Published:Updated:

பங்குச் சந்தையின் கறுப்பு நாள்... ஒரே நாளில் 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இன்று வியாழனன்று (12.3.2020), வர்த்தகத்தின் தொடக்கமே பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முந்தைய வர்த்தக நாளில் 35,697 புள்ளிகளோடு நிறைவடைந்த சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து 33,958 புள்ளிகளில் தொடங்கியது.

இன்று வியாழனன்று (12.3.2020), இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு மற்றுமொரு கறுப்பு நாளாக அமைந்தது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 2,919.26 (8.18%) புள்ளிகள் பெரும் சரிவைச் சந்தித்து 32,778.14 புள்ளிகளில் நிற்கிறது. நிஃப்டி 868.25 (8.30%) புள்ளிகள் சரிந்து 9,590.15 புள்ளிகளில் நிற்கிறது. இன்றைய தினம், இந்தியப் பங்குச்சந்தைகள் மொத்தம் ரூ.11.27 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை இழந்து மிகப்பெரிய வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளன.

சென்செக்ஸ்
சென்செக்ஸ்

நிஃப்டி 9,600 புள்ளிகள் என்ற வரம்புக்கு கீழே வீழ்ந்துள்ளது. 2017 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, இதுவே மிகப்பெரிய இறக்கமாகும். அதேபோல, சென்செக்ஸ் 33,000 புள்ளிகள் என்ற வரம்புக்குக்கீழே வீழ்ந்துள்ளது. இவற்றில் 2,203 நிறுவனப் பங்குகள் இழப்பைச் சந்தித்துள்ளன. வெறும் 217 நிறுவனப்பங்குகள் மட்டுமே சிறிதளவு லாபமீட்டியுள்ளன. ஹெச்.சி.எஃப்.சி, ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், பிபி.சி.எல், வேதாந்தா, கெயில் ஆகிய முக்கிய நிறுவனப் பங்குகளே இன்று இறக்கத்தைச் சந்தித்துள்ளன.

இன்று வியாழனன்று (12.3.2020), வர்த்தகத்தின் தொடக்கமே பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முந்தைய வர்த்தக நாளில் 35,697 புள்ளிகளோடு நிறைவடைந்த சென்செக்ஸ் 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து 33,958 புள்ளிகளில் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே 3,304 புள்ளிகள் வரை இறக்கத்தைச் சந்தித்து இறுதியில் சிறிது மீண்டுவந்தது.

நிஃப்டி
நிஃப்டி
தொடர்ந்து இறக்கத்தில் பங்குச் சந்தை...

கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தற்போதுதான் உணரத் தொடங்கியுள்ளனர். இதுவரை கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,300 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. சீனாவை மையமாகக்கொண்ட தொழில்கள் அனைத்துமே தற்போது உற்பத்தி மற்றும் விநியோகச் சிக்கலை எதிர்கொண்டுவருகின்றன. புதனன்று, 26 நாடுகளுக்குப் பயணம் செய்வதை இன்னும் ஒரு மாத காலத்துக்கு அமெரிக்கா தடைசெய்துள்ளது. இந்தியாவும் பல்வேறு நாடுகளுக்கு தற்காலிகமாக விசா ரத்து செய்துள்ளது. இது சர்வதேச வர்த்தகத்தைப் பெரிதும் பாதிக்கும்.

இதேபோன்று உலகம் முழுவதுமுள்ள நாடுகள், மற்ற நாடுகளோடான தொடர்பைத் துண்டித்துக்கொண்டு முடங்கியிருக்கின்றன. இது உலகலாவிய தொழில்துறைக்கு பலத்த அடியாக உருவெடுத்துள்ளது. இதன்காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பெருமளவில் தங்களது முதலீடுகளை விலக்கிவருகிறார்கள்.

பங்குச்சந்தை வீழ்ச்சி
பங்குச்சந்தை வீழ்ச்சி
vikatan

சவுதி அரேபியா, ரஷ்யா இடையிலான கச்சா எண்ணெய் விலைக் குறைப்பு, உற்பத்தி அதிகரிப்பு யுத்தமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவையனைத்தின் தாக்கமும் இந்தியப் பங்குச்சந்தைகளில் எதிரொலிப்பதால் இத்தகைய சரிவைச் சந்தித்துள்ளது. இந்தச் சரிவு இன்னும் சிலகாலம் தொடருமென்றே பங்குச்சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு