Published:Updated:

சிகரெட், மதுபானங்களின் விலையை ஏற்றுவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையாது! ஏன்?

சிகரெட், மதுபானம்
சிகரெட், மதுபானம்

மதுபானம், சிகரெட் மற்றும் அனைத்துப் புகையிலைப் பழக்கங்களுக்கும் அடிமையானவர்கள், தங்களது வருமானம், உடல் நலம் மற்றும் தங்களை நம்பியிருப்போரின் எதிர்காலத்துக்கு ஏற்படும் இழப்பை உணர்ந்து திருந்தினால்தான் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு பட்ஜெட் போடும்போது ஒவ்வொரு பொருளுக்கும் வரியை உயர்த்துவதற்கு ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தே செயல்படும். ஆனால் சிகரெட், மதுபானங்கள் மீதான வரியை மட்டும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றும். இதில் மிகப்பெரிய உளவியல் இருக்கிறது. சமூகத்தின் பார்வையில், மது குடிப்பதும் சிகரெட் புகைப்பதும் மிகவும் மோசமான பழக்கங்கள். ஆனால், இவற்றைப் பயன்படுத்துவோர் குறித்த புள்ளிவிவரங்களோ நேர்மாறாக உள்ளன.

சிகரெட்
சிகரெட்
vikatan

கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 40% வரை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவருகிறது. இந்திய ஆண்களைப்பொறுத்தவரை, சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ஒருவர், 6 லிட்டர் மதுபானத்தை அருந்துகிறார். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மதுபானத்தின்மீதான ஆர்வம் இந்தியாவில் வெகுவேகமாக அதிகரித்துவருகிறது. இது வருந்தத்தக்க உண்மையாகும்.

மது அருந்துவோரின் மொத்த எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப், கோவா, சத்தீஸ்கர் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மது அருந்துவோரின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மது அருந்துவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, மதுபானக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது, கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனால் பெரிதும் பலனளிப்பதாக இல்லை.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
vikatan

மது, சிகரெட் பழக்கங்களை அதிக வரிவிதிப்பின் மூலமாகக் கட்டுப்படுத்த முடியுமா என்று பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனிடம் கேட்டபோது, "பொருள்களின் பயன்பாட்டைப்பொறுத்து, நெகிழ்ச்சித்தன்மையுள்ள பொருள்கள், நெகிழ்ச்சித்தன்மையில்லாத பொருள்கள் என்று இரண்டாகப் பிரிப்பார்கள். சிகரெட்டும் மதுபானமும் நெகிழ்ச்சித்தன்மையில்லாத பொருள்களைச்சேரும். இவற்றுக்கு எவ்வளவு விலையேற்றினாலும் விற்பனையில் மாற்றம் வராது. இது அரசாங்கத்துக்கே தெரியும் என்பதால் விலையை விருப்பம்போல் ஏற்றுவார்கள். இவற்றுக்கு `Sin Goods' என்று பெயர் உண்டு. எனவே, இவற்றுக்கு அதிக வரி விதிப்பதன்மூலம் விற்பனையைக் குறைக்க முயற்சி செய்வதாகக் காட்டுவார்கள். ஆனால், இதன்மூலம் வருமானம் அதிகரிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிகரெட்டுக்கு மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரத்தை அரசாங்கம் செய்கிறது. இதனால் புற்றுநோய் வரும் என்றெல்லாம் விளம்பரப்படுத்துகிறது. ஆனால், சிகரெட்டைப் புகைப்பவர்கள் புகைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், புதிதாகப் பழகுவோர் எண்ணிக்கை கொஞ்சம் குறைவதாகக் கூறுகிறார்கள். அமெரிக்காவில் சிறுவர்கள் சிகரெட் புகைப்பதைப் பார்க்க முடியாது. குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் புகைப்பழக்கம் இருக்கும். ஐரோப்பாவில் பலரும் சிகரெட் புகைப்பார்கள். ஆனால், தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுவருகிறது. அதனால் புகைப்பழக்கம் குறைந்துவருகிறது. அதுபோன்ற விழிப்புணர்வு நமக்கும் வர வேண்டும்" என்றார்.

மது, சிகரெட் இரண்டுமே சமூகத்தின் பார்வையில் கேடான பழக்கமாக இருப்பதால் இவற்றுக்கு வரி அதிகரித்தால் அதுகுறித்து மக்களின் பொதுப்புத்தி கேள்வி எழுப்புவதில்லை.
சிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்?!  #SmartInvestorIn100Days நாள் - 23

நடப்பு 2020-21 பட்ஜெட்டில் சிகரெட் மீதான வரி, அதன் நீளத்தைப்பொறுத்து 212% முதல் 388% வரை உள்ளது. இதனால் இவற்றின் விலை 6% முதல் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல நிதித்தேவையைப் பொறுத்து, மதுபானங்களின் விலையைத் தமிழக அரசு அவ்வப்போது உயர்த்திவருகிறது. இத்தனைக்குப் பிறகும் மதுப்பழக்கம், சிகரெட் பழக்கம் இரண்டுமே குறைவதாக இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2018-19 நிதியாண்டில், மதுபானங்கள் மீதான வரி மூலம் சுமார் 31,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வரியை அதிகப்படியாக உயர்த்துவதன்மூலம் மது, சிகரெட் பொருள்களின் விலையை உயர்த்துவது குறித்து மக்கள் மத்தியில் எவ்வித விவாதமும் எழுவதில்லை என்பதும் அரசாங்கத்துக்கு சாதகமாக உள்ளது.

"மது, சிகரெட் இரண்டுமே சமூகத்தின் பார்வையில் கேடான பழக்கமாக இருப்பதால் இவற்றுக்கு வரி அதிகரித்தால் அதுகுறித்து மக்களின் பொதுப்புத்தி கேள்வி எழுப்புவதில்லை. கடந்த `20 ஆண்டுகளில் சிகரெட் மீதான வரி கொஞ்சம்கொஞ்சமாக 1,600% வரை உயர்ந்திருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல, வரிகளை உயர்த்துவதன்மூலம் அரசுக்கு வரிவருமானம் அதிகரிக்கும், விலை உயர்வு காரணமாக புகைப்பவர்களும் குறைவார்கள் என்று அரசு நம்புகிறது. ஆனால் புகைப்பவர்கள் எண்ணிக்கை பெரும்பாலும் குறைவதில்லை" என்கிறார் சமூக ஆர்வலர் ஷாஜஹான். இவர், புகைப்பழக்கத்தைக் கைவிடும் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக 'அவசியம் தானா ஆறாம் விரல்?' என்ற நூலை எழுதியிருக்கிறார்.

சமூக ஆர்வலர் ஷாஜஹான்
சமூக ஆர்வலர் ஷாஜஹான்

சிகரெட்டுகள் மீதான வரி குறித்து இவர் மேலும் கூறுகையில், "சிகரெட்டின் நீளத்தைப்பொறுத்து அதன் மீதான வரி ஆறு அடுக்குகளில் உள்ளது. ஃபில்டர் உள்ளதா, இல்லாததா, சிகரெட்டின் நீளம் எத்தனை மிமீ போன்ற காரணிகளைப் பொறுத்து வரி இருக்கும். பட்ஜெட்டில் வரி உயரும்போது, சிகரெட் நிறுவனங்கள், மேற்கண்ட ஆறு அடுக்குகளின் அடிப்படையில் சிகரெட்டில் சில மாற்றங்களைச் செய்து விற்பனை குறையாமல் பார்த்துக்கொள்கின்றன.

கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் பீடி. சிகரெட்டைவிட பல மடங்கு தீங்கு தருவது பீடிதான். பீடியில் பயன்படுவது பதப்படுத்தாத புகையிலை. சிகரெட்டில் செய்வதுபோல பீடியில் அடர்த்தியாக நிரப்பப்படுவதில்லை, ஃபில்டர் இல்லை. எனவே, பீடியை வலுவாக இழுக்க வேண்டியிருக்கிறது. அதனால், நுரையீரல் நோய்கள் உள்பட பலவிதமான நோய்கள் தாக்கும் ஆபத்து சிகரெட் பிடிப்பவர்களைவிட பீடி புகைப்போருக்கு அதிகம். ஆனால், பீடிக்கு வரி மிக மிகக் குறைவு.

பீடி சுருட்டும் தொழிலாளிகள்
பீடி சுருட்டும் தொழிலாளிகள்
vikatan

ஒருபக்கம் அரசு தன் வருவாய்க்காக சிகரெட் மீது வரிமேல் வரி விதித்து, விலை உயர்த்தி, எட்டாப் பண்டமாக ஆக்குவதன் மூலம் சிகரெட் புகைப்பதைக் குறைக்க நினைக்கிறது. மற்றொரு பக்கம் ஏழைத் தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தைக் காட்டி, பீடியின்மீது மிகக் குறைந்த வரி விதித்து, புகைப்பவர்களை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. புகைப்பவர்களின் ஆரோக்கியத்துக்குப் பெரும் தீங்கு விளைவது ஒருபக்கம் இருக்க, எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத பீடி சுருட்டும் தொழிலாளிகளின் ஆரோக்கியமும் பெருமளவு பாதிக்கிறது. குறிப்பாக, இந்தத் துறையில் ஈடுபடுவோர் பெண்களும் சிறுவர்களும்தான்.

புகையிலையால் வரும் நோய்களுக்கு மட்டும், மக்கள் செலவு செய்யும் தொகை ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி! புகைப்பதை நிறுத்துவது அரசின் சட்டங்களால் சாத்தியம் இல்லை. புகைப்பழக்கத்துக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அதிகபட்சமாக, நீங்கள் புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாமே தவிர, முற்றிலுமாக விட்டொழிக்கச் செய்யாது. புகைப்பது எப்படி உங்கள் விருப்பமோ அதேபோல இதை விட்டொழிக்கும் உறுதியும் உங்களிடமிருந்தே பிறக்க வேண்டும்" என்றார்.

சிகரெட்டை விட்டொழித்தல்
சிகரெட்டை விட்டொழித்தல்
Vikatan

சமூகத்தின் பார்வையில் கேடான பொருள்களாகக் கருதப்படும் மது, சிகரெட் இரண்டின் விலையையும் உயர்த்துவதன் பின்னால் இருக்கும் வருமான அரசியல் மக்களுக்குப் புரிந்தாலும், ஒருவித குற்ற உணர்வால் கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. சிகரெட் மற்றும் மதுப்பழக்கத்தால் இளம் வயதிலேயே உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவர்களின் குடும்பமே திடீரென சுழலில் சிக்கிய நிலையில் தள்ளாடுகிறது. எனவே, அரசாங்கங்கள் இந்தப் பொருள்களின்மீதான விலையை அதிகரிக்கும்போது மெளனப்புரட்சி போல ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, மதுபானம், சிகரெட் மற்றும் அனைத்துப் புகையிலைப் பழக்கங்களுக்கும் அடிமையானவர்கள், தங்களது வருமானம், உடல் நலம் மற்றும் தங்களை நம்பியிருப்போரின் எதிர்காலத்துக்கு ஏற்படும் இழப்பை உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளுமா சமூகம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு