Published:Updated:

`கோவிட்டுக்குப் பிறகு புத்தக வாசிப்பு அதிகரித்திருக்கிறது!'- ஹார்ப்பர் காலின்ஸ் CEO ஆனந்த் பத்மநாபன்

ஆனந்த் பத்மநாபன்
News
ஆனந்த் பத்மநாபன்

பதிப்பகத் துறையின் தற்போதைய நிலை, படிக்கும் முறை, புத்தகங்களைத் தேர்வு செய்யும் முறை எனப் பல விஷயங்கள் குறித்து ஹார்ப்பர் காலின்ஸ் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் பத்மநாபனிடம் உரையாடினேன். அந்த உரையாடலிலிருந்து...

இப்போதெல்லாம் யார் படிக்கிறாங்க, எல்லாம் வீடியோவுக்கு மாறிட்டாங்க என்னும் கருத்து பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், எதார்த்தம் வேறாக இருக்கிறது. தற்போது படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. 205 ஆண்டுகளாக ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் 30 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. பதிப்பகத் துறையின் தற்போதைய நிலை, படிக்கும் முறை, புத்தகங்களைத் தேர்வு செய்யும் முறை எனப் பல விஷயங்கள் குறித்து ஹார்ப்பர் காலின்ஸ் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் பத்மநாபனிடம் உரையாடினேன். அந்த உரையாடலிலிருந்து...

``உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்..."

``நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை அயனாவரம் மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளில்தான். பச்சையப்பா கல்லூரியில் படித்தேன். படிக்கும்போதே பகுதிநேரமாக லேண்ட்மார்க் நிறுவனத்தில் பணியாற்றினேன். பதிப்பகத் துறையில்தான் இருக்கப்போகிறோம் என எனக்கு அப்போது தெரியாது. அதைத் தொடர்ந்து பென்குயின் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாகச் சேர்ந்தேன். அங்கு 18 ஆண்டுகள் வேலை செய்தேன். 2015-ம் ஆண்டு முதல் ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறேன்."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதா? அது குறித்து உங்கள் பார்வை என்ன?"

``படிக்கும் பழக்கம் குறைகிறது என்பது பொதுவான வாதம். மாறாக படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. படிப்பதன் மூலமாகவே சமூகம் அடுத்தகட்டத்துக்கு உயர்கிறது. அதன் பிறகு மேலும் தொடர்ந்து படிக்கப்படுகிறது. அதுதான் தற்போது நடக்கிறது. கோவிட்டுக்கு முன்பு இருந்ததைவிட படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. உதாரணமாக, எங்களது அல்கெமிஸ்ட் புத்தகம் அறிமுகமாக 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் ஆண்டுக்கு 2 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகின்றன. சர்வதேச அளவில் அதிக அளவுக்கு (எண்ணிக்கை அடிப்படையில்) ஆங்கில புத்தகங்கள் விற்பனையாகும் சந்தை இந்தியாவாக இருக்கிறது. இந்தியாவில் 6.5 கோடிக்கு மேற்பட்டவர்கள் புத்தகம் படிப்பவர்கள். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சிறிய அளவாக இருந்தாலும் இவர்கள் ஏதாவது ஒரு புத்தகம் படிக்கிறார்கள்."

Harper collins Office
Harper collins Office

``புத்தகத்தை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?"

``ஆசிரியர்களை நோக்கி நாங்களும் செல்கிறோம். எங்களை நோக்கி எழுத்தாளர்களும் வருகிறார்கள். உதாரணத்துக்கு `Spy chronicles' என்னும் புத்தகத்திற்காக, இந்திய உளவு அமைப்பான `ரா'-வின் மூத்த உயர் அதிகாரி மற்றும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி இருவரையும் தனித்தனியாக சந்தித்துப் பேட்டி எடுத்து புத்தகமாக வெளியிட்டோம். இந்தப் புத்தகம் மிகப்பெரிய வெற்றி.

அதேபோல ரகுராம் ராஜனை சந்தித்து புத்தகம் எழுதுமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் எழுதுவதற்கு சரியான நேரம் இல்லை. ஒருவேளை எழுத திட்டமிட்டால் உங்களுக்காக எழுதுகிறேன் எனக் கூறினார். பணமதிப்பு நீக்கம் முடிந்து ஒர் ஆண்டுக்குப் பிறகு எழுதலாம் எனத் தெரிவித்தார். அந்தப் புத்தகமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

இது தவிர எங்களுக்கு பலர் எழுத முன்வருவார்கள். எங்களிடம் பலமான ஆசிரியர் குழு இருக்கிறது. இந்தக் குழு புதியவர்களைக் கண்டறிந்து எழுத வைக்கிறது. இதற்குப் பிறகுதான் வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது, விலை எவ்வளவு வைக்கலாம் என்பதை முடிவெடுப்போம். எங்களை பொறுத்தவரை 45 - 50% நான் ஃபிக்‌ஷன் புத்தகங்கள் உள்ளன. 30% அளவுக்கு ஃபிக்‌ஷன் புத்தகங்களும் மீதமுள்ளவை குழந்தைகளுக்கான புத்தகங்களுமாகவும் இருக்கின்றன.

``ஃபிக்‌ஷன் புத்தகங்களைத் தொடர்ந்து எழுத முடியும். புதிய புதிய கதைகள் கிடைக்கும். ஆனால், நிர்வாகம் மற்றும் இதர நான் ஃபிக்‌ஷன் புத்தகங்களுக்கு புதிய தேவை இருக்கிறதா?"

``சில நிர்வாகப் புத்தகங்கள் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகிக் கொண்டிருக்கும். ஆனால், தற்போது மாறிவரும் உலகில் புதிய விஷயங்கள் குறித்து எழுத தேவை இருக்கிறதே! தற்போது உள்ள புத்தகங்கள் வேலை குறித்து உள்ளன. ஆனால் தற்போது முழு நேர வேலைக்கு செல்ல விரும்பாத நபர்கள் உருவாகியிருக்கிறார்கள். வீட்டில் இருந்து வேலை என தொழில் மற்றும் டெக்னாலஜி உலகம் மாறிக்கொண்டிருக்கும்போது அதற்கு ஏற்ற சிந்தனைகள் அவசியம்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``எழுத்தாளர்களாக இருந்து சம்பாதிக்க முடியுமா?"

``இதற்கு முடியும் என்று பதில் சொல்வது சரியானதாக இருக்கிறது. சினிமா போலதான் சிலர் மிகப்பெரிய ஹீரோவாக இருக்கிறார்கள். சில பட்ஜெட் ஹீரோவாக இருக்கிறார்கள். இங்கு பெரும் பணம் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதைதான் சொல்ல முடியுமே தவிர, உத்தரவாதம் கொடுக்க முடியாது. எழுத்தாளர்களுக்கு 10 சதவிகிதம் ராயல்டி இருக்கிறது. அதே சமயம் புத்தகத்தின் விலையை அதிகமாக வைக்க முடியாது. இதுதான் களம்."

Harper collins Office
Harper collins Office

``புத்தகங்கள் மூலம் படிப்பது குறைந்து இ-புத்தகம் அல்லது ஆடியோ புத்தகம் படிப்பது உயர்ந்திருக்கிறதா?"

``புத்தகமாக படிப்பதுதான் இன்னும் 90 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. ஆனால், புத்தகக் கடைகளில் வாங்காமல் இணையம் மூலம் வாங்குவது மிக வேகமாக உயர்ந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு 2,000-க்கும் மேற்பட்ட பெரிய புத்தகக் கடைகள் இருந்தன. தற்போது 200 மட்டுமே இருக்கின்றன. புத்தகக் கடைகள் நடத்துவது என்பது சவாலாக மாறி இருக்கிறது. வெளிநாடுகளில் புத்தகக் கடைகளுக்கு மட்டும் குறைந்த வாடகைகள் இடம் கிடைக்கும். ஆனால், இங்கு சாத்தியமில்லை. பெரிய மால்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கடை வைத்தால் பெரிய செலவாகிறது. அதைத் தாண்டியும் விற்பனை இருந்து லாபம் சம்பாதித்தால் மட்டுமே கடை செயல்படும்.

கிண்டில் அல்லது இ-புத்தகத்தின் பங்கு 5 - 6% சதவீதம் மட்டுமே இருக்கும். ஆடியோ புத்தகம் மிகச் சிறிய அளவில்தான் இருக்கிறது. இவை இரண்டும் தற்போதுதான் வளர்ந்து வருகின்றன. அமெரிக்காவில் இ-புத்தகம் 22 சதவிகிதம் வரை உயர்ந்தது. அதன் பிறகு 15 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது."

``புத்தகங்களைப் பொறுத்தவரை, பைரசி என்பது பிரச்னையா அல்லது புத்தகத்துக்குக் கிடைக்கும் மறைமுக விளம்பரமா?"

``இது மிகவும் சிக்கலான பிரச்னை. ஒருவருடைய அறிவை எந்த முதலீடும் இல்லாமல் பதிப்பாளர், எழுத்தாளர் அனுமதியில்லாமல் திருடுவது மிகப்பெரிய குற்றம். உதாரணத்துக்கு அல்கெமிஸ்ட் புத்தகம் எங்கள் மூலமாக 2 லட்சம் பிரதிகள் விற்கின்றன என்றால் கள்ளச் சந்தையில் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்கும் எனக் கணிக்கிறோம். இது மிகப்பெரிய எண். இவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்தாலும் சட்டம் பலவீனமாக இருப்பதால் அவர்கள் மீண்டும் வெளியே வந்துவிடுகிறார்கள். புத்தகங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என்பதால் அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லையா எனத் தெரிவில்லை.

புத்தகங்களைப்போல டிஜிட்டல் பைரசியும் அதிகமாக இருக்கிறது. நாங்கள் இதற்கென பிரத்யேக வழக்கறிஞர்கள் குழு வைத்து தொடர்ந்து இந்தச் சிக்கலை கையாளுகிறோம். எவ்வளவு கண்டுபிடித்தாலும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை."

``ஒவ்வொரு தொழிலும் மாநில மொழிகளில் விரிவடைந்து வருகிறது. தமிழில் வரும் திட்டம் இருக்கிறதா?"

``இல்லை. நாங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தொடர விரும்புகிறோம். மாநில மொழிகளில் சிறப்பான பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடம் இணைந்து பணியாற்றுகிறோம். மற்ற மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு அல்லது ஆங்கிலத்தில் இருந்து பிராந்திய மொழிகளுக்கு மாற்றம் செய்துகொள்கிறோம். பிராந்திய மொழிகளில் நுழைவது என்பது விற்பனை மட்டுமல்ல. பெரிய ஆசிரியர் குழு தேவைப்படும்.

``இனிவரும் காலத்தில் பதிப்புத் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும்?"

``சீரான வளர்ச்சி இருக்கும் எனச் சொல்ல முடியாது. உதாரணத்துக்கு 2020-ம் ஆண்டில் நாங்கள் மூன்று மாதங்களுக்கு எந்த விற்பனையும் செய்ய முடியவில்லை. அதே போல, 2008-ம் ஆண்டு சர்வதேச நெருக்கடி வந்தபோது புத்தக விற்பனையில் பெரிய மந்தநிலை இருந்தது. ஆனால், 1992-ம் ஆண்டிலிருந்து 10% முதல் 12% வரையிலான வளர்ச்சி புத்தக விற்பனையில் இருந்து வருகிறது."