Published:Updated:

சிறுதொழில் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டிய 5 பெரிய தவறுகள்..! இது வளர்ச்சிக்கான வழிகாட்டல்...

S M E M A N A G E M E N T

பிரீமியம் ஸ்டோரி

தனிநபராக வியாபாரம் செய் பவர்களில் சிலர் ஜெயிக் கிறார்கள், சிலர் ஜெயிக்க முடியாமல் தடுமாறுகிறார் கள். ‘நானும் அவரும் ஒரே வியாபாரம் தான் செய்கிறோம். அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். என்னால் முடிவதில்லையே... ஏன்’ என்கிற கேள்வி சொந்தமாகத் தொழில் செய்கிறவர்கள் பலரிடமும் இருக்கும். ‘‘ஐந்து தவறுகளை நீங்கள் செய்யாமல் இருந்தாலே போதும், உங்கள் பிசினஸ் சிறப்பாகச் செயல்படும்’’ என்கிறார் நிறுவன மேம்பாட்டு ஆலோசகர் கேசவன் பாண்டியன். அந்த ஐந்து தவறுகள் என்னென்ன?

கேசவன் பாண்டியன்
கேசவன் பாண்டியன்

1. முழுமையான திட்ட அறிக்கை தயாரா?

‘‘உற்பத்தியோ, வணிகமோ ஒரு தொழில் ஆரம்பிக்க பணம் இருந்தால் மட்டும் போதாது. முழுமையான திட்ட அறிக்கையும் (Detailed Project Reports - DPR) மிக மிக முக்கியம். இது இல்லாமல் ஒரு தொழிலை ஆரம்பித்தீர்கள் எனில், அதில் நீங்கள் வெற்றி பெறுவது சினிமா கதாநாயகர்கள் ஒரே பாட்டில் ஜெயிப்பது போல கற்பனையில் மட்டும்தான் நடக்கும்.

சரி, முழுமையான திட்ட அறிக்கை ஏன் முக்கியம்? ஒரு முழுமையான திட்ட அறிக்கையில் உங்கள் தொழில் தொடர்பான ஏழு வருடத் திட்ட மிடல் இருக்கும். என்ன பொருளை விற்பனை செய்யப்போகிறீர்கள், அதற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், தொழில் ஆரம்பித்த எத்தனையாவது வருடத்திலிருந்து லாபம் கிடைக்க ஆரம்பிக்கும், தொழில் ஆரம்பித்த மூன்றாவது வருடம், ஐந்தாவது வருடம், ஏழாவது வருடம் எவ்வளவு லாபம் கிடைக்கும், நீங்கள் தயாரிக்கிற பொருளுக்கு மார்க்கெட் மோசமான நிலைமையில் இருந்தால் எவ்வளவு லாபம் வரும், மார்க்கெட் நல்ல நிலைமையில் இருந்தால், எவ்வளவு லாபம் ஆகியவை அந்த முழுமையான திட்டமிடலில் இருக்க வேண்டும்.

தவிர, உங்களுடைய பொருளை மொத்த வியாபாரிக்கு விற்பனை செய்தால், எவ்வளவு லாபம் வரும், சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்தால், எவ்வளவு லாபம் வரும் என்கிற கணக்கிடலும் அந்த அறிக்கையில் இருக்க வேண்டும். கூடவே, நீங்கள் தொழில் செய்ய இருக்கிற கட்டடத்துக்கான வாடகை, தொழிலுக்காக வாங்கிய கடனுக்கான வட்டி, வாகனங்கள், பெட்ரோல் செலவு, உங்களிடம் வேலை பார்ப்ப வர்களுக்குத் தர வேண்டிய சம்பளம், அதிலும் தொழில் ஆரம்பித்த புதிதில் 15,000 ரூபாய் சம்பளம் தருகிற ஒரு நபருக்கு, மூன்று வருடங்களில் 22,000 சம்பளமாகத் தர வேண்டி வரும். அதையும் இந்தத் திட்ட அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

நீங்கள் சின்னதாக மொபைல் சர்வீஸ் கடை ஆரம்பிக்கிறீர்கள் என்றாலும், முழுமையான திட்ட அறிக்கையைக் கண்டிப்பாகத் தயாரிக்க வேண்டும். இது இல்லை எனில், வருமானம் எவ்வளவு வருகிறது, அதில் உங்கள் லாபம் என்ன என்கிற தெளிவு இல்லாமலே தொழிலை நடத்திக் கொண்டிருப் பீர்கள். விளைவு தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு போகவே முடியாது. இந்த அறிக்கை யைத் தயாரிக்க நீங்கள் ஓர் ஆடிட்டரை அணுகலாம்.

2. மனிதவளத்தை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்?

மனிதவளம் இல்லாமல் உலகில் எந்தத் தொழிலையும் செய்ய முடியாது. இந்த மனிதவளத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, தான் வேலை பார்க்கிற நிறுவனத்தை நேசிக்கும் மனப்பாங்கை உருவாக்குவது. இரண்டாவது, எந்த வேலைக்கு அவர்களைத் தேர்ந்தெடுக் கிறீர்களோ, அதற்கான முழுத் தகுதி அவர்களிடம் இருக்க வேண்டும். இரண்டாவது விஷயத்தை மட்டும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

நீங்கள் ஓர் உணவகம் நடத்தி வருகிறீர்கள். உங்களிடம் வேலை பார்க்கிற சர்வர் ஹோட்டலுக்கு வருகிற கஸ்டமர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதுடன், அடிக்கடி வருகிற கஸ்டமர்களிடம், ‘உங்கள் பரோட்டாவுக்கு இதை ட்ரை பண்ணிப் பாருங்க, ஸ்பெஷலா தயாரிச்சிருக்கோம்’ என்று சின்னக் கிண்ணத்தில் ஒரு குருமாவைக் கொண்டு வந்து வைப்பார். இது பில்லில் வராது. இதனால், ஹோட்டலுக்கு நஷ்டமும் கிடையாது. ஆனால், குருமாவை ருசித்த அந்த கஸ்டமரின் வாய்வழி விளம்பரம் மூலம் இன்னும் நிறைய பேர் உங்கள் உணவகத்துக்கு வருவார்கள். இதை ஆங்கிலத்தில் ‘கஸ்டமர் டிலைட்’ என்போம். இவர்கள் கொடுத்த வேலையைத் தாண்டி வாடிக்கையாளர் களைத் திருப்திப்படுத்த பல வேலை களைச் செய்வார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ள நபர்களை, தேர்ந்தெடுக்கும்போதே அவர்களுடைய வேலை விவரத்தை எழுத வைத்துக் கண்டறிய வேண்டும். வெளிநாடுகளில் மென் திறன், கடினத் திறன் இரண்டையும் உளவியல்ரீதியாக ஆராய்ந்த பிறகே வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். ரெஸ்யூமை மட்டுமே வைத்து பணியாளர்களின் மனப்பான்மை யைக் கண்டறிய முடியாது.

சிறுதொழில்
சிறுதொழில்

3. தரக்கட்டுப்பாடா... அப்படி என்றால்?

தரக் கட்டுபாடு என்பது நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் ஒரு பொருளை உற்பத்தி செய்வதல்ல. மக்களுக்குத் தேவையான தரத்தில் உற்பத்தி செய்து தருவதே தரக் கட்டுப்பாடு. உதாரணமாக, சென்னையில் இருக்கிற தண்ணீர் ஒரு சுவையில் இருக்கும். வாரணாசியில் வேறு மாதிரி இருக்கும். கொல்கத்தாவில் வேறு சுவையில் இருக்கும். எந்த இடத்தில் நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களோ, அந்தப் பகுதி மக்களுக்குப் பிடித்ததை அல்லது வேண்டியதைத்தான் நீங்கள் விற்பனை செய்ய வேண்டும்.

தரக் கட்டுப்பாட்டுக்கும் வாடிக்கையாளர்களின் பின்னூட்டத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அதில் மிகப்பெரிய விரிசல் இருக்கிறது. உங்கள் பொருள் மீது அக்கறை கொண்டிருப்பவர்கள் மட்டுமே உங்கள் பொருளைப் பற்றி புகார் சொல்வார்கள். மற்றவர்கள் அடுத்த பிராண்டுக்கு மாறிவிடு வார்கள்.

கஸ்டமர்கள் உங்கள் பொருள் மீதான தங்களுடைய புகாரைத் தெரிவிப்பதற்காக போன் செய்தால், ‘பத்து நிமிடம் கழித்து போன் பண்ணுங்க’ என்கிற கலாசாரம் இங்கு அதிகம். இந்த விஷயத்தில் பெரும்பங்கு வேலை பார்ப்பவர்களிடம்தான் இருக் கிறது. இந்த விஷயத்தில் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

4. வளர்ச்சிக்குப் பயிற்சி அவசியம்!

பல தொழிலதிபர்கள் ‘‘இதற்கெல்லாம் ஏன் செலவு செய்யணும்’ என்று கோட்டை விடுகிற விஷயமிது. இந்தப் பயிற்சியில் வேலையைச் சரியாகச் செய்வதற்கான தூண்டுதல், தன்னம்பிக்கை, அடுத்தகட்ட நகர்வுக்கான முயற்சி என ஒரு பணியாளருக்குத் தேவையான அத்தனை நேர்மறையான விஷயங்களையும் சொல்லித் தருவார்கள். ஒருவருக்கு புரொமோஷன் தருகிறீர்கள் என்றாலும், அதற்கான தகுதியை அவருக்குப் பயிற்சியளித்த பிறகே வழங்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சி ஒரு தொழிலாளியின் கண்டுப்பிடிப்பையும் உங்களிடம் கொண்டு வந்துசேர்க்கும்.

உதாரணமாக, ஒரு சம்பவம். அது டூத் பேஸ்ட் தயாரிக்கிற நிறுவனம். பல காலமாக லாபம் அதிகரிக்கவே இல்லை. அதற்கானத் தீர்வு, உற்பத்தித் துறையில் வேலை பார்த்து வந்த படிப்பறிவில்லாத ஒரு நபரிடம் இருந்தது. அதாவது, நகரங்களுக்கு அனுப்புகிற டூத்பேஸ்ட் டியூபின் துளையைச் சற்றுப் பெரிதாக்கச் சொன்னார், அவ்வளவுதான். டூத் பேஸ்ட் விற்பனை அதிகரித்தது. இது, பயிற்சி கொடுத்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. இந்தப் பயிற்சி அல்லாத நிறுவனங்களில் மேலதி காரிக்குப் பயந்தே தொழிலாளி களின் கண்டுபிடிப்புகள் அவர்களுடன் அழிந்துவிடும்.

5. வணிக செயல்முறை மதிப்பாய்வு (business process review) செய்கிறீர்களா?

‘ரெவ்யூ முடிச்சிட்டீங்களா, டேட்டா கொண்டு வந்திடுங்க’ - இந்தியாவில் இப்படித்தான் பெரும்பாலான நிறுவன உரிமையாளர்கள் நடந்து கொள்கிறார்கள். இது வணிக மதிப்பாய்வு மட்டுமே. வணிக செயல்முறை மதிப்பாய்வு அல்ல. சிறு நிறுவனங்கள் எனில், அத்தனை பேரும் இந்த மதிப்பாய்வில் கலந்துகொள்ள வேண்டும். பெரு நிறுவனங்கள் எனில், உரிமையாளர், துறைத் தலைவர்கள் மட்டும் சேர்ந்து இந்த மதிப்பாய்வை நடத்துவார்கள். இதில் நிறுவனம் செய்ததில் எது சரி, எது தவறு என்று ஆரம்பித்து, நிறுவனத்தின் உயர்பதவியில் இருப்பவர்களின் சரி, தவறுகள், வேலை செய்பவர்களின் சரி, தவறுகள் என எல்லாமும் கலந்து ஆலோசிக்கப்படும். தவிர, நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கிற நிகழ்ச்சியிலிருந்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிற நபர்களின் குணம் வரைக்கும் இங்கு ஆலோசனை செய்யப்பட்டு, அதற்கேற்ற முடிவை எடுக்க வேண்டும். சிறு மற்றும் குறு தொழில்களில் இது சரியாக நடப்பதில்லை. வணிக செயல் முறை மதிப்பாய்வு மட்டும் மாதம்தோறும் சரியாக நடந்தால், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே முடியாது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு