Published:Updated:

10 ஆண்டுகளாக `வெற்றிநடைபோடாத தமிழகம்' - வெள்ளை அறிக்கை சொல்லும் பகீர் உண்மைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்

2006-11 கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் வருமானம் உபரியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அதி.மு.க ஆட்சிக் காலத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், மக்கள் மற்றும் தொழில்துறையினரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட `வெள்ளை அறிக்கை' இன்று வெளியிடப்பட்டது.

காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களிடம் அதுகுறித்து விளக்கினார்.

மொத்தம், 120 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன, கடன் விவரங்கள், சென்னை மெட்ரோ வாட்டர், மின்சார வாரியம், போக்குவரத்து, உள்ளாட்சி ஆகியவற்றில் வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்

20 ஆண்டுகளுக்கு முன்பு 2001-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய நிதி அமைச்சர் பொன்னையன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அந்த வெள்ளை அறிக்கையானது, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெளியிடப்பட்டது. ஆனால், இந்த முறை பொது வெளியில், மக்களுக்கு நேரடியாக சென்று சேரவேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதிகரித்த கடன் சுமை!

2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி முடிவடையும்போது, கடன் அளவு ரூ.63,848 கோடியாக இருந்தது. 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு ரூ.1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடன் அளவு 10 ஆண்டுகளில் கடன் அளவு 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்று கடந்த தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையேதான் இந்த வெள்ளை அறிக்கையும் சொல்கிறது.

கடன்
கடன்

இந்த வெள்ளை அறிக்கை குறித்து பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர், ``இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. வெளிப்படைத் தன்மைக்காக, கடந்த கால அரசின் செயல்பாடுகளைத் தெரிவிப்பதற்காக, எங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அல்லது எதிர்கால நலத்திட்டங்களை நிறைவேற்ற கையிருப்பில் இருக்கும் நிதி விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, மற்றும் தமிழகத்தின் துறை சார்ந்த நிலவரங்கள் எப்படி இருக்கிறது என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. மேலும், தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை, தமிழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதையும் இந்த வெள்ளை அறிக்கை சொல்லும்.

கஜானா காலி! - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை

இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு பலரும் உதவி செய்தனர். அறிக்கை தயார் செய்வதற்குமுன் ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும், 2001-ல் அ.தி.மு.க வெளியிட்ட அறிக்கையையும் ஆய்வு செய்தோம். இந்த வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு" என்றார். இனி அவர் வெளியிட்ட சில முக்கிய தரவுகள்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கிய சிறப்பம்சங்கள்!

* 2006-11 கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் வருமானம் உபரியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அதி.மு.க ஆட்சிக் காலத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

*2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது

* இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலமும் இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. மேலும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசின் வருவாய் 4-ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது. தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை காரணமாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,63,976 ரூபாய் கடன் உள்ளது.

அன்றாட செலவுகளுக்கே கடன்!

* ஏற்கெனவே தமிழகம் பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதிநிலை மோசமானது. இதனால் அன்றாட செலவுகளுக்கே தமிழகம் கடன் வாங்கிதான் சமாளித்து வந்திருக்கிறது. 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

* அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை குறித்த கணக்கு சரியாக பராமரிக்கப்படவில்லை. அ.தி.மு.க அரசின் இடைக்கால பட்ஜெட்டின்போது நிதிப் பற்றாக்குறை ரூ.4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது. ஆனால், உண்மையில் தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடி.

* அ.தி.மு.க அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90% மின்வாரியத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது. மின் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் எச்சரிக்கை நிலையை காட்டுகின்றன.

வரி சரியாக வசூலிக்கப்படவில்லை!

* மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து வரியை வசூலிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். பூஜ்ய வரி என்பது ஏமாற்று வேலை. அதனால் பயனடைவது பணக்காரர்கள் மட்டுமே, ஏழைகள் அல்ல. பெரு நிறுவனங்களுக்கான வரி, வருமானவரியை குறைத்து ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு அதிகரித்திருப்பது பாதகமான செயல். தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி.

Tax
Tax

* மத்திய அரசு செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரிப் பங்கீட்டை வெகுவாக குறைத்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய வரிப்பங்கு 33% குறைந்துவிட்டது. பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32-ல் வெறும் 50 பைசாவை மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிரித்து கொடுக்கிறது. மீதமுள்ள ரூ.31.50 மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது.

* அ.தி.மு.க ஆட்சியில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படவும் இல்லை, உயர்த்தப்படவும் இல்லை. இதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியம், குடிநீர் வாரியத்துக்கு ரூ.1,743 கோடி பாக்கி வைத்துள்ளன.

நஷ்டத்தில் மின் மற்றும் போக்குவரத்துத் துறை!

போக்குவரத்து
போக்குவரத்து

* ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதில் மின் வாரியத்துக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதேபோல், போக்குவரத்துத் துறை நிர்வாகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கி.மீ.,க்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது. மின்சார வாரியம், போக்குவரத்து துறையின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி செலுத்தி வருகிறது.

இந்த வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் சொல்லி இருக்கும் தகவல்களைப் படிக்கும் மக்களுக்கு பகீர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த அளவுக்குத் தெளிவான அறிக்கையை இந்தியாவின் வேறு எந்த மாநில நிதி அமைச்சராவது தாக்கல் செய்திருப்பாரா என்பது சந்தேகமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு