பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஹிந்துஜா குடும்பச் சண்டை கற்றுத்தரும் பிசினஸ் பாடம்!

ஶ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்

பிசினஸ்

ஹிந்துஜா குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள் இடையிலான மோதல் மீண்டும் மீடியாக்களில் பேசுபொருளாக மாறியிருக் கிறது. ஹிந்துஜா குழும குடும்ப உறுப்பினர்கள் இடையே அப்படி என்ன பிரச்னை என்பதைப் பார்க் கும்முன், இந்தக் குழுமத்தின் வரலாறையும் பிசினஸையும் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

வாகன உற்பத்தி, பிரத்யேக மான ரசாயனப் பொருள் கள், எரிபொருள், நிதி, தொழில்நுட்பம், உடல்நலம், வர்த்தகம், உள்கட்டமைப்பு என 11 துறைகளில் உல கெங்கும் தனது தொழிலைச் செய்து வருகிறது.

இந்தக் குழுமம் 1914-ம் ஆண்டு பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜா என்கிற சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவரால் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு இக்குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர். அமெரிக் காவில் மட்டும் இந்தக் குழுமத்துக்கு 50 பில்லியன் டாலருக்கான சொத்துகள் இருப்பதுடன், ஹிந்துஜா சகோதரர்களின் (ஶ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்) நிகர சொத்து மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர் ஆகும்.

இந்தக் குழுமத்தில் உலகெங்கும் சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார் கள். 2022-ம் ஆண்டு இந்தக் குழுமத்தின் ஆண்டு வருமானம் சுமார் 70 பில்லி யன் டாலர்.

நூறு ஆண்டுகளைத் தாண்டி செயல்பட்டுவரும் இந்தக் குழுமத்தை இப்போது நடத்தி வரும் நான்கு சகோதரர் களுக்கிடையே தனிப்பட்ட முறையில் பிரச்னைகள் இருந்தாலும், அதை வெளி உலகத்துக்குக் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் தங்களது ஒருமித்தக் குரலையே வெளிப்படுத்தி வந்தனர்.

ஶ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்
ஶ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக்

ஹிந்துஜா குழுமத்தின் சேர்மன் ஶ்ரீசந்த் ஹிந்துஜாவும், துணை சேர்மன் கோபிசந்த் ஹிந்துஜாவும் ஏற்றுமதித் தொழிலை நிர்வகிப்பதற்காக 1979-ம் ஆண்டு லண்டனுக்குப் புலம்பெயர்ந்தார்கள். இந்தக் குழுமத்தின் இயக்கத்தை ஜெனிவாவிலிருந்து பிரகா ஷும், இந்தியாவின் செயல் பாடுகளை அசோக்கும் கவனித்து வருகின்றனர்.

குழுமத்தின் பிதாமகராக இருந்து வருகிற எஸ்.பி என அனைவராலும் அறியப்படும் 86 வயதான ஶ்ரீசந்த் பர்மானந்த் ஹிந்துஜா டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வேளையில் `குடும்பத்துக்குள் கலாட்டா’ ஏற்பட்டது.

ஶ்ரீசந்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் குழும நிதிக்குப் பதிலாக, அவரின் சொந்த நிதியிலிருந்து செலவு செய்து வருவதாகவும், அவருடைய சகோதரர்கள் அவருக்குக் கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தி விட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றுவரும் சந்த்தை அரசு நிதியில் செயல்பட்டுவரும் மருத்துவமனைக்கு மாற்றுமாறு கோபிசந்த் கேட்டுக் கொண்டதாக ஶ்ரீசந்தின் மகள் வினு குற்றம் சாட்ட, அதை கோபிசந்தின் வழக்கறிஞர் மறுத்திருப்பதுடன், அவருக்கென்று 5.9 மில்லியன் டாலர் ஒதுக்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தவிர, இந்தக் குழும குடும்ப உறுப்பினர்களிடையே சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாட்டின் மையப்புள்ளி சகோதரர்களிடையே எட்டு வருடங் களுக்குமுன் ஏற்பட்ட உடன்படிக்கையாகும். அதாவது, `எல்லாமும் எல்லோருக்கும் சொந்தமானது; எதுவும் எந்தவொருவருக்கும் சொந்தமானதில்லை’ (everything belongs to everyone and nothing belongs to anyone) என்பதாகும். இப்படி ஒரு முடிவு அப்போது ஏன் எடுக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில், ஶ்ரீசந்தின் மகளான வினு தனக்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டிவருகிறார். ‘‘என் தந்தையார் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டிய நிதி ஆதரவையும், முடிவெடுக்கும் செயல்பாட்டில் நாங்கள் ஈடுபடுவதையும் என் சித்தப்பாக்கள் தடுக்க முயல்கிறார்கள்’’ என அவர் கூறியிருக்கிறார். இது ஶ்ரீசந்தின் நீண்டநாள் ஆசைக்கு எதிரானதாகும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் கோபிசந்த், ஶ்ரீசந்த்துடன் நடத்திய உரையாடல் ஒன்றை நினைவுகூர்ந்து `நாங்கள் நால்வரும் ஒரே ஆன்மா’ என்று அவர் கூறியதாகவும், ‘‘எங்கள் இருவருக்கும் எப்போதும் சண்டை வந்தது இல்லை’’ என்றும், ‘`அவர் முன்பே இறந்துவிட்டால் அவருடைய மகள்களை என்னுடைய மகள்கள் போல நினைத்து நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்’’ எனவும் கூறியிருக்கிறார். ஆனால், சந்த் மகள் வினுவோ, நடப்பதெல்லாம இதற்கு மாறாகவே நடந்துவருவதாகக் கூறுகிறார்.

கோபிசந்த்துக்காக வாதாடும் வழக்கறிஞரின் கூற்றுப்படி, 2013-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை ஶ்ரீசந்தின் தனிப்பட்ட சொத்திலிருந்து 26 மில்லியன் டாலர் வழக்குக்கான செலவு, அவருடைய பேரக் குழந்தைகளுக்கான நிதி என்கிற வகையில் செலவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

குடும்பத்தின் சொத்து அனைத்தும் குடும்பத் தினர் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டுமென சகோதரர்களுக்குள் ஏற்பட்ட உடன்படிக்கையிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை சமீபத்திய பிரச்னை வெளிப்படுத்துவதாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் ஶ்ரீசந்தின் பேரனான கரம் ஹிந்துஜா. ‘`எல்லோருக்கும் எல்லாம் என்கிற கொள்கை போய், எல்லாம் எங்களுக்கு என்கிற கொள்கையாகிவிட்டது. எதுவும் பொது இல்லை’’ என கரம் ஹிந்துஜா சொன்னதை கோபிசந்த் மறுத்திருக்கிறார்.

சமீபத்திய சமாதான தீர்ப்புக்குப்பிறகு ‘குடும்ப உறுப்பினர்களுக்கிடையே புதிய, பரந்த அளவிலான உடன் படிக்கை இன்னும் கையெழுத் திடப்படவில்லை’ என வினு, ஷானு தரப்பு கூறுகிறது. இதற்கு கோபிசந்த் தரப்பு, `எதிர்காலத்தில் சுமுகமான உறவு நீடிப்பதையே குடும்பத்தினர் எதிர்பார்க் கின்றனர்’ எனக் கூறியிருக்கிறது.

தாங்கள் சொத்து எதையும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், குடும்ப நிதியிலிருந்து பணம் வருவது நின்றுவிட்டதால், ஶ்ரீசந்தின் சொந்த நிதியிலிருந்து எடுத்துச் செலவு செய்ததாகவும் வினு தரப்பு தெரிவித்திருக்கிறது.

எனவே, இப்போதைக்கு ஹிந்துஜா குடும்ப உறுப்பினர் களிடையே சமாதானம் எட்டப் பட்டு இருந்தாலும், அது தற்காலிகமானதா, நிரந்தர மானதா, எல்லோருக்கும் எல்லா முமா, இல்லை எல்லாமும் ஒரு தரப்பினருக்கானதா என்பது நாளடைவில் தெரியவரும்.

குடும்பத்தினர் கட்டுப் பாட்டில் அல்லது அவர்கள் தலைமையேற்று நடத்திவரும் பெரும்பாலான தொழில் குழுமங்களில் `தனக்கு அடுத்து யார்’ என்கிற சரியான வாரிசுத் திட்டம் (succession plan) இல்லாத தும், யாருக்கு என்ன சேர வேண்டுமென தீர்மானித்து அதை ஆவணப்படுத்தாமல் விடுவதும் பெரும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதற்குப் பல உதாரணங்கள் (ரான்பாக்ஸியின் பர்வீந்தர் சிங் Vs பாய் மோகன் சிங், மஃபத்லால் குழுமத்தில் மாமியார்கள் Vs மருமகள்கள்) இருக்கின்றன.

எனவே, ஹிந்துஜா குடும்பப் பிரச்னையிலிருந்து மற்ற தொழில் குடும்பத்தினர் கற்றுக்கொள்ள வும் திருத்திக்கொள்ளவும் ஏராள மான விஷயங்கள் இருக்கின்றன. சொத்து சம்பாதிப்பதுடன், அதை சரியாகப் பிரித்துத் தரா விட்டால், குடும்ப உறுப்பினர்களிடையே நிம்மதி இருக்காது!