Published:Updated:

மோரிஸ் காயின்: கேரளாவை உலுக்கிய கிரிப்டோகரன்சி மோசடி; மக்கள் விழித்துக் கொள்வது எப்போது?

Scam (Representational Image)
News
Scam (Representational Image) ( Photo by Mikhail Nilov from Pexels )

இந்த நிறுவனத்துக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடி வரும் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 11 லட்சம் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.3,000 கோடி ரூபாய்க்கு மேல் இழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

`மோரிஸ் காயின் கிரிப்டோகரன்சி' என்ற பெயரில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய கேரளா தொழிலதிபரான கே.நிஷாத் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக மத்திய பணமோசடி தடுப்பு ஏஜென்சி கடந்த வாரம் ஓர் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த அதிரடி நடவடிக்கையால் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,200 கோடி மோசடி செய்யப்பட்டிருக்கும் திடுக்கிடும் உண்மை வெளியாகியிருக்கிறது.

`மோரிஸ் காயின் ஸ்கேம்' என்று சொல்லப்படும் இந்த மோசடியின் பின்னணி விறுவிறுப்பானதாக இருக்கிறது.

நிஷாத்.கே
நிஷாத்.கே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``கே.நிஷாத் என்பவர் எங்களை ஏமாற்றிவிட்டார்'' என மலப்புரம், கண்ணூர் மற்றும் கேரளாவின் பிற மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் புகார் கொடுத்திருக் கிறார்கள். கேரளா காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கத் துறை நிஷாத்தை விசாரணையைத் தொடங்கியது.

இந்த விசாரணையின் அடிப்படையில், கே.நிஷாத் மற்றும் அவருடைய பிசினஸ் பார்ட்னர்கள் சிலரும் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து லாபத்தைத் தருவதாக கூறி, கிட்டத்தட்ட 900 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 1,265 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருக்கும் உண்மை தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கே.நிஷாத்துக்கு சொந்தமான சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

லாங் ரிச் குளோபல், லாங் ரிச் டெக்னாலஜிஸ் மற்றும் மோரிஸ் டிரேடிங் சொல்யூஷன்ஸ் என்கிற பெயரில் நிறுவனங்களை ஆரம்பித்து, இந்நிறுவனங்களின் மூலம் முதலீட்டாளர் களிடமிருந்து `மோரிஸ் காயின் கிரிப்டோகரன்சி' என்கிற பெயரில் பணத்தை இந்தக் கும்பல் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு ரூ.1,265 கோடி என்று கணக்கிடப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள், இந்த நிறுவனத்துக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடி வரும் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 11 லட்சம் முதலீட்டாளர்கள், குறிப்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முழுவதும் பரவியுள்ள முதலீட்டாளர்கள் சுமார் ரூ.3,000 கோடி ரூபாய்க்கு மேல் இழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Scam (Representational Image)
Scam (Representational Image)
Photo by Anna Tarazevich from Pexels

இந்த நிறுவனம் கோவையில் தனது கைவரிசையைக் காட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கோவையில் இருக்கும் முதலீட்டாளர்களும் தற்போது கிரிப்டோகரன்சியில் பணம் போடுவதில் ஆர்வமாக இருக்கின்றனர். அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் கிரிப்டோகரன்சியில் பணம் போட்டு வருகின்றனர். ஆனால், கிரிப்டோகரன்சியில் போடும் பணத்துக்கு லாபம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கோவையில் எத்தனை பேர் எவ்வளவு பணத்தை இழந்தார்கள் என்கிற தகவல் இன்னும் வெளிவரமாலே இருக்கிறது.

கொரோனாவினால் உச்சம்!

கிரிப்டோகரன்சி முதலீடுகளின் செயல்பாடுகள் பல ஆண்டுகளாக இருந்தபோதும், அதன் மீது மக்களுக்கு புரிதல் இல்லாத காரணத்தால் அதில் முதலீடு செய்யாமல் ஒதுங்கியே இருந்தார்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாளில் இருந்து, கிரிப்டோகரன்சி முதலீடுகள் மக்களிடையே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. லட்சங்களில், கோடிகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். டிமாண்டு அதிரிகரித்த காரணத்தால் கிரிப்டோ கரன்சிகளின் விலை மின்னல் வேகத்தில் அதிகரித்தது. பிரபலமான பிட்காயின் விலை அபரிமிதமான ஏற்றத்தை சந்தித்தது ஒரு புறம் என்றால், டோஜ்காயின் போன்ற புதிய கிரிப்டோக்களின் மதிப்பு கடந்த ஆண்டு மட்டுமே 8,300% வரை உயர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய கிரிப்டோகாயின்களில் விலை ஏற்றம் பிட்காயினின் விலை ஏற்றத்தை விட இது அதிகமாக இருந்தது. நாளடைவில் பல கிரிப்டோகரன்சிகளின் விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்தாலும், அதன் மீதான முதலீட்டு மோகம் அப்படியே உள்ளது. இந்தியாவில் எத்தனை பேர் கிரிப்டோக்களை வைத்திருக்கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், `CoinSwitch Kuber' என்கிற நிறுவனம் 1.5 கோடிக்கும் அதிகமான கிரிப்டோ முதலீட்டாளர்களை இந்தியா கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில்தான் பிட்பாக்கெட் அடிப்பதும் அதிகமாக நடைபெறும். அதே போலத்தான், இந்தியாவில் அதிகமான மக்கள் அனைத்து வகையான கிரிப்டோக்களிலும் வர்த்தகம் செய்வதால், ஹேக்கர்களும், மோசடி பேர்வழிகளும் களமிறங்கியிருக்கிறார்கள். கே.நிஷாத் போல ஏராளமானவர்கள் கிரிப்டோ முதலீட்டில் இருந்து லாபம் பார்த்துத் தருகிறேன் என மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இன்றைய நிலையில், கிரிப்டோ முதலீடுகள் அதிகரித்துள்ள போதிலும், கிரிப்டோகரன்சிகள் அல்லது அவற்றின் அடிப்படை தொழில்நுட்பங்கள் பற்றிய உண்மையான அறிவு இந்தியாவில் குறைவாகவே உள்ளது, அதேபோன்று இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் குறைவாகவே உள்ளது.

Cryptocurrency
Cryptocurrency
Pixabay

அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளில் மோசடி என்றால், அது பற்றி முறையிடுவதற்காக, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஏதேனும் ஒரு அமைப்பை அரசே ஏற்படுத்தி வைத்துள்ளது. ஆனால், கிரிப்டோ கரன்சியில் மேற்கொள்ளப்படும் மோசடிகளுக்கு முறையிடவும், அதற்கென தீர்வு காணவும் எந்தவொரு அரசு அமைப்புகளும் இல்லை என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகையால், `கிரிப்டோ கரன்சி முதலீட்டின் மூலம் பணம் சம்பாதித்துத் தருகிறோம், நீங்கள் முதலீடு செய்யுங்கள்' என்று இனி யாரேனும் சொன்னால், அதில் இருக்கும் ரிஸ்கை புரிந்துகொள்ளாமல், அவர்கள் சொல்வதை அப்படியே நம்பி பணத்தை போடாதீர்கள்!