Published:Updated:

ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆரம்பிக்க இது சரியான தருணமா..?

ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குவது கடினமான காரியம் என்று பலரும் நினைக்கின்றனர். அது உண்மை அல்ல. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்குவது மிகச் சுலபம்; அதை வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதுதான் கடினம். சமீபத்தில் உலக முதலீட்டாளர்கள் அனைவரும் உற்றுநோக்கிய ‘ஃப்ரஸ்வொர்க்ஸ்’ நிறுவனமும், 2010-ம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தான். இப்போது அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் ஐ.பி.ஓ வெளியிடும் அளவுக்கு அபாரமான வளர்ச்சியை அந்த நிறுவனம் அடைந்திருக்கிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆரம்பிக்க இது சரியான தருணமா..?

இன்றைக்குப் பெரிய நிலையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப்- ஆகத் தொடங்கப்பட்டதுதான். பெரும் முதலீடுகள் இன்றி, மிகச் சிறிய தொகை கொண்டு தொடங்கி, மாபெரும் வெற்றிகளைக் குவித்த மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் ஸ்டார்ட்அப் நிறுவனங் களாகத்தான் தங்களின் முதல் அத்தியாயத்தை எழுதின.

கொரோனாவின் தாக்கம் மெள்ள மெள்ள குறைந்துவரும் இந்த நேரத்தில், ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஆரம்பிக்கலாமா, ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆரம்பிக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்கிற கேள்விகளை சென்னை ஐ.ஐ.டி-யின் நிர்வாகத் துறை பேராசிரியரும் ஸ்டார்ப்அப் நிபுணருமான எ.தில்லை ராஜனிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.

விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்...

“இன்றைய நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் ஒரு ஸ்டார்ட்அப் பிசினஸ் தொடங்க வேண்டும் என்பதைத் தங்களுடைய லட்சியங்களில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். இளைஞர்களின் இந்த மனநிலை வரவேற்கத் தக்க விஷயம்தான். ஸ்டார்ட்அப் பிசினஸை தொடங்க நேரம், காலம் எல்லாம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால், அந்த நிறுவனங்கள் மூலம் வருமானம் ஈட்ட நேரம் எடுக்கும் என்பதை இளைஞர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பிக்கும் ஒருவர் விடாமுயற்சியுடன் உழைக்கும்போது, நிச்சயம் அவரால் வெற்றி பெறமுடியும்” என்றவர், ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காகத் திட்டமிடல் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி எடுத்துச் சொன்னார்.

சிறு நகரங்களில் அதிக வாய்ப்பு...

“பொதுவாக, ஸ்டார்ட்அப் என்றாலே பெரும்பாலும் சாஃப்ட்வேர் கம்பெனியாகத் தான் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறு. பல வகையான தொழில் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழில் பிரிவிலும் பல பிசினஸ் பிரிவுகள் உள்ளன. இன்றைய நிலையில், கல்வி, சுகாதாரம், உணவு, தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு, நிதி, சில்லறை விற்பனை, முதலீடு, ஆடை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆரம்பிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நன்கு வளர்ந்த நகரங்களைவிட, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் என்று சொல்லப்படும் டயர் - 2 மற்றும் டயர் - 3 நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆரம்பிக்க அதிக வாய்ப்புகள் உருவாகியிருக் கின்றன.

ஐடியா... ஐடியா... ஐடியா!

எந்தவொரு சிறந்த பிசினஸும் சிறந்த ஐடியாவில் இருந்துதான் உருவெடுக்கிறது. அது முற்றிலும் புதிதாக இருக்கலாம், ஏற்கெனவே இருப்பதைவிட சிறப்பாக அல்லது வேகமாகச் செய்கிற மாதிரி இருக்கலாம். ஆனால், எந்தவொரு பிசினஸுக்கும் ஐடியா என்பது அந்த பிசினஸ் தொடங்கப்பட ஒரு மிக முக்கியமான காரணி.

இரண்டு வகை ஸ்டார்ட்அப்...

சர்வீஸ் ஸ்டார்ட்அப் மற்றும் புராடக்ட் ஸ்டார்ட்அப் என இரண்டு வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பிக்கலாம். சர்வீஸ் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படாது. ஆனால், அதற்கான திட்டமிடலில் அதிக கவனம் தேவைப்படும். புராடக்ட் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆரம்பிக்க அதிக அளவில் மூலதனச் செலவுகள் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிதித் திட்டமிடல் அவசியத்திலும் அவசியம்...

ஒரு ஸ்டார்ட்அப் அல்லது பிசினஸ் தொடங்குவதற்கு முன்பாக அதற்குத் தேவையான நிதியை மதிப்பிடுவதுடன், அதை எங்கெங்கு, எப்படிச் செலவிடப்போகிறோம், ஒவ்வோர் ஆண்டும் தேவைப்படும் நிதி எவ்வளவு, முதலீட்டாளர்களிடம் எத்தனை கட்டங்களாக நிதி திரட்ட இருக்கிறோம், எந்தெந்தக் காலகட்டங்களில் வங்கிகளை நாட வேண்டும், எந்தெந்த வகையில் நிதி ஆதாரங்களைத் திரட்டலாம், நிறுவனத்தின் வரவு மற்றும் செலவுக்கான ஆதாரம் போன்ற விரிவான திட்டமிடல் இருக்க வேண்டும்.மேலும், உங்களின் நிதி நிலைமை எப்படி இருக்கப்போகிறது என்பதை முதலிலேயே திட்டமிட்டுக்கொள்ளவும் தவறக் கூடாது.

