Published:Updated:

நிறுவனத்தின் பெயரும் லோகோவும் எப்படி இருக்க வேண்டும்? விளக்கிச் சொல்கிறார் நிபுணர்

லோகோ
பிரீமியம் ஸ்டோரி
லோகோ

B U S I N E S S

நிறுவனத்தின் பெயரும் லோகோவும் எப்படி இருக்க வேண்டும்? விளக்கிச் சொல்கிறார் நிபுணர்

B U S I N E S S

Published:Updated:
லோகோ
பிரீமியம் ஸ்டோரி
லோகோ

தனியாக ஒரு பிசினஸ் தொடங்கி அதை ஒரு நிறுவனமாக வளர்ப்பது பலருக்கும் கனவாக இருக்கும். அப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கும்போது நிறுவனத்துக்கான லோகோவை எப்படி வடிவமைப்பது, நிறுவனத்துக்கான சரியான பெயரை எப்படித் தேர்ந்தெடுத்து வைப்பது போன்றவையும் முக்கியமான ஒன்று.

உங்களின் பிசினஸ் ஒரு பிராண்டாக உருவெடுக்கும்போது லோகோவும் பெயரும்தான் நிறுவனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும். இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்களை நம்மிடம் எடுத்துச் சொன்னார் ‘ஃப்ரோஷன் டிசைனிங் ஸ்டூடியோ’ நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிஸ் வெங்கடேஷன்.

வாடிக்கையாளர்களின் சாய்ஸ்...

‘‘நிறுவனத்துக்கான பெயரைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பெயர் உங்களுடன் எவ்வளவு கனெக்ட் ஆகிறது என்பது பற்றி யோசிக்காமல், உங்கள் வாடிக்கையாளருடன் எவ்வளவு கனெக்ட் ஆகும் என்பதைத் தான் முதலில் யோசிக்க வேண்டும். உங்களின் பிசினஸ் நம்பகத்தன்மை யுடன் தொடர்புடையதா, அனுபவத்தைத் தரக்கூடிய ஒன்றா, பிராண்ட் பெயருக்காக வாடிக்கை யாளர்கள் உங்களின் சேவையைப் பயன்படுத்தும் ஒன்றா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.உதாரணமாக, நம்பகத்தன்மையுடன் தொடர்புடைய பிசினஸ் எனில், கல்லூரிகள், பள்ளிகளைச் சொல்லலாம். அனுபவத்துடன் தொடர்புடையது எனில், தியேட்டர், சலூன் போன்ற பிசினஸ்களைச் சொல்லலாம். பிராண்டுக்காக சேவையைப் பயன்படுத்தும் நிறுவனம் எனில், சரவணபவன், ஏர்டெல் போன்று கிளைகள் உள்ள நிறுவனங்களைச் சொல்லலாம்.

பிராண்ட் பெயரைத் தேடி வாங்கும் வகையில் கிளைகள் உள்ள நிறுவனம் எனில், உங்களின் பிராண்ட் பெயர் மிகவும் எளிதாக இருக்க வேண்டும். சேவையோ, நம்பகத் தன்மையோ சார்ந்த பிசினஸ்கள் எனில், பிராண்ட் பெயர் கடினமாக இருந்தாலும் பிரச்னையில்லை.

லோகோ
லோகோ

உச்சரிக்க எளிமை...

நிறுவனத்தின் பெயர் உச்சரிக்க எளிதாக இருப்பது அவசியம். ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று குறிப்பார்கள். அதாவது, ஒரு வார்த்தை எத்தனை உயிரொலியை உள்ளடக்கியது என்பதாகும். உதாரணமாக ‘அமேசான்’ நிறுவனத்தின் பெயரைப் பிரித்தால் ‘அமே / சான்’ என்று இரண்டு உயிரொலிகளைக் கொண்டதாக இருக்கும். இதுபோன்று எளிதான பெயர்கள் மக்களுக்கு எளிதாக பழக்கப்படும் ஒன்றாக இருக்கும்.

நிறுவனத்தின் பெயர் நீங்கள் விற்கும் பொருளுடன் கனெக்டாகும் வகையில் இருக்க வேண்டும். உதாரண மாக, நீங்கள் ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் நிறுவனம் என்றால், ‘லைட் வெயிட்’ என்பது போன்று பொருளின் தன்மையுடன் கனெக்ட் ஆகும் பெயர்களைத் தேர்வு செய்யலாம். உங்களின் பிராண்டுக்காக நீங்கள் தேர்வு செய்துள்ள பெயர் இப்போது மக்களிடம் எப்படி வழக்கத்தில் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சேவையுடன் தொடர்புடைய பெயர்...

உங்களின் பிராண்ட் பெயரை சொல்லும்போது கஸ்டமருக்கு முதலில் என்ன பொருள் அல்லது சேவை நினைவுக்கு வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையிலும், பொருளை வாங்கவைப்பதற்கு ஏற்ற வகையிலும், புரொமோட் செய்வதற்கு எளிய வகையிலும் இருப்பது அவசியம்.உதாரணமாக, ‘onlinetickets.com’ என்ற ஒரு பிராண்டின் பெயரை மக்களிடம் சொல்லும்போது, அது என்ன தேவைக்காக இருக்கிறது என்பது முதலில் பதிவாகிவிடும். நாம் வழக்கத்தில் பயன்படுத்தும் வார்த்தை என்பதால், நினைவில் வைத்துக்கொள்வதற்கும், விளம்பரம் செய்யவும் எளிதாக இருக்கும்.

சட்டரீதியான சிக்கல்களைத் தவிர்க்கலாம்...

உங்கள் நிறுவனத்துக்கான பெயரைத் தேர்வு செய்யும்போதே இணையத்தில் இதேபோன்ற பெயரில் வேறு ஏதேனும் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் செக் செய்ய வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுடைய பொருளும், அவர்கள் விற்கும் பொருளும் வேறுவேறு தன்மை உடையதாக இருந்தால் பிரச்னை இல்லை.

ஆனால், ஒரே வகையான பொருளை விற்பனை செய்யப்போகிறீர்கள் எனில், ஏற்கெனவே இருக்கும் பிராண்டுகளின் பெயரைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதே போன்று சில பிராண்டுகள் ஏற்கெனவே இருக்கும் பெரிய பிராண்டு களின் பெயர்களில் சில எழுத்துகளை மட்டும் மாற்றிவிட்டு, அதே ஸ்டைல், ஃபாண்ட்களைக் கடைப்பிடிப்பார்கள். உதாரணமாக, SAMSUNG என்ற பிராண்ட் பெயரை SAMSUUNG என்று மாற்றி பிராண்டாக வளர்ப்பது. இது போன்று பெரிய பிராண்டின் பெயரை காப்பி செய்யும்போது மக்களுக்கு உங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை குறையவும் வாய்ப்புள்ளது. புதிய பெயரிலான பிராண்டை நீங்கள் உருவாக்கும்போது உங்களுக்கென தனி வாடிக்கையாளர்கள் உருவா வார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஹரிஸ் வெங்கடேஷன்
ஹரிஸ் வெங்கடேஷன்

லோகோ வடிவமைப்பு...

ஒரு நிறுவனத்தின் முகம் எனில், அது லோகோதான். எனவே, லோகோ டிசைனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் லோகோவே நீங்கள் விற்கும் பொருள் பற்றிச் சொல்லி விடும் வகையில் இருக்க வேண்டும். அல்லது மக்களின் தேவையை நிவர்த்தி செய்ய உங்கள் பொருள் அவசியம் என்பதைப் புரிய வைக்கும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் ஃபான்ட் கண்களை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். இன்று பெரிய நிறுவனங்களாக உருவெடுத்திருக்கும் நிறுவனங்கள் எல்லாம் தங்களுக்கென்று தனி நிறத்தைக் கடைப்பிடிக்கின்றன.

உதாரணமாக, ‘ஃப்ளிப்கார்ட்’ நிறுவனம் ஊதா - மஞ்சள். ‘ஃபேஸ்புக்’ என்றால் ஊதா- வெள்ளை என்று ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ‘காம்போ’ நிறங்கள் இருப்பது போன்று உங்கள் பிராண்டுக்கு என்று நிறங்களைத் தேர்வு செய்யுங்கள். அந்த நிறம் உங்களின் பிராண்டுக்கு கனெக்ட்டாக வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு சவுத் இந்தியன் உணவு வகைகளை விற்கும் நிறுவனம் எனில், அந்த மக்களுடன் தொடர்புடைய வகையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, போன்ற நிறங்கள் இருப்பது அவசியம். அதேபோல, லோகோவில் வாழை இலை இருந்தால் இன்னும் நல்லது . இது போன்று உங்களின் சேவை அல்லது பொருளை கனெக்ட் செய்யும் வகையில் லோகோவை வடிவமையுங்கள் .

எல்லையைச் சுருக்காதீர்கள்...

பிசினஸ் என்பது காலத்துக்கு ஏற்ற வகையில் மாறுதலுக்கு உட்பட்ட ஒன்று. எனவே, பிராண்டுக்கான பெயரைத் தேர்வு செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பொருளுக்கான பெயர் எனில், பிசினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் போது பிராண்டின் பெயரை மாற்றி அமைக்க வேண்டி யிருக்கும். எனவே, மாறுதல்களைச் சிந்தித்து பிராண்டின் பெயரை உருவாக்க வேண்டும்.

உதாரணமாக, அமேசான் நிறுவனம் முதன்முதலில் ஆன்லைன் புத்தகம் விற்கும் நிறுவன மாகவே பிசினஸில் களமிறங்கியது. அதன்பின்னர் அனைத்து வகையான பொருள்களையும் விற்கும் ரீடெயில் செயின் நிறுவனமாக உருவெடுத்தது.

அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ் தன் பிசினஸுக்கு “ஆன்லைன் புக்ஸ்” என்ற பெயரை முதலில் வைத்திருந்தால், அனைத்து வகையான பொருள்களையும் விற்பனை செய்யும் ஒரு ஆன்லைன் நிறுவனமாக உருவெடுக்கும்போது நிறுவனத் தின் பெயரை மாற்ற வேண்டிய தேவை இருந்திருக்கும். எனவே, எல்லா காலத்துக்கும் மாறுதல்களுக்கும் பொருந்தும் பெயர்களைத் தேர்வு செய்யுங்கள்.

டொமைனில் கவனம் செலுத்துங்கள்...

நிறுவனத்துக்கான பெயரை முடிவு செய்தவுடன் அந்தப் பெயருக்கு டொமைன் இருக்கிறதா என்பதை முதலில் செக் செய்துகொள்ளுங்கள். நீங்கள் நினைக்கும் அதே டொமைன் பெயரை வேறு யாரேனும் வைத்திருந்தால், சம்பந்தட்டவரை அணுகி அவர் அந்த டொமைனை விற்பனை செய்ய தயாராக இருக்கிறாரா என்பதைக் கேட்டுப் பார்க்கலாம். டொமைனுக்கு நீங்கள் தேர்வு செய்யும் பெயரில்தான் உங்களின் பிசினஸ் ஃபேஸ்புக் முகவரி, இன்ஸ்டகிராம் முகவரி போன்றவையும் இருக்க வேண்டும்.

ஃபீட்பேக் அவசியம்...

நிறுவனத்துக்கான பெயரைத் தேர்வு செய்ததுமே உங்களின் வாடிக்கையாளர் கள், நண்பர்கள் சிலரிடம் கருத்துகள் கேட்டு அவர்கள் அந்த வார்த்தையை உச்சரிக்க எளிதாக இருக்கிறதா என்பதை செக் செய்துகொள்ளலாம். உங்கள் பிராண்டின் பெயர் எந்த வகையிலும் உங்கள் பொருளுக்கு நெகட்டிவ்வான எண்ணத்தை ஏற்படுத்தாதபடி இருக்க வேண்டும். எனவே, ஒரு வார்த்தையைத் தேர்வு செய்தவுடன் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முதலில் தெரிந்துகொள்வது நல்லது. உதாரணமாக, ஒரு கார் நிறுவனம் தங்களுடைய காருக்கு ‘NOVA’ என்ற பெயரை வைத்தது. ஆனால், ‘NOVA’ என்றால் ஸ்பானிஸில் ‘ does not go’ என அர்த்தம். இது பொருளுக்கும் பெயருக்கும் எதிர்மறையாக இருக்கும். எனவே, அர்த்தம் அறிந்து பெயர் வைப்பது நல்லது’’ என்று முடித்தார் ஹரிஸ்.

நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவைத் தேர்வு செய்வதில் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்!

பிட்ஸ்

ஸ்டான்ட்அப் இந்தியா திட்டத்துக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.25,586 கோடி கடன் அளிக்கப்பட்டு இருக்கிறது. 1,14,322 பேருக்கு இந்தக் கடன் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் பெண்களுக்கு மட்டும் ரூ.21,200 கோடி கடன் அளிக்கப்பட்டு இருக்கிறது!