Published:Updated:

கால்புதையும் மணல்... ஆக்ரோஷக் கடல்...

மணப்பாடு
பிரீமியம் ஸ்டோரி
மணப்பாடு

சுற்றுலா

கால்புதையும் மணல்... ஆக்ரோஷக் கடல்...

சுற்றுலா

Published:Updated:
மணப்பாடு
பிரீமியம் ஸ்டோரி
மணப்பாடு
ரிவான மணல் குன்றுகள், அவற்றின் மீது ஆங்கிலேயர்கள் கட்டியெழுப்பிய கலங்கரை விளக்கம்... போர்ச்சுக்கீசியக் கட்டடக்கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பழைமையான கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று பக்கமும் பரந்து விரிந்து கிடக்கும் கடல் எனப் பேரழகு போர்த்திக்கொண்டு விரிந்து கிடக்கிறது மணப்பாடு. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளடங்கியிருக்கிறது இந்த கிராமம். எப்போதும் இளங்காற்று தாலாட்டும் இந்த கிராமத்தில் காற்று வீசும்போது எழும் ஒலி, பாட்டிசைப்பதைப்போல இருப்பதால் `மணப்பாடு' எனப் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.
கால்புதையும் மணல்... ஆக்ரோஷக் கடல்...

`குட்டிகோவா', `சின்ன ரோமபுரி', `தென் ஆசியாவின் வெனிஸ்' என்றெல்லாம் பெயர் பெற்ற இது, இந்தியாவின் சிறந்த கடற்கரை கிராமங்களில் ஒன்றாக விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில், அமைதியானது ராமேஸ்வரம் கடல். ஆர்ப்பரிப்பது கன்னியாகுமரிக் கடல். ஆனால், இம்மணல் குன்றின் வடபுறக் கடல்பகுதி அமைதியாகவும், தென்புறக் கடல்பகுதி ஆர்ப்பரிக்கும் கடலாகவும் காட்சியளிக்கிறது. இம்மணல் குன்றின் மீது நின்று பார்த்தால் ஊரின் மொத்த அழகும் கண்களுக்கு விரிகிறது. கடலைப் பார்த்தவுடன் ஓடிச்சென்று கால் நனைக்கவும் குளிக்கவும் தோன்றும். எந்த அளவிற்கு இக்கடல் அழகாகக் காட்சியளிக்கிறதோ, அந்த அளவுக்கு ஆபத்தையும் கொண்டிருக்கிறது கடல். அவ்வப்போது எழுந்து ஆர்ப்பரிக்கும் சுழல் அலை கரைகளில் மோதித் தெரிக்கும் காட்சி கலைந்த ஓவியமாகக் காட்சிதரும்.

கால்புதையும் மணல்... ஆக்ரோஷக் கடல்...

அலைச்சறுக்கு, படகுப்போட்டி, காற்றாடி அலைச்சறுக்கு, பாய்மரக்கப்பல், நின்றுகொண்டே துடுப்பு போடுதல், பாராசூட் உள்ளிட்ட போட்டிகள் இங்கே அவ்வப்போது நடக்கின்றன. கி.பி.1540-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் பயணம் செய்த பாய்மரக் கப்பலொன்று சூறாவளியில் சிக்கியது. அதில் பயணம் செய்தவர்கள் செய்த ஜெபத்தால் சேதாரம் ஏதுமில்லாமல் அந்தக் கப்பல் பாதுகாப்பாகக் கரை ஒதுங்கியது. அதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அக்கப்பலில் பயணித்த பயணிகள் மணல் குன்றில் 10 அடி உயர சிலுவையை வைத்தனர். கிறிஸ்தவ மதப் பரப்புரைக்காக இங்கு வந்து வாழ்ந்த சவேரியாரின் குகையும் கடலோரத்தில் உள்ளது.

கால்புதையும் மணல்... ஆக்ரோஷக் கடல்...

கடலிலிருந்து 20 மீட்டர் தொலைவில் இருக்கும் இக்குகையினுள் 20 அடி ஆழக்கிணறு உள்ளது. இக்கிணற்றின் நீர் அருந்தும் அளவுக்கு நல்ல தண்ணீராக இருப்பது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இக்குகையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு, கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குடிப்பதும், தீர்த்தமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்வதும் நடக்கிறது. இக்கடற்கரையில் நிலவும் இதமான தட்பவெப்பத்தால் பறவைகள் சரணாலயமாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பரில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி மணப்பாடு மீன்பிடித் துறைமுகமாகவும் விளங்குகிறது. மணப்பாட்டில் பிடிக்கப்படும் மீன்களில் பெரும்பாலும் கருவாடாக மதிப்புக்கூட்டி விற்கப்படுகின்றன. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தால் ஒவ்வொரு வீட்டின் வாசலையும் கருவாட்டுக்காகக் காய வைக்கப்பட்டுள்ள மீன்கள் அலங்கரிக்கின்றன.

கால்புதையும் மணல்... ஆக்ரோஷக் கடல்...

கடலை ரசித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது கமகமக்கும் கருவாடு வாங்கிச் செல்வோர் உண்டு. மணப்பாட்டினை உலகறியச் செய்தது சினிமாதான். `இயற்கை', `கடல்', `நீதானே என் பொன்வசந்தம்,' `நீர்ப்பறவை', `மரியான்', `சிங்கம்' உட்பட பல படங்களில் மணப்பாடு இடம்பெற்றிருக்கிறது. பெரும்பாலும் மீனவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட கதைகளுக்கு இயக்குநர்கள் தேர்வு செய்யும் ஷூட்டிங் ஸ்பாட் மணப்பாடுதான்.

கால்புதையும் மணல்... ஆக்ரோஷக் கடல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு சூட்டிங் ஸ்பாட் `தேரிக்காடு.’ திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரும்பும் திசையெங்கும் பாலைவனம் போலக் காணப்படும் அதிசய செம்மண் நிலப்பரப்புதான் தேரிக்காடு. இத்தேரி மணல், மிருதுவாக இருப்பதால் காற்று அடிக்கும் போது பள்ளம் மேடாகவும், மேடு பள்ளமாகவும் மாறிவிடும். இத்தேரிக்காட்டிலும் `ஐயா', `தாமிரபரணி', `சிங்கம்', `அசுரன்' உள்ளிட்ட படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. ஒரு சமயம் உயரம் குறைவாகக் காணப்படுமிடம், காற்றின் போக்கினால் அடுத்த சில மணி நேரத்தில் பெரிய மணல் மேடாக மாறிவிடும். பலத்த காற்று வீசும் மே முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் இதுபோன்ற மணல் குன்றுகள் இடம்விட்டு இடம் மாறி தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் மாயாஜாலங்கள் அடிக்கடி நடக்கும்.

இந்த மாற்றத்தால் தேரிக்காட்டில் அடையாளம் கண்டுபிடித்துச் செல்வது மிகவும் சிரமம். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் முந்திரி மரங்களையே மண் மூடிவிடும். வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் சிறு கிளைகளை வைத்தே இதைக் கண்டறியமுடியும். ஆங்காங்கே புதை மணல்களையும் கொண்டுள்ளது இந்தத் தேரிக்காடு. நடந்து சென்றாலே அரை அடி ஆழத்தில் கால் புதையும். தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் இதுபோன்ற தேரிக்காடு இல்லை. பாலைவனம் போல பரந்து காணப்படுவதால் சினிமாக்காரர்கள் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகளுக்கு இந்தத் தேரிக்காட்டைத் தேர்வு செய்கிறார்கள்.