Published:Updated:

அதிகரிக்கும் கொரோனா தொற்று... சென்னையில் இயல்புச்சூழல் திரும்புவது எப்போது?

ஊரடங்கு சென்னை
ஊரடங்கு சென்னை

கொரோனா நோய் முற்றிலும் விலகாமல் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்புகளைக் கணிப்பது மிகவும் கடினம். புயலடித்துக்கொண்டிருக்கையில், புயலின் சேதாரத்தைக் கணக்கிடுவது போலத்தான் இது.

`கொரோனாவிற்குப் பின் உலகம் எப்படி இருக்கும்?' என்ற தலைப்பில்தான் அனைத்து வெபினார்களிலும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் `ஆத்து' `ஆத்து' என்று `ஆத்தி'க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் எவையெல்லாம் பலிக்கும் என யாருக்கும் தெரியாது.

சென்னையை விட்டுப் போனவர்கள் எப்போது திரும்புவார்கள்; கோயம்பேடு மார்க்கெட் மறுபடி திறக்கப்படுமா; வாடகைக்குக் குடியிருந்தவர்களில் பாதிப் பேர் திரும்பி வராவிட்டால் என்ன ஆகும்; வீட்டிலிருந்து வேலை செய்வதால் மெல்ல மெல்ல சம்பளம் குறைக்கப்படுமா; அலுவலகக் கட்டடங்கள் நிறைய காலியாகுமா; ரியல் எஸ்டேட் மேலும் வீழ்ச்சி அடையுமா; தேர்தல் தள்ளிப்போகுமா; கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படுமா; இப்படி விடையில்லாக் கேள்விகள் மக்களிடம் ஏராளம் இருக்கின்றன.

கொரோனா நோய் முற்றிலும் விலகாமல் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்புகளைக் கணிப்பது மிகவும் கடினம். புயலடித்துக்கொண்டிருக்கையில், புயலின் சேதாரத்தைக் கணக்கிடுவது போலத்தான் இது. ஆனால் சில துறைகளில் பாதிப்புகள் வலுவாக ஏற்பட்டிருப்பதால், அதைச்சார்ந்து சில போக்குகளை ஓரளவிற்கு நம்மால் கணிக்க முடியும்.

பொருளாதாரத் தடுமாற்றம்!

ஏற்கெனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. இப்போதைக்கு, நோய்க் கட்டுப்பாட்டையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் நம் அரசுக்குக் கொரோனாவிற்குப் பிறகுள்ள பெரிய சவால், வேலைகளைப் பெருக்குவதும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதும்தான். பொது முடக்கம் அடித்தள மக்களின் வாழ்வை பெரிய அளவிற்குச் சேதப்படுத்திவிட்டது. இனி தொழில் உலகை ஊக்கப்படுத்துவதும், வேலைகளைப் பெருக்குவதும், நலிந்தோர்க்கு ஊக்கத்தொகை அளிப்பதும், புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்குப் பதில் உள்ளூர்த் தொழிலாளிகளை உருவாக்குவதும் அரசு அவசரமாகச் செய்ய வேண்டியவை. பெரும் அந்நிய முதலீடுகளைக் கவர அரசு திட்டங்கள் தீட்டுவதும் இதில்தான்.

இனி ஒர்க் ஃப்ரம் ஹோம்தான் எதிர்காலமா? - தகவல் பாதுகாப்பு சவால்களை எப்படி எதிர்கொள்வது?#ExpertOpinion

அலுவலகமாக மாறும் வீடுகள்!

`வொர்க் ஃப்ரம் ஹோம்' எனும் பணிக் கலாசாரத்தை ஐ.டி. துறை, சிக்கலாகப் பார்க்காமல் ஒரு லாபமான சாத்தியக்கூறாகப் பார்த்தது. டி.சி.எஸ், கூகுள், இன்ஃபோசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் பணியாளர்களில் 75% வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளன. அலுவலகக் கட்டுமானம் மற்றும் பயணச் செலவுகளையும் கணிசமாகக் குறைப்பதுடன், பணியாளரின் முழுப் பணி நேரத்தையும் திறம்படப் பெறவல்ல தொழில் நுட்பம் உள்ளதாலும், சத்தமில்லாமல் இந்த மாற்றத்திற்குச் சம்மதம் தந்துள்ளது ஐ.டி.துறை.

Work from home (Representational Image)
Work from home (Representational Image)

பணியாளர்களுக்கும் சில நன்மைகள் இருந்தாலும், ஏற்கெனவே சம்பளக்குறைப்பு ஆரம்பித்துள்ள நிலையில் இன்னும் என்னென்ன தொழிலாளர் நலன் அனுகூலங்கள் பறிபோகுமோ என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது. இன்றைய நிலையில் வேலையில் இருந்தாலே போதும் என்ற நிலை இருப்பதால், இவை பெரிதாக விவாதிக்கப்படுவதில்லை.

இது ஐ.டி துறை வேலைகளை மட்டும் பாதிக்காது, எல்லாத் தரப்பினரையும் பாதிக்கும். எந்தெந்த வேலைகளை அலுவலகம் வராமல் செய்ய வைக்க முடியும் என்ற ஆய்வில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. உற்பத்தித் துறை போன்ற களத்தில் இறங்கி வேலை செய்வோரைத் தவிர போன், கம்ப்யூட்டர் என்று வைத்துச் செய்யும் வேலைகள் வீட்டிலிருந்து செய்ய வைக்கப்படலாம். எல்லா கம்பெனிகளும் 20% பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொன்னாலே அது மிகப்பெரும் மாறுதல்களை உண்டு செய்யும்.

ரியல் எஸ்டேட் அபாயம்!

அலுவலகம் செல்ல வேண்டாம் என்றால் நகரத்தில் வசிக்க வேண்டிய அவசியமே இல்லை. அலுவலகக் கட்டடங்களில் கால் பங்கு காலியானாலே ரியல் எஸ்டேட்டின் வணிக விலை சரியும். `ஐ.டி.ஹப்' என்று அழைக்கப்பட்ட ஓ.எம்.ஆரில் ஏற்கெனவே விற்காத அடுக்குமாடிகள் அதிகம். இனி அது மேலும் விலைச் சரிவைச் சந்திக்கும். ஐ.டி துறையை நம்பி வாழ்ந்த கால் டாக்ஸிகள், 24 மணி நேர உணவுச்சாலைகள் எனப் பல அடிபடலாம்.

Apartments
Apartments
செ.கார்த்திகேயன்

சென்னைக்கு வேலை காரணமாகப் புலம் பெயர்ந்த பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கே சென்று பணி புரிய வாய்ப்பிருக்கிறது. கம்பெனிகளும் திருச்சி, நெல்லை, சேலம், கடலூர், திண்டுக்கல் என சப்போர்ட் சென்டர்களை நிறுவி பராமரிக்கலாம். நகரமயமாக்கலின் வேகம் ஓரளவு தடைபடும் என்று நம்பலாம். எல்லாம் சரி, சென்னைதான் உலகம் என்று நம்பி சக்திக்கு மீறி அப்பார்ட்மென்ட் வாங்கி இ.எம்.ஐ கட்டி வருவோரின் நிலையை என்ன சொல்ல? வீட்டு வாடகையை ஒரே வருமானமாகக் கொண்டு வாழும் பல முதியவர்களின் நிலை என்னாகும்? டைடல் பார்க், டி.எல்.எப், மகிந்திரா சிட்டி போன்ற பெரும் வளாகங்களை நம்பி வாழும் ஷேர் ஆட்டோக்காரர்கள் எங்கு செல்வார்கள்? ஊபர், ஓலா தரும் வருமானத்தில் வாழும் எண்ணற்றோர் கதி என்னவாகும்? என்கிற கேள்விக்கும் இப்போது பதிலில்லை.

மருத்துவ வசதியும், கல்வி வசதியும்தான் வசிப்பிடத்தைத் தேர்வு செய்ய முக்கியக் காரணிகள் என்றால், தமிழ் நாட்டில் பலர் தங்கள் சொந்த ஊர்களிலேயே நிம்மதியாக வாழ முடியும். வீட்டிலிருந்து வேலை செய்ய வேளச்சேரியாக இருந்தால் என்ன வேலூராக இருந்தால் என்ன?

கொரோனாவால் முடங்கிக்கிடக்கும் ரியல் எஸ்டேட் துறை... மீள்வது எப்போது? - விரிவான அலசல்!

நாம் நன்கு கவனித்துப் பார்த்தால், பொங்கல், தீபாவளி போன்ற திருவிழாக் காலங்களில், சென்னைக் கோயம்பேட்டின் நரம்பு மண்டலம் புடைக்க ஊரே காலியாகும். அப்படித்தான் இன்று கொரோனா பயத்தினால் சென்னையை விட்டு கொத்துக் கொத்தாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இப்போது வெளியேறியவர்கள் வராவிட்டாலோ அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய இங்கிருப்போர் மெல்ல புலம் பெயர்ந்தாலோ பல விஷயங்களில் சிங்காரச் சென்னை பாதிப்புக்குள்ளாகும். இதுவரை நம்மைக் காத்துவந்த சிங்காரச் சென்னையை, இப்போதிருக்கும் மோசமான சூழலிலிருந்து காப்பாற்ற, வழி இல்லாமல் இருப்பதுதான் சோகமான விஷயம்.

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

ஆனால், இந்நிலை தொடராமல், சென்னை பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். சென்னையை விட்டுப் போனவர்கள் சீக்கிரமாகவே திரும்ப வேண்டும். சென்னையின் தொழில்களும் பிளாட்பாரக் கடைகளும் இயக்கத்துக்கு வந்து மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையாக இருக்கிறது!.

அடுத்த கட்டுரைக்கு