கடந்த 2020 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் கீழே சென்றிருக்கிறது.

GST
GST

இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.92,849 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரி ரூ.16,424 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரி ரூ.20,397 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ரூ.49,079 கோடியும், செஸ் ரூ.6,949 கோடியும் அடங்கும்" என தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல மாநிலங்களில் முழுமையான அல்லது பகுதி அளவிலான ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, வணிகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக வரி வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வலுக்கும் கருத்து வேறுபாடு...
முடிவுக்கு வருகிறதா ஜி.எஸ்.டி வரிமுறை..? இனி என்ன ஆகும்?

தற்போது பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், மீண்டும் வணிகச் செயல்பாடுகள் சீராகி வருகின்றன. இதன் காரணமாக, இனிவரும் மாதங்களில் வரி வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா மூன்றாம் அலை பெரிதாக வராதபட்சத்தில், வரும் தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியை எட்ட நிறையவே வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு