Published:Updated:

கோவைக்கு மெட்ரோ, மக்களுக்கு புதிய காப்பீடு திட்டங்கள்... தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள் #TNBudget2021

இடைக்கால பட்ஜெட் 2021
இடைக்கால பட்ஜெட் 2021

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் 2,000 மின்சாரப் பேருந்துகள் உட்பட 12,000 பேருந்துகள் புதிதாகக் கொள்முதல் செய்யப் போவதாகத் தமிழக அரசாங்கம் அறிவித்திருக்கிறது!

அ.தி.மு.க அரசின் பதவிக்காலம், வருகிற மே 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், எதிர்வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக அமைந்துவிட்டது. இதன்படி, தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (23.02.2021) காலை 11 மணிக்கு துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இவர் இதுவரை தாக்கல் செய்த மொத்த பட்ஜெட்களின் எண்ணிக்கை 10. இது இவரின் 11-வது பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்
பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்

1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை சட்டப்பேரவையாகத் திகழ்ந்த கலைவாணர் அரங்கத்தில், 65 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக, தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் நடக்கும். ஆனால், இந்தமுறை கொரோனா அச்சம் காரணமாக, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டின் முக்கியமான சிறப்பம்சங்கள் இனி...

1. வேளாண்மைத் துறைக்கு 11,982 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக 1,738.31 கோடி ரூபாயும், பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்துக்கு 5,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய், பழங்குடியினர் நலனுக்காக 1,276 கோடி ரூபாய், ஆதி திராவிடர்களின் நலனுக்காக 13,967 கோடி ரூபாய், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 229.33 கோடி ரூபாய், படிப்படியாக அமையவுள்ள 'அம்மா மினி கிளினிக்' திட்டத்துக்காக 144 கோடி ரூபாய் , சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு 3,140 கோடி ரூபாய், அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்காக 1,953 கோடி ரூபாய், 2020-21-ம் ஆண்டுகளில் புதிய நீதிமன்றக் கட்டடங்களைக் கட்டுவதற்காக 289.78 கோடி ரூபாய், நீதித் துறைக்காக 1,437.82 கோடி ரூபாய், சுகாதாரத் துறைக்கு 19,420 கோடி ரூபாய், மின்சாரத் துறைக்கு 7,217 கோடி ரூபாய் மற்றும் காவல் துறைக்கு 9,657 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயம்
விவசாயம்

2. மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் 2,000 மின்சாரப் பேருந்துகள் உட்பட 12,000 பேருந்துகள் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும். இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 1,580 கோடி ரூபாய்.

3. கோவை மாவட்டத்தில் 44 கி.மீ மெட்ரோ திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்தத் திட்டத்துக்காக 6,683 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. தமிழ்நாட்டில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் 62 நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் எனவும், இதனால் 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேம்பாட்டுக்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. பள்ளிக்கல்வித் துறைக்கு சுமார் 34,181 கோடி ரூபாயும், உயர் கல்வித்துறைக்கு 5,478 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்காக 2,470.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 1,650 மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கும்.

 ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
#LiveUpdates: பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் ஓ.பன்னீர் செல்வம்! #TNBudget2021

6. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் (Computer science) பாடம் அறிமுகப்படுத்தப்படும்.

7. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொகை 4 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

8. எல்.ஐ.சி மற்றும் யுனைடட் இந்தியா ஆகிய இரு காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, அரசு சார்பில் மக்களுக்குக்காக புதிய காப்பீடு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

9 . மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக 688 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் நலனுக்கா 'RIGHTS' என்கிற புதிய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

10. ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைப் போல, கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கைக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல் விலை உயர்வு

தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் இதுபோன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இருந்தாலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிக் குறைப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், தமிழக அரசு மத்திய அரசை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைக்கவும், புதிதாக அறிவிக்கப்பட்ட கூடுதல் வரியையும் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு