பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

தடைகளைத் தாண்டி மீண்டுவரும் சுற்றுலாத் துறை..!

சுற்றுலாத் துறை
பிரீமியம் ஸ்டோரி
News
சுற்றுலாத் துறை

சுற்றுலாத் துறை

கோவிட் காரணமாகப் பெரிதும் பாதிப்பை சந்தித்த துறைகளில் ஒன்று, சுற்றுலா. கடந்த இரு ஆண்டு களில் பெரும் இழப்பைச் சந்தித்த இந்தத் துறை, தற்போது மெதுவாக மீண்டுவருகிறது. நம் நாட்டில் மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமானங்களுக்கு இருந்த தடை விலகியிருக்கிறது. சுற்றுலா செல்வதற்கு இருந்த மனத்தடை மக்களுக்கு விலகிவருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப் பிரிவில் செயல்பட்டு வந்த `பிக் யுவர் டிரெயில்’ (Pickyourtrail) ஸ்டார்ட்அப் நிறுவனம் அடுத்தகட்ட நிதியைத் திரட்டி யுள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் ஶ்ரீநாத் சங்கர் மற்றும் ஹரி கணபதி.

நிறுவனம் செயல்படும் வேகத்தை சிறிது காலத்துக்குக் குறைத்துவிட்டு, தற்போது மீண்டும் வேகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது ‘பிக் யுவர் டிரெயில்’ நிறுவனம். கோவிட் சூழலைச் சமாளித்து வந்தது, இனி சுற்றுலாத் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்கிற கேள்விகளுடன் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஹரி கணபதியை சந்தித்துப் பேசினோம்.

தடைகளைத் தாண்டி மீண்டுவரும் சுற்றுலாத் துறை..!

எப்படி சமாளித்தோம்?

‘‘கோவிட் வந்தபோது நிச்சயமற்ற சூழலில் இருந்தோம். அடுத்த எட்டு மாதங்களுக்கு வருமானம் இருக்காது என்பது 2020-ம் ஆண்டு மார்ச்லேயே எங்களுக்குத் தெரிந்துவிட்டது. யாரையும் வேலையை விட்டு நீக்க வேண்டாம் என நாங்கள் முடிவெடுத்தோம். நிறுவனத்தில் முதலில் சேர்ந்தவர், பின்னால் சேர்ந்தவர் என எந்தப் பாகுபாட்டையும் நாங்கள் காட்டவில்லை. அதனால் எல்லோரிடமும் ஒரு வேண்டு கோளை முன்வைத்தோம். ‘இந்தச் சூழல் அடுத்த சில மாதங் களுக்கு இருக்கும். எனவே, அனைவரும் வேலையில் இருக்க வேண்டுமெனில், 62% சம்பளம் குறைப்பு இருக்கும்’ என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தோம்.

இதைச் சிலர் ஏற்றுக்கொண்டார்கள்; சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு மற்ற சாஸ் (SaaS) நிறுவனங்களில் வேலை வாங்கித் தந்தோம். இப்படி 100 நபர்கள் வெளியேற, மீதமிருந்தவர்கள் எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொண்டு செய்தோம்.

தவிர, இன்னொரு முக்கியமான பிரச்னையையும் சமாளிக்க வேண்டியிருந்து. அதாவது, வாடிக்கையாளர்கள் சுற்றுலா செல்ல ஏற்கெனவே பணம் செலுத்தியிருந்தார்கள். அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். சர்வதேச அளவில் விமான நிறுவனங்கள் மூடப்பட்டன. விமான நிறுவனங்களுக்குக் கட்டிய பணத்தைத் திரும்ப பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. தவிர, டாலர் மதிப்பு ஏற்ற இறக்கத்தால் ஃபாரெக்ஸ் நஷ்டமும் எங்களுக்கு ஏற்பட்டது.

ஆனால், கோவிட் பிரச்னை யில் இருந்து நாங்கள் வெளியே வர ஆரம்பித்தோம். எங்கள் வருமானம் தொடர்ந்து அதிக ரிக்க ஆரம்பித்தது. இதனால், பணியாளர்களுக்குக் குறைக்கப் பட்ட சம்பளத்தைவிட கூடுதல் தொகைக்கு எங்கள் நிறுவனப் பங்குகளை நாங்கள் வாங்கினோம்.

உதாரணமாக, ஒரு பணியாளர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குகிறார். அவருக்கு 50% இழப்பு எனில், ரூ.5 லட்சம் குறைவாகக் கிடைத்திருக்கும். ஆனால், நாங்கள் 7.50 லட்சம் ரூபாய்க்கு பங்குகளை ஒதுக்கீடு செய்தோம். அதுவும் இரண்டு ஆண்டுகளில் இந்தப் பங்குகள் அவர்கள் வசம் சென்றுவிடும். ஒருவேளை, அவர்கள் பணி யிலிருந்து விலகினாலும்கூட அந்தப் பங்குகள் அவர் வசமே இருக்கும் வகையில் ஒதுக்கீடு செய்தோம். இது பணியாளர் களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது.

உள்நாட்டுச் சுற்றுலா

2020 மார்ச் முதல் ஜூன் வரை எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை. எங்களு டைய இலக்கே சர்வதேச சுற்றுலாதான். சர்வதேச சுற்றுலா மீண்டுவரும் வரைக்கும் நாங்கள் காத்திருக்க முடியாது என்பதால், உள்நாட்டுச் சுற்றுலாவில் தடம் பதித்தோம். எங்களுக்குத் தெரியாத பிரிவாக இது இருந் தாலும், அதைக் கற்றுக்கொண்டு அதில் கவனம் செலுத்தினோம். நான் எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்று சொல்வது தலைமைக்கு அழகல்ல. அந்தந்த சூழலுக்கு ஏற்ற முடிவை எடுத்தால் பிசினஸில் தொடர்ந்து இருக்க முடியும்.

2020-ம் ஆண்டு ஜூலை மாதம் உள்நாட்டுச் சுற்றுலா மீண்டுவந்தது. மெள்ள மெள்ள எங்கள் வருமானம் உயர்ந்தது. 2020-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி வெளிநாட்டில் நடந்தது. அதற்கு ஒரு ஐ.பி.எல் குழுவுக்குத் தேவை யான பணியை நாங்கள் செய்தோம். ஜூலை முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை ஓரளவுக்கு வருமானம் இருந்தது.

அந்த சமயத்தில், டெல்டா அலை வீசியது. அப்போதுதான் பெரிய அளவுக்கு பதற்றம் ஏற்பட்டது. 2021 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீண்டும் வருமானம் இல்லை. அதன்பிறகு ஓரளவுக்கு சுற்றுலா வேகம் எடுத்தது. மீண்டும் ஜனவரியில் ஒரு தேக்கநிலை. தற்போது சர்வதேச அளவில் மீண்டும் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

 ஹரி கணபதி, ஶ்ரீநாத் சங்கர்
ஹரி கணபதி, ஶ்ரீநாத் சங்கர்

ஏன் நிதி?

கோவிட் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டோம். ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டோம். தற்போது நிறுவனத்தின் பிசினஸ் நன்கு மேம்பட்டிருக்கிறது. கோவிட் தந்த அனுபவத்தால், இனி எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க முடியும் என நாங்கள் நினைக்கிறோம்.

இந்தச் சமயத்தில், சர்வதேச நிறுவனம் ஒன்று எங்கள் நிறுவனத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதை எங்களுடைய முதலீட் டாளர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் கேட்ட கேள்வி இதுதான். ‘உங்களுக்கு நிறுவனத்தை நடத்த `போர்’ அடிக்கிறதா’ என்று கேட்டனர். முதலீட்டாளர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை புரிந்தது. அந்தப் பேச்சுவார்த்தை அப்படியே முதலீடு வரைக்கும் சென்றது. தவிர, கூடுதலாகப் புதிய முதலீட்டாளர்களையும் இணைத்துக்கொண்டோம். கடந்த முறை உள்ள சந்தை மதிப்பைவிட கூடுதல் சந்தை மதிப்பில் முதலீட்டாளர்கள் முடிவு செய்தனர். க்ரெட் நிறுவனர் குனால் ஷா அடுத்த சில 15 நிமிடத்தில் முதலீடு செய்கிறேன் என்னும் ஒப்புதலை வழங்கினார்.

தற்போது மதுரையில் அலுவலகம் இருக்கிறது. சமீபத்தில் துபையில் புதிய அலுவலகம் திறந்திருக்கிறோம். தற்போதைய சூழலில், அடுத்த இரு ஆண்டுகளுக்கு சுற்றுலாத் துறை பெரிய வளர்ச்சியை அடையப்போகிறது. உதாரணமாக, ஏப்ரலில் காஷ்மீருக்கான விற்பனையை முடித்துவிட்டோம். தற்போது உள்நாட்டில் நாங்கள் கவனம் செலுத்தினாலும் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு சுற்றுலாவையே விரும்புகின்றனர். இந்தியாவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதைவிட வெளிநாடு களுக்கு சுற்றுலாச் செல்வது இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கின்றனர் வாடிக்கையாளர்கள். மனிதனுக்கு அடுத்து என்ன என்னும் தேடல் இருக்கும் வரை சுற்றுலாவுக்கு பாதிப்பு இருக்காது’’ என ஹரி விடை கொடுத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முடங்கிக் கிடந்த மக்கள் மீண்டும் ஆசை ஆசையாக சுற்றுலா செல்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.