நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மார்க்கெட்டிங்கில் கில்லாடியாக மாற கைகொடுக்கும் 8 ‘P’-க்கள்..! வணிகத்தில் ஜெயிக்க உதவும் அம்சங்கள்

மார்க்கெட்டிங்
பிரீமியம் ஸ்டோரி
News
மார்க்கெட்டிங்

M A R K E T I N G

சுப.மீனாட்சி சுந்தரம்

இன்றைக்கு வெற்றிகரமாக விளங்கும் எல்லா பிசினஸ் நிறுவனங்களும் ‘மார்க் கெட்டிங் மிக்ஸ்’ என்பதில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டதாக உள்ளன. புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் இந்த ‘மார்க் கெட்டிங் மிக்ஸ்’ஸைச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரி, அது என்ன ‘மார்கெட்டிங் மிக்ஸ்’ என்று கேட்கிறீர்களா?

சுப.மீனாட்சி சுந்தரம்
சுப.மீனாட்சி சுந்தரம்

எந்தவொரு தொழில் துறையிலும் பயன்படுத்தக்கூடிய தயாரிப்பு மேம்பாட்டுக்கான ஓர் உலகளாவிய மாதிரிதான் இந்த ‘மார்க்கெட்டிங் மிக்ஸ்.’ ஒரு பெரிய, தொடர்ச்சியான சந்தைப்படுத்தல் வட்டத்தின் சமபிரிவுகளாக P - Product (தயாரிக்கப் படும் பொருள்), P - Price (விலை), P - Promotion (விற்பனை மேம்படுத்தல்), P - Place (விநியோகம்) என்கிற நான்கையும் பிரித்துக்கொள்ளலாம். ஜெரோம் மெக்கார்த்தி என்ற அமெரிக்க பேராசியர் அறிமுகப் படுத்தியதுதான் இந்த நான்கு அம்ச சந்தைப்படுத்தல் கலவை. இந்தக் கலவையில் உள்ள நான்கு அம்சங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

P - Product (தயாரிப்பு/பொருள்)

பொருள் என்பது ஒருவர் பயன்படுத்தக்கூடிய உருவமுள்ள சாதனம், அதன் வடிவமைப்பு, தரம், தோற்றம், சிறப்பம்சங்கள், பிராண்டின் பெயர் ஆகியவற்றைக் குறிக்கும். உதாரணம், சோப், கார், இன்ஷூரன்ஸ் பாலிசி.

P - Price (விலை)

விலை என்பது ஒரு பொருளை வாங்குவதற்காக அளிக்கக்கூடிய பணமாகும். பொருளின் விலையை நிர்ணயிக்கும் வழிமுறைகள், சலுகைகள், லாப விகிதம், விலைக் கொள்கைகள், கடன் வசதி ஆகியவை அடங்கும். உதாரணம், அதிரடித் தள்ளுபடி விற்பனை விலை.

P - Place (விநியோகம்)

இடம் என்பது தயாரிக்கப்பட்ட பொருள், அதன் இலக்கான வாடிக்கையாளர்களை அடைகிற பகுதியாகும். விநியோகமுறை, போக்கு வரத்து, இடைத்தரகர்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, விற்கப்படும் கடைகள், அவை அமைந்துள்ள இடங்களைக் குறிக்கும். உதாரணம், சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடை, பெட்டிக்கடை, ஷோரூம்.

P - Promotion (விற்பனை மேம்படுத்தல்)

பொருளை விற்பனை செய்ய மேற்கொள்ளும் செயல்கள். இதில் விளம்பரம், நேரடி விற்பனை, விற்பனை உத்திகள், விற்பனை மேம்பாட்டுச் சலுகைகள், ஊடகங்கள், விற்பனையாளர் திறன் ஆகியவை அடங்கும். உதாரணம், வாய்வழிப் பிரசாரம், இலவசங்கள், ஒன்று வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ, அதிக எடை - அதே விலை.

இதுதான் அந்த நாள் முதல் இந்த நாள் வரை, அனைத்து வணிக மேலாண்மை வகுப்புகளில் படித்தது, பார்த்தது, கேட்டது. சந்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த நான்கு அம்சங்களை அடித்தளமாகக் கொண்டு அனைத்து உத்திகளும் அமைக்கப் படுகின்றன எனச் சிலர் சொன்னாலும், இது பழைய சிலபஸ் எனக் கூறுவோரும் உண்டு. 1980-களில் பல கோட்பாட்டாளர் கள் சந்தைப்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் இதில் மேலும் மூன்று P-களை இதனுடன் சேர்த்தனர்.

அவை, People (மக்கள் / பணியாளர்கள்) Process (செயல்முறை), Physical Eveidence) (நேரடிச் சான்றுகள்). இவை எல்லா வற்றிற்கும் மேலாக எட்டாவதாக ஒன்று வந்திருக்கிறது. அதுதான் Politics என்ற அரசியல். இந்த எட்டாவது P மற்ற 7 P-க்களையும் பாதிக்கும். சந்தைப்படுத்தலில் 8 P-க்களைக் கருத்தில் கொண்டு வணிகத்தைக் கையாள வேண்டும்.

People (மக்கள்)

ஒரு நிறுவனம் தனது வர்த்தகத்தில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அதன் பணியாளர்களின் செயல்திறன் மிகவும் முக்கியம். ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பரிசோதித்து உணர்ந்து தெரிந்துகொள்வதற்கு முன் நிறுவனத்தின் பணியாளர்கள் மூலமாகவே நிறுவனம் பார்க்கப் படுகிறது. எனவே, அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். பணிபுரியும் வேலைக்கான பயிற்சி என்பது வாடிக்கையாளர் களிடம் சரியான முறையில் நடந்துகொள்வதற்கான பயிற்சி. வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் முறை, இதை விற்பனை குறித்து மட்டும் என எடுத்துக்கொள்ளத் தேவை யில்லை. The next proess is our customer என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அடுத்த செயல் பாடுதான் நமது வாடிக்கையாளர் என்ற முறையில் ஒவ்வொரு துறையிலும் நாம், நமது இன்டர்னல் கஸ்டமர் என்று சொல்லக்கூடிய நிறுவனத்துக்குள் இருக்கும் பணியாளர்களையும் வாடிக்கையாளர்களாகக் கருத வேண்டும். பணியாளர்கள் தங்களது முதன்மைப் பணியில் தேர்ந்தவர்களாக இருப்பதுடன், தனிப்பட்ட திறமைகளிலும், வாடிக்கையாளர் சேவையின் தேவைகளைப் புரிந்துகொண்டு நடப்பவராகவும் இருக்க வேண்டும்.

உதாரணம், விற்பனை செயல்பாட்டில் ஈடுபடும் ஊழியர்களிலிருந்து மேலாளர், இயக்குநர்கள் வரை இதில் அடங்குவார்கள்.

மார்க்கெட்டிங்
மார்க்கெட்டிங்

Process (செயல்முறை)

ஒரு நிறுவனம் ஒரு பொருளுக்கான ஆர்டரைப் பெறுகிறது என்றால், அதைக் குறித்த நேரத்தில், சரியான தரத்தில், திறம்பட பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நிறுவனத்தின் செயல்முறைகள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் செயல்முறைகள் மூலம் வாடிக்கையாளர்களால் நிறுவனத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடியும்.

உதாரணம், ஆர்டர் வந்த பிறகு அந்தப் பொருள் வாடிக்கை யாளரைச் சேரும்வரையில் உள்ள செயல்முறைகள் மட்டுமன்றி திரும்பப் பெறுதல், வாடிக்கையாளர் சேவை, விற்பனைக்குப் பிந்தைய சேவை, பிற சேவைகள் ஆகியவற்றில் உள்ள செயல்முறைகளைக் குறிக்கும்.

Physical eveidence (நேரடிச் சான்றுகள்)

இயற்பியல் சான்றுகள் சேவை வழங்கப்படும் சூழலைப் பற்றியது. சேவையின் செயல் திறன் மற்றும் தகவல் தொடர்புக்கு உதவும் எந்தவொரு பொருள்களும் இதில் அடங்கும். எடுத்துக் காட்டாக, ஒரு வாடிக்கையாளர் ஓர் உணவகத்தின் சேவையின் தரத்தை ஆய்வு செய்வதன் மூலம் அங்கே உணவு அருந்தலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க முயற்சி செய்கிறார். அதன், சுகாதார அமைப்பு அலங்காரங்கள், போன்றவை சான்றுகளாகக் கருதப்படும்.

உதாரணம், பொருள்கள் கடையில் அடுக்கி வைத்திருக்கும், நேர்த்தி, உணவகத்தில், உணவு பரிமாறும் ஊழியர்களின் தூய்மை, பில்கள், டிக்கெட்டுகள், நிறுவனம் பெற்ற விருதுகள்.

Politics (அரசியல்)

இந்த நூற்றாண்டை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் எட்டாவது சக்தியாக உருவெடுத்திருப்பதுதான் Politics என்னும் அரசியல். அரசியல் நிலைமை ஓரளவு நிலையானதாக இருந்தாலும், கொள்கையில் உயர் மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதுடன், வர்த்தகத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இது அரசாங்க முன்னுரிமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதனால், புதிய முயற்சிகள் (உதாரணம் BS VI வாகன விதிமுறைகள்) அறிமுகப்படுத்தப்படுவதுடன், வர்த்தக விதிமுறைகள் (இ-வே பில்)அல்லது வரிவிதிப்புகளிலும் (ஜி.எஸ்.டி வரிக் கொள்கை) மாற்றங்கள் உருவாகும்.

ஆட்சியின் ஸ்திரத்தன்மை - நிலையான ஆட்சியாளர்கள் கொண்டு வரும் திட்டங்கள் மூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் ஊழல் நிலை - புதிய முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கு இது ஒரு தடையாக இருக்கக்கூடும். அண்டை நாடுகளின் நிலைத்தன்மை (Stability of neighboring countries), வரிவிதிப்பு விதிமுறைகள் (Tax regulations), அதிகாரத்துவ சிக்கல்கள் (Bureaucracy issues), வர்த்தகக் கட்டுப்பாடுகள் அல்லது சீர்திருத்தம் (Trade restrictions / Reforms), வேலைவாய்ப்பு, செயல்பாட்டு சட்டங்கள் (Employment & & Operational laws). இதைத் தவிர, மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்டங்களை மாற்றி அமைத்தல், வர்த்தகத்தில் உள்ள பிற நிறுவனங்களை சிக்கலில் ஆழ்த்தக்கூடும்.

உதாரணம், BS VI என்ற Emission norms வாகன உமிழ்வு விதிமுறைகள் கட்டாய மாக்கப்பட்ட பின் ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் உற்பத்தி சற்று பாதிக்கப்பட்டது.

ஆக, இந்த 8 P-க்களையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்பதை மனதில்கொண்டு செயல்படுங்கள்!

பிட்ஸ்

லக அளவில் செயல்படும் 100 முக்கியமான சமூகத் தாக்கம் ஏற்படுத்தும் நிறுவனங்கள் பட்டியலை ‘டைம்’ பத்திரிகை நிறுவனம் வெளியிட்டிருக் கிறது. இதில் இந்தியாவின் ஜியோ மற்றும் பைஜு நிறுவனங்கள் இடம்பெற்று உள்ளன!