சுற்றுலாத் துறைக்கு அடுத்தபடியாக, கொரோனா நோய்த் தொற்று பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டது ஆட்டோமொபைல் துறை.
உற்பத்தி நிறுத்தம், விற்பனையில் மந்தம், வேலையிழப்பு என இந்தத் துறையில் ஏகப்பட்ட பிரச்னை. இச்சூழ்நிலையை உள்ளூர் நிறுவனங்கள் ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ள, மிகப்பெரிய அயல்நாட்டு நிறுவனங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், சில தினங்களுக்கு முன்புதான், இந்தியச் சந்தையிலிருந்து விற்பனை மற்றும் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தது.
2017-ல் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவை விட்டு வெளியேறியது போல, ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் வெளியேறுகிறது. இது இந்தியாவுக்கு சற்று பின்னடைவை கொடுக்கும் விஷயமாகக் கருதப்பட்டாலும், இது இந்திய நிறுவனங்களுக்கு நன்மை அளிக்கலாம் என்றே சொல்லப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமீண்டும் பேச்சுவார்த்தை!
இந்நிலையில், ஹார்லி டேவிட்சன், இந்திய நிறுவனங்களுள் ஒன்றான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்துக்காக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹார்லி டேவிட்சன் பைக்கினை, இந்தியாவில் ஹீரோ மோட்டோ கார்ப் இறக்குமதி செய்து விற்பனை செய்யும். இதற்காகவே இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பலவீனமான விற்பனையும் அதிக இறக்குமதி வரியும்!
தனது `Rewire' என்ற திட்டத்தின் மூலம், குறைந்த வருவாய் தரும் நாடுகளிலிருந்து விலகிக்கொள்ள ஏற்கெனவே ஹார்லி டேவிட்சன் முடிவெடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த நிறுவனத்தின் பைக்குக்கான இறக்குமதி வரியும் மிக அதிகம். சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசாங்கம் இதற்கான இறக்குமதி வரியை 200% வரைகூட உயர்த்தியது.
இதைக் குறைப்பதற்காகத்தான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய அரசுடன் மல்லுக்கட்டினார். ஆனால், மத்திய அரசு வரி விதிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இந்தியாவில் இருந்து ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியேறத் திட்டமிட்டுள்ளது.
நஷ்டத்தைத் தவிர்க்க இந்தியாவை விட்டு வெளியேற நினைத்தாலும், இந்த ஆண்டில் மட்டும் 75 மில்லியன் டாலரை ஹார்லி நிறுவனம் தன் மறுசீரமைப்பதற்கு செலவிட வேண்டியிருக்கும் என்றும் சொல்லப்பட்டுவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விற்பனை விரிவாக்கம்!
இந்திய சந்தையிலிருந்து வெளியேறினாலும், தொடர்ந்து டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கான சர்வீஸ் வழங்கப்படும் என முன்பு அந்நிறுவனம் உறுதியளித்திருந்தது. இந்த நிலையில், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், அதோடு சேர்த்து அனைத்து சேவைகளையும் இந்தியாவில் கொடுக்க முடியும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நினைக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப், 2019-20-ம் நிதியாண்டில் 6.4 மில்லியன் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே காலத்தில் ஹார்லி டேவிட்சன் 4,500 மோட்டார் பைக்குகளை மட்டுமே உற்பத்தி செய்தது. இதில் 2,500 பைக்குகளை மட்டுமே அதனால் விற்க முடிந்தது. விற்காத வாகனங்களுக்கும் ஹார்லி டேவிட்சன் பெரிய அளவில் விலைக்குறைப்பு செய்து விற்க முயன்றது. அதாவது, தன் இரண்டு மாடல்களுக்கு ரூ.65,000 முதல் ரூ.77,000 வரை கழிவுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அப்படியும் அந்த நிறுவனத்தால் பெரும்பாலான பைக்குகளை விற்க முடியவில்லை. இந்த நிலையில், ஹீரோ மோட்டோ கார்ப்புடன் ஒப்பந்தம் செய்தால், ஹீரோ நிறுவனம் தனது விற்பனையை இன்னும் விரிவாக்கம் செய்யும் என ஹார்லி டேவிட்சன் நினைக்கிறது. இந்த ஒப்பந்தம் உறுதியானால், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் புதிய வர்த்தகக் கட்டமைப்பை உருவாக்கும்!