Published:Updated:

2 நாள்களாக முடங்கிக்கிடக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இணைய சேவை! - சைபர் தாக்குதல் காரணமா?

தொழில்நுட்பக்கோளாறை விரைவில் சரிசெய்துவிடுவோம் என்றும், அதுவரை சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளும்படியும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சார்பில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது நாளாக இன்றும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாததால், மீண்டும் வங்கி சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

ஹெ.டி.எஃப்.சி வங்கி ஆன்லைன் சேவை முடக்கம்
ஹெ.டி.எஃப்.சி வங்கி ஆன்லைன் சேவை முடக்கம் ( vikatan )

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ஆன்லைன் பேங்கிங் சேவை மற்றும் மொபைல் பேங்கிங் ஆப் இரண்டும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நேற்று (திங்கள்கிழமை) முதல் முடங்கியுள்ளன. மாதத்தொடக்கத்தில் இரண்டு நாள்களாக ஆன்லைன் சேவை முடக்கப்பட்டுள்ளதால், சம்பளம் பட்டுவாடா செய்வது, வங்கிக்கணக்கிலுள்ள சம்பளத்தை எடுப்பது என எதையும் செய்ய முடியாமல் ஹெச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நேற்றைய தினம் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதுமே, "விரைவில் சரிசெய்துவிடுவோம்" என்றும், "அதுவரை சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளும்படியும்" ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சார்பில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது நாளாக இன்றும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாததால், மீண்டும் வங்கி சார்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

அடேயேப்பா... ஏழே மாதங்களில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி!

``அந்த ட்வீட்டில், தொழில்நுட்பக்கோளாறைச் சரிசெய்ய, எதிர்பார்த்ததைவிடக் கூடுதல் நேரமெடுக்குமென்று தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள், கோளாறைச் சரிசெய்யும்பணியில் ஓய்வின்றி தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகவும், பலரின் வங்கிக்கணக்குகள் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும், சிலருக்கு மட்டும் இன்னமும் சரிசெய்யப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் சரிசெய்யப்படும்வரை சிரமத்துக்கு வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இரண்டு நாள் முடக்கத்தால் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. ``இரண்டு நாள்களாகச் செயல்படாததால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை எப்படிச் சரிசெய்வீர்கள்? வங்கியின் ஆன்லைன் சேவை இரண்டு நாள்களாக முடக்கப்பட்டிருப்பது அபாயகரமான விஷயம். சரியான தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்கவில்லையா?" என்றெல்லாம் நிறைய கேள்விகளோடு தங்களது ஆதங்கத்தையும் அதிருப்தியையும் ட்விட்டரில் தெரிவித்துவருகிறார்கள். ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ஆன்லைன் சேவை முடக்கத்தில் வெளிநபர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, ஹேக்கர்களின் தாக்குதலா என்பது குறித்து ஆன்லைன் சேவை மீட்கப்பட்டபின்தான் தெரியவரும்!