உதாரணமாக, நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்யப் போகிறீர்கள், நீங்கள் ஏற்கெனவே செய்துவரும் வேலையைத் தொடரப்போகிறீர்களா அல்லது அந்த வேலையை விட்டுவிட்டு, புதிதாகத் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் மட்டும் கவனம் செலுத்தப்போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள். ஒருவேளை, வேலையை விட்டுவிட்டால், பிசினஸ் மேம்படும் வரை உங்கள் செலவுகளை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

எ.தில்லைராஜன்
எ.தில்லைராஜன்

கேள்விகளுக்கு விடை...

முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து நிதியைப் பெறுவது எப்படி, அதற்கான நல்ல பிசினஸ் திட்டம் உங்களிடம் இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கு உங்களிடம் விடை இருக்க வேண்டும்.

உங்கள் பிசினஸ் எதைப் பற்றியது, அதைச் செயல்படுத்த என்ன மாதிரியான ஆய்வுகளை செய்தீர்கள், ஆய்வு முடிவில் என்ன கிடைத்தது, உங்கள் நிறுவனத்தை எப்படி அமைத்து, வழிநடத்தப் போகிறீர்கள், உங்கள் நிறுவனத்தின் நீண்ட கால இலக்குகள் என்னென்ன, உங்கள் நிறுவனம்/தயாரிப்பை எப்படிச் சந்தைப்படுத்தப் போகிறீர்கள், சந்தை மதிப்பை எப்படி உயர்த்தப்போகிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொண்டு, அதற்கான விடையை முதலில் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மக்களுக்கான தேவைகளைக் கண்டறிதல்...

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, அவர்களுக்கான தேவை என்ன என்பதை முதலில் ஆராய்வது முக்கியம். ஏனெனில், நிறுவனம் அமைய இருக்கும் இடத்தில் இருக்கும் மக்கள்தாம் உங்களுடைய முதல் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.

பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஐடியாவைக் கொண்டு தொடங்கியதால்தான் மிகப் பெரிய வெற்றி அவர்களுக்கு சாத்தியமானது. அதனால் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் பிரச்னை களைத் தேடுங்கள்; தினம் தினம் மக்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் என்னவென்று ஆராயுங்கள். அதை ஒரு பட்டியலாக இட்டுப் பார்த்தால், முதல் நாளிலேயே குறைந்தது உங்களிடம் 10 பிரச்னைகள் கையில் இருக்கும். இப்போது உங்களுக்கு பிரச்னை என்ன என்று தெரியும். அந்த பிரச்னையை நீங்கள் எப்படி தீர்க்கப்போகிறீர்கள் என்று சிந்திக்கத் தொடங்குங்கள். அப்போது, அதற்கான சேவைகளை நீங்கள் எப்படி வழங்கப்போகிறீர்கள் என்பதில் தெளிவு கிடைக்கும்.

குழுவை உருவாக்குதல்...

பொதுவாக, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆரம்பிக்கும்போது ஒரு கண்டுபிடிப்பாளர், ஒரு தயாரிப்பு டிசைனர், ஒரு சந்தைப்படுத்தும் வல்லுநர் மற்றும் ஒரு நிதி ஆலோசகர் இருக்க வேண்டும். இவை பார்க்க பெரிய விஷயங்கள் போல் தோன்றினாலும், இந்தத் திறமைகளைக் கொண்டவர்கள் உங்கள் நட்பு வட்டத்திலேயே நிச்சயம் இருப்பார்கள். அவர்களைத் தேடி கண்டுபிடித்து, இணைத்துக்கொள்ளுங்கள்.

பிராண்டிங்...

உங்கள் நிறுவனத்துக்குத் தேவையான சட்டரீதியான ஆலோசனைகள் உதவிகளைப் பெறுவதிலும் கவனம் அவசியம். புதிய நிறுவனம் லாப நோக்கில் தொடங்கப் படுகிறதா, அப்படிப்பட்ட நிறுவனமாக இருந்தால் உரிமை யாருக்கு, பங்குதாரர்கள் யார் யார், பிரைவேட் லிமிடெட் கம்பெனியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உரிமையாளராக நீங்கள் உங்களை அறிவித்தால், முதலீட்டைத் திரட்டுவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் என்னென்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி நன்கு செயல்படத் தேவையான அனைத்து விஷயங்களையும் முறையாகச் செய்த பிறகு, நிறுவனத்தை முறையாகப் பதிவு செய்யுங்கள். தற்போதுள்ள சூழலில், பிரைவேட் லிமிடெட் கம்பெனி தொடங்குவது பல வகையிலும் ஆதாயம் தரலாம். ஏனெனில், பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன.

உங்கள் நிறுவனம் அல்லது தயாரிப்பைப் பற்றி மக்களிடம் வழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பரப் படுத்த வேண்டியது அவசியம். எந்தெந்த முறையில் நீங்கள் மக்களை அணுகப் போகிறீர்கள் என்பதற்கு ஏற்றபடி, விளம்பர யுக்தியைக் கையாள வேண்டும். ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கியவுடன், தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகளை எடுப்பதும் நிறுவனத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதும் அவசியம்” என்றார் தெளிவாக.

ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆரம்பிக்கும் கனவுடன் இருக்கும் இளைஞர்கள் உடனே களத்தில் இறங்கலாமே